``யாருக்கும் அடங்காத ஆஃபிஸர் அரவிந்த் சாமி!'' - 'வணங்காமுடி' படத்தின் ஒன்லைன் சொல்கிறார் இயக்குநர் செல்வா | Director Selva explains the one line of his upcoming film 'Vanangamudi'

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (12/09/2017)

கடைசி தொடர்பு:16:34 (12/09/2017)

``யாருக்கும் அடங்காத ஆஃபிஸர் அரவிந்த் சாமி!'' - 'வணங்காமுடி' படத்தின் ஒன்லைன் சொல்கிறார் இயக்குநர் செல்வா

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவர் நடித்த 'தனி ஒருவன்' படத்தின் மூலம் தனது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டவர், போகன் படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வாவுடன் 'வணங்காமுடி' படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் கெட்டப்பில் நடிக்கும் அரவிந்த் சாமியின் 'வணங்காமுடி' படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் செல்வாவிடம் பேசினோம். இவர், 'நான் அவன் இல்லை, குரு என் ஆளு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 

vangamudi selva

''எனக்கு அரவிந்த் சாமியை நீண்ட நாள்களாகவே தெரியும். 'புதையல்' படத்திலேயே நாங்க இருவரும் வேலைப் பார்த்திருக்கிறேன். 'கடல்' படத்தின் மூலம் அரவிந்த் சாமி ரீ என்ட்ரி கொடுத்தவுடனே அவரை வைத்து இந்தப் படத்தை பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 'தனி ஒருவன்' படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி நானும் அரவிந்த் சாமியும் டிஸ்கஷன் பண்ணியிருக்கிறோம். வணங்காமுடி எனக்கு 27வது படம். 

இது கமர்ஷியலுடன் சேர்ந்த த்ரில்லர் மூவி. போலீஸ் ஆஃபிஸராக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். சிம்ரனும் இந்தப் படத்தில் போலீஸ்தான். அவர் ஐ.பி.எஸ் முடித்த ஓர் உயர் அதிகாரி போலீஸாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த் சாமியின் மனைவி ரோல் செய்திருக்கிறார் ரித்திகா சிங் . நந்திதா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். சாந்தனி மீடியாவை சேர்ந்த ஒரு பெண்ணாகப் படத்தில் வருவார். 

ஒரு போலீஸ் ஆஃபிஸரின் பத்து வருட கால வாழ்க்கை இந்தப் படத்தில் சொல்வதால், நிறைய கேரக்டர் படத்தில் இருக்கு. படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் அரவிந்த் சாமி வீட்டு சமையல்காரராக தம்பி ராமையா நடித்துள்ளார். தனி ஒருவன் படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி, தம்பி ராமையா காம்போ இந்தப் படத்தில் நன்றாகயிருக்கும். அரவிந்த்சாமி நிஜ வாழ்க்கையில் அவரது பல கஷ்டங்களைக் கடந்து கெத்தாக நிற்கக்கூடிய ஒருவர். இந்த வயதிலும் ஃபிட்டாகயிருக்கக்கூடிய ஒருவர். அதற்கு ஏற்ற மாதிரி படத்திலும் நிறைய வித்தியாசங்களுடன் நடித்திருக்கிறார்'' என்றவரிடம், ‘படத்திற்கு ஏன் 'வணங்காமுடி' என பெயர் வைத்தீர்கள் என்று கேட்டால், ‘’ஒரு அரசு வேலையில் இருப்பவர்கள் யாருடைய குரலுக்கும் இறங்காமல் வேலை செய்வது கஷ்டம். வளைந்து கொடுக்காமல் போகிறவர்கள் சிலரைத்தான் பார்க்க முடியும். அப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபிஸரைப் பற்றி பேசக்கூடிய படம் இது. நியாமாக இருக்கக்கூடிய ஒரு ஆஃபிஸர். அதனால்தான் படத்துக்கு வணங்காமுடி’’ என்று சொல்லி முடித்தார் இயக்குநர் செல்வா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்