’’சர்வம் சுந்தரம் படத்துக்குப் பிறகு சந்தானம் சமைக்கக் கத்துக்கிட்டார்..!’’ - சுவாரஸ்யம் சொல்லும் ஆனந்த் பால்கி | Santhanam tries to cook after the film 'server sundaram' says director Anand Balki

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (13/09/2017)

கடைசி தொடர்பு:12:56 (13/09/2017)

’’சர்வம் சுந்தரம் படத்துக்குப் பிறகு சந்தானம் சமைக்கக் கத்துக்கிட்டார்..!’’ - சுவாரஸ்யம் சொல்லும் ஆனந்த் பால்கி

'தில்லுக்கு துட்டு' படத்துக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் 'சர்வர் சுந்தரம்'. ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தின் அப்டேட்ஸ் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் ஆனந்திடம் பேசினோம்.

சர்வர் சுந்தரம்

''ஹோட்டல் மேனஜ்மென்ட் படித்துவிட்டு சினிமா எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், எனக்கு யாரும் உதவி இயக்குநர் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒரு சில படங்களில் நடிக்க மட்டும் பயன்படுத்தினார்கள். 'ஆயுத எழுத்து' படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்திருக்கிறேன். ’பாறை’ படத்தில் செகண்ட் ஹீரோவாக வருவேன். பிறகு கே.எஸ்.ரவிகுமார், மணிரத்னம் இருவரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. 

ஹோட்டல் மேனஜ்மென்ட் முடித்ததால், சமையல் கலையை மையமாக வைத்தே எனது முதல் ஸ்க்ரிப்டை ரெடி பண்ணினேன். டாக்டர், இன்ஜினீயர்  எல்லாம் எப்படி ஒரு படிப்போ அதேபோல்தான் சமையலும் ஒரு படிப்பு. அதுவும் ஒரு கலை. ஆனால், சில பேர் சாதாரணமாக சமையல்காரன் என்று சொல்லிவிடுவார்கள். என் படத்தில அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க காமெடி படமெல்லாம் இல்லை. பட், படத்துக்குத் தேவையான காமெடி இருக்கும். உணவைப் பற்றிய முதல் படமாக இது இருக்கும். 

நாகேஷின் பெரிய ரசிகன் நான். அதனால் படத்துக்கு 'சர்வர் சுந்தரம் ' என்று பெயர் வைத்தேன். படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும்போதே இந்தப் படத்தில் சந்தானம் நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாகயிருந்தேன். சினிமா போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராமனின் உதவியால் சந்தானத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தானத்திடம் கதை சொல்லும்போது அவர் 'நண்பேன்டா' படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். இரவு 2.30 மணிக்கு கேரவனில் அவரிடம் கதை சொன்னேன். அப்போது அவர் ரொம்ப களைப்பாகயிருந்தார். 

கதை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். ஒருமணி நேரம் ஆகும் என்றேன். அவர் கொஞ்சம் சீக்கிரம் சொல்ல முடியுமா என்றார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கதை சொன்னேன். அவரும் மிகவும் ஈடுபாடுடன் கதை கேட்க ஆரம்பித்து விட்டார். படத்தின் கதை அவருக்குப் பிடித்திருந்தது. 'சர்வர் சுந்தரம்' டைட்டிலுக்குத்தான் அவர் கொஞ்சம் யோசித்தார், அவரே ஏ.வி.எம் பாலுவிடம் பேசினார்.

ஆனால், படத்தின் டைட்டில் எளிதாக எங்களுக்குக் கிடைக்கவில்லை. பாலு சார் என்னிடம்  படத்தின் ஒன் லைன் எல்லாம் கேட்டுவிட்டுதான் ஓகே சொன்னார். இந்தப் படத்தில் சந்தானம் நடிப்பதற்காக ஷூட்டிங் ஆரம்பமாகும் முன்பே தக்காளி, வெங்காயம், மட்டன் இவையெல்லாம் எப்படி நறுக்க வேண்டுமென்று பிராக்டிஸ் எடுத்துக்கொண்டார் சந்தானம். படத்தின் ஷூட்டிங் முன்பு சந்தானத்துக்கு சுத்தமாக சமைக்கத் தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் நடித்த பிறகு சந்தானம் நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டார். இந்தப் படத்தில் ஒரு 15 ஷெஃப் எங்கள் யூனிட்டுடனே இருந்தார்கள். அதிலும் ஷெஃப் வெங்கடேஷ் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் செகண்ட் ஹீரோவாக நடிகர் நாகேஷின் பேரன், ஆனந்த் பாபுவின் மூத்த பையன் பிஜேஸ் நாகேஷ் நடித்திருக்கிறார். அவர் அப்படியே நாகேஷ் மாதிரியே இருப்பார். பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கும் கேரக்டருக்கான ஒரு பையனை மூன்று மாதங்களாக நானும் சந்தானமும் தேடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் நாகேஷ் ஃபேமிலியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தோன்றியது. சின்னக் கைகுழந்தையாக பிஜேஷ் நாகேஷை பார்த்திருக்கிறேன். இவ்வளவு ஒரு பெரிய பையனான வளர்ந்தப்பிறகு பார்க்கும்போது ஆச்சர்யமாகிவிட்டேன். இந்தப் படத்தில் நாகேஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நடிப்பது பெரிதும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது''  என்று சொல்லி முடித்தார் இயக்குநர் ஆனந்த் பால்கி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்