'' ‘மதுர வீரன்’ படத்துக்கான ஜல்லிக்கட்டு காளையை அடக்கினேன்..!'' - விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்திற்குப் பிறகு அவரின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'சகாப்தம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ஹீரோவா அறிமுகமான இவர், இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் 'மதுர வீரன்' படத்தில் நடித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சண்முகபாண்டியன்.

சண்முகபாண்டியன்

''கல்லூரி முடித்தவுடன் நான் நடிக்க வந்துவிட்டேன். விஸ்காம் ஸ்டூடண்ட்தான் நான். போட்டோகிராபி எப்போதும் எனக்குப் பிடிக்கும். அதில் அதிக ஆர்வமுண்டு. காலேஜ் ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருக்கும்போது அப்பா என்னிடம் நடிக்கிறீயா என்று கேட்டார். நானும் ஓகே சொன்னேன். அப்போது நடித்த படம்தான் 'சகாப்தம்'. அதன்பிறகு நல்ல கதைக்காகக் காத்திருந்தோம். எப்போதும் ஒரு படத்தின் கதையை நான் மட்டும் கேட்டு ஓகே சொல்லமாட்டேன். வீட்டில் அப்பா, அம்மா, நான் மூவரும் அமர்ந்து இயக்குநருடன் முழு கதையும் கேட்டுதான் படத்தை ஓகே பண்ணுவோம். அப்படிதான் 'மதுர வீரன்' கதையும் நாங்கள் மூன்று பேரும் உட்கார்ந்து கேட்டோம். எங்களுக்குப் பிடித்திருந்தது அதனால் நடித்தேன்'' என்றவரிடம் 'சகாப்தம்' படத்துக்குப் பிறகு, அடுத்த படத்துக்கு ஏன் இரண்டு வருட இடைவெளி என்று கேட்டோம்.

''மதுர வீரன் படத்துக்கு முன்பாகவே ஒரு படத்தின் கதை எங்கள் மூன்று பேருக்கும் பிடித்திருந்தது. அந்தப் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு பண்ணினேன். படத்தின் பெயர் 'தமிழன் என்று சொல்'. ஆனால், அந்தப் படத்துக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அதனால்தான் தள்ளிப்போனது. கண்டிப்பாக அந்தப் படத்தை பண்ணுவேன்'' என்றவர் மேலும் தொடர்கிறார். 

''இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார். நடிக்குறது எனக்கு கஷ்டமாகவே தெரியவில்லை. அப்பா எப்போதும் சொல்வார், ’டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஃபாலோ செய்ய வேண்டும்’ என்று. கரெக்டா டைமுக்கு ஸ்பாட்டுக்குப் போக வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இதையெல்லாம் படத்தில் கரெக்டா ஃபாலோ செய்தேன். எப்போதும் என்னை இதைத்தான் செய்ய வேண்டும் என்று அப்பா கட்டாயப் படுத்தினதே கிடையாது. 

சின்ன வயதிலிருந்தே அப்பா நடித்த நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்த பையன் நான். எல்லாவிதமான கேரக்டரும் அப்பா நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். எனக்கு எப்போதும் சினிமாவில் ரோல் மாடல் அப்பாதான். அப்பாவைவிடப் பிடித்த நடிகர் யாருமில்லை. 

'மதுர வீரன்' படம் எப்படிப்பட்ட ஒரு கதைக்களம் என்பது சமீபத்தில் வெளிவந்த படத்தின் டீசரைப் பார்த்தால் நன்றாகத் தெரியும். பக்கா ஜல்லிக்கட்டு பற்றிய படம். எதனால் ஜல்லிக்கட்டு வந்தது, அதில் இருக்கும் பிரச்னைகள் எல்லாவற்றையும் இந்தப் படம் பேசும். படத்தில் ஜல்லிக்கட்டு காளையை நான் அடக்குவதுபோல் நடித்திருக்கிறேன். இதற்காகக் காளையுடன் ஒரு மாதம் பழகினேன். எப்படி காளையை அடக்குவது என்று காளை அடுக்கும் சிலருடன் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்'' என்றவரிடம், ’எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஐடியா இருக்கா’ என்றால், ’’நான் ரொம்ப சின்ன பையன். தற்போது நடிக்க மட்டும்தான் எனக்கு ஆசை. அதனால் அரசியல் பற்றி எதுவும் சொல்ல முடியாது’’ என்றார், சண்முகபாண்டியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!