வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (13/09/2017)

கடைசி தொடர்பு:14:12 (13/09/2017)

‘‘ ‘அடி வாடி திமிரா...’ பாடலுக்காக ஜோதிகா என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார்..!’’ - உமாதேவி

’குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் திரைப்படம் 'மகளிர் மட்டும்'. ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் ரிலீஸூக்கு முன்பாகவே படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர். குறிப்பாக ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்திருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும் ’அடி வாடி திமிரா’ என்ற  டைட்டில் பாடல் பெண்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. இந்தப் பாடலை எழுதிய அனுபவம் பற்றித் தெரிந்துகொள்ள பாடலாசிரியர் உமாதேவியிடம் பேசினோம்.

உமா தேவி

''மகளிர் மட்டும் படத்தின் எல்லாப் பாடல்களும் முடிந்திருந்தன. அந்த நேரத்தில் இயக்குநர் பிரம்மா என்னிடம், ’இந்தப் படத்துக்கான டைட்டில் பாடலை நீங்கள்தான் எழுதித் தரணும். நீங்கள் சரினு சொன்னால், இப்போ படத்தின் போஸ்டர் ரெடி பண்ணிட்டு இருக்கோம். அதில் உங்கள் பெயர் போடுவதற்குதான் கேட்கிறேன்’னு சொன்னார். எனக்கு சந்தோஷமாகயிருந்தது. 

ஏனென்றால் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' படம் கல்விச் சிறையில் இருக்கும் ஒரு சமத்துவத்தைப் பேசக் கூடிய படமாகவும், அதே நேரத்தில் கார்ப்பரேட் சிஸ்டமை எதிர்க்கக்கூடிய ஒரு படமாகவும் இருந்தது. அந்த வகையில் எனக்கு பிரம்மா மீது எனக்குப் பெரிய மரியாதையிருந்தது. அதனால் அவரிடம் 'தாராளமாகப் போட்டுக்கோங்க சார், என்கிட்ட ஃபெர்மிஷன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை’ என்றேன். அவருக்கும் சந்தோஷம். 

அந்த நேரத்தில் அவர் ஹைதராபாத்தில் இருந்தார். அதனால், அவரால் என்னிடம் ஸ்டோரி சொல்ல முடியவில்லை. ’ஜிப்ரானைப் போய் நேராக ஸ்டூடியோவில் பாருங்கள்’ என்றார். அவரைப் பார்த்தேன். அதன்பிறகு ட்யூன் ரெடியாகிவிட்டது. பாடல் எழுதிக் கொடுத்தேன். அதற்கு முன்னாடி பாடலுக்கான சூழ்நிலையைச் சொன்னார். அப்படிதான் இந்தப் பாடல் உருவானது.

நான் இலக்கியம் படித்துக்கொண்டிருப்பதால், அதிலிருக்கும் கருத்துகளையும் பாட்டில் சொல்லியிருக்கிறேன். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம். ஓர் ஆண் விடுதலையைப் பேசும்போது பெண்ணைத் தனக்கான ஒருவனாகப் பார்ப்பான். அதாவது, என் மனைவி, என் மகள், என் சகோதரி, என் தாய் என்றுதான் பார்ப்பான். ஒரு பெண் சக பாலினத்தைப் பார்க்கும்போது சமமானவளாகத்தான் பார்ப்பாள். அதுதான் ஒட்டுமொத்த பாட்டில் இருப்பது'' என்றவரிடம், ‘ஜோதிகா பாட்டைக் கேட்டுவிட்டு என்ன சொன்னார்’ என்று கேட்டோம்.

''பாடல் வெளியீட்டு விழாவில்தான் ஜோதிகாவைப் பார்த்தேன். ’எனக்குப் பாட்டு ரொம்பப் பிடித்திருந்தது. ரொம்பப் பிரமாதமாகப் பண்ணிட்டீங்க மேம்’ என்று அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துவிட்டார். சூர்யா சாரும் ’பாடல் நன்றாகயிருக்கு’ என்று சொன்னார்'' என்றார் பெருமிதத்துடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்