“அம்மாவின் ஆன்மாவும் மன்னிக்காது; அனிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது!” - டி.ஆர் பிரஸ் மீட்... நிருபரின் முதல் அனுபவம்

டி.ஆர் எந்தநாளில் எது பேசினாலும், அந்தநாளில் அதுதான் வைரல் மேட்டர். அப்படி இன்று (13/9/17) காலை பத்திரிகையாளர்களை டி.ஆர் சந்திக்கவிருப்பதாக தகவல் வந்தது. அடுத்த நொடியே `பசுபதி எடுறா வண்டிய' என கிளம்பினோம்...

நீல நிற சட்டையுடன், தலையை ஆட்டிக்கொண்டே முடியை கோதியபடி என்ட்ரி கொடுத்தார் நம்ம டி.ஆர். அவர் இருக்கையில் அமர்ந்ததும் மைக்குகள் அவர் முகத்தை மறைக்க, தன் உதவியாளர்களை அழைத்து தலையணை கொண்டுவரச் சொன்னார். படுத்து தூங்கப்போறாரோ என்ற குதர்க்கமான சிந்தனை என் மண்டையில் உதிக்க, என்ன செய்யப்போகிறார் என்பதை காண காத்திருந்தேன். தலையணை வந்ததும் அதை நாற்காலியில் போட்டு அதன்மேல் ஏறி அமர்ந்தவர், `என்னை உயர்த்தியதற்கு நன்றி' என பன்ச் அடித்தார். ஆரம்பமே கிறுகிறுத்தது.

டி.ஆர்

மீண்டும் தன் தலையை கோதியபடி "ஓகே..ரெடி...ரெடி..ரெடி..." என்று தனக்குள் எனர்ஜி ஏற்றிக்கொண்டு, `டேக் போலாம் சார்` என ஆரம்பித்தார். "அனைவருக்கும் வணக்கம். என் மகன் சிம்புவின் `இது நம்ம ஆளு` படம் தெலுங்குவில் `சரஸுடு` என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. தெலுங்குவில் `பிரேமசாகரம்` படம் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. சிம்புவின் `மன்மதன்`, `வல்லவன்` படங்களும் நல்ல ஹிட் அடித்தது. அவர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி சொல்லவும், இப்போது வெளியாகும் `சரஸுடு` படத்திற்கு நல்ல ஆதரவு தர வேண்டும் என்பதற்காகவும் நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். எனக்கு நெருங்கிய பத்திரிகை நண்பர்கள் கேட்டதற்காக, நீண்ட நாள் கழித்து சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் பேச உங்கள் அனைவரையும் அழைத்திருக்கிறேன்'' என்றார். நான் தண்ணீரை குடித்துவிட்டு தயாரானேன். ’’இந்த படத்தில் சூரி கதாபாத்திரத்தில் தெலுங்குவில் சத்யம் ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு `யு` சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 15% மட்டும்தான். ஆனால், இங்கேதான்  மத்திய அரசு, மாநில அரசு என மொத்தம் 30% வரி விதிக்கிறார்கள்’’ என கன்னம் துடிக்க ஆத்திரமடைந்தார்.

’இது நம்ம ஆளு' படத்தின் பாடல்களையும் அவரே தெலுங்கில் மொழிப்பெயர்த்து எழுதியிருப்பதாக கூறினார். `காத்தாக வந்த பொண்ணு.., மாமன் வெயிட்டிங்.., கிங்காங்க போல...' என எல்லா பாட்டையும் சாம்பிளுக்கு இரண்டு வரிகள் தெலுங்கில் பாடி அதகளம் செய்தார். டேபிளில் மட்டும் மைக்குகள் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் இசையமைத்து மினி ஆர்கெஸ்ட்ராவே நடத்தியிருப்பார். சினிமாவைத் தொடர்ந்து அரசியல் பேச ஆரம்பித்தவர், நிருபர்களை கேள்வி கேட்ககூட கேப் விடாமல் அவரே பேசிக்கொண்டு இருந்தார். ரைமிங் மட்டும் மிஸ்ஸிங்.

'அதிமுக பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களை பார்த்து மனசு பொறுக்கலை. அனிதா இறந்த அன்று ஆந்திராவுல இருந்தேன். அனிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கவும்தான் உங்களை அழைத்தேன். காவிரி விவகாரம், ஜிஎஸ்டி, நீட் ஆகியவற்றில் மத்திய அரசை எதிர்த்து போராடிய அம்மா எங்கே... இன்று `நீட்' பற்றி நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்ட இவர்கள் எங்கே..?` என கோபம் கொப்பளிக்க பேசிக்கொண்டிருந்தார். நிருபர்களோ, இவர் நம்மளை கேள்விகேட்க விடுவாரா, மாட்டாரா?' என பாவமாக அமர்ந்திருந்தனர். மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சி திலகம், புகழ்பெற்ற வள்ளல் என பல அடைமொழிகளைச் சொல்லி எம்ஜிஆருக்கு இன்ட்ரோ கொடுத்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தவர், "மக்கள் ஓட்டுப்போட்டது அம்மாவிற்காக, இவர்கள் அம்மா பெயரைச் சொல்லி நடத்துகின்ற ஆட்சி, அம்மா ஆட்சி அல்ல... சும்மா ஆட்சி... இது பொம்மை அது தான் உண்மை` என்று ரைமிங்கில் கதகளி ஆட ஆரம்பித்தார். `இந்தா ஆரம்பிச்சுட்டார்ல...' என்ற சத்தம் எங்கிருந்தோ வந்தது.

"இவர்களின் முடிவினால்தான் அனிதா மரணம் நிகழ்ந்தது. இவர்களை அம்மா ஆன்மாவும் மன்னிக்காது, அனிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது. ஏன் இந்த கைநாட்டு; உன் உரிமையை நிலைநாட்டு. கொடுத்தா போதுமா பணம், உயிர் பிழைக்குமா அந்த பிணம், தெரியுமா அதோட ரணம். இன்று பாடுகிறாரே ஸ்டாலின் மேடையிலே மங்களம்; கண்ணீர் வெடிக்கிறது கதிரா மங்கலம். மனசு வேகுது...' என ரைமிங்காக நொந்துக்கொண்டார். "செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை என்ன நடிப்பு நடிச்சீங்க..! சிங்க தமிழன், சிம்மக்குரலோன், நடிகர் திலகம் சிவாஜியே தோத்துருவாரு உங்க நடிப்புல. இதற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள் யாரு?'' என்று கோவத்தோடு கேள்விகளை சரமாரியாக முன்வைத்தார்.

''எம்.ஜி.ஆரை எதிர்த்து போராடினேன், கலைஞரை எதிர்த்து போராடினேன், ஜெயலலிதாவை எதிர்த்து போராடினேன். அது உங்களுக்கு தெரியுமா? நான் முதலமைச்சர் ஆகணும்னு அரசியலுக்கு வரலை. பொன்னாடை, பூமாலை எதிர்ப்பார்த்து அரசியலுக்கு வரலை. தமிழ்நாட்டில் பொய்க்குத்தான் பொன்னாடையும் பூமாலையும். உண்மை ஓரங்கட்டப்படுகிறது'' என்றார் உணர்ச்சி பொங்க. கடைசிவரை நம்மை பேசவே விடமாட்டாரோ என கண்ணைக் கட்டியது. "ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நிரந்தர பொதுசெயலாளர் அவர்தான் என்ற ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்களே அதற்கு அவர்களை பாராட்டலாம்'' என இரண்டாவது இன்னிங்ஸ் வேறு ஆரம்பித்தார். 

பத்திரிகையாளர்

கடைசியாக கேள்வி கேட்க கொஞ்சம் கேப் கிடைத்தது. 'மத்திய அரசிடம் மாநில அரசு ஏன் பயப்படுகிறது' என்ற கேள்விக்கு ''மோடி அரசை நான் குறை சொல்லலை. இவங்ககிட்ட இருக்கு ஏதோ பிரச்னை, அதுனால பண்றாங்க மத்திய அரசுக்கு அர்ச்சனை. அது ஏடிஎம்கே வா அல்லது மோடிஎம்கேவானு எனக்கு தெரியலை' என்றார். தி.மு.க என்ற வார்த்தையைக் கேட்டதும் ''எதிர்கட்சியான திமுகவினால் ஏன் வலுவாக போராட முடியலை. காரணம், 2ஜி வழக்கு. அப்படி இப்படினு நிறையா இருக்கு'' என்றார் ஆக்ரோஷமாக.

''பீப் பாடல் வெளியானபோது எதிர்த்து போராடின மாதர் சங்கமும் மகளிர் அணியும் அனிதா இறப்பிற்கு குரல் கொடுக்க வேண்டியதுதானே. இப்போ எங்கே போனீங்க ?'' என கர்ஜித்தவரிடம், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, ''ரஜினி, கமல் இருவரும் என் நண்பர்கள். `விஸ்வரூபம்` பிரச்னை வந்த பிறகு, என் சார்பாக என் மகனை அவருக்கு ஆதரவாக அனுப்பினேன். அதே போல், `தலைவா` படம் வெளியாவதில் பிரச்னை வந்தபோது, விஜய்க்கு ஆதரவாக சிம்பு, 'உங்கக்கூட இருக்கிறேன்' என்று ட்விட்டரில் பதிவு போட்டான். அதனால், `வாலு` படத்திற்கு பிரச்னை வந்தபோது, விஜய் எங்களுக்கு ஆதரவு தந்தாரு. அதனால், `புலி` படத்திற்கு வந்த பிரச்னையின்போது, நான் விஜய் உடன் ஆதரவாக நின்றேன். அதனால்தான் `புலி` பட விழாவில் அப்படி பேசினேன்'' கேட்டதற்கு பதில் சொல்லாமல் இடியாப்பம் சுற்ற ஆரம்பித்தார். 

'சார்.. கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லலையே' என்றதற்கு, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்" என ஒருவரியில் முடித்தார். 'மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது உண்மைதானா?' என்ற கேள்விக்கு, `மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்ததும் என்னிடம் சிம்பு சொன்னார். மணிரத்னம் நல்ல மனிதர், வித்தியாசமான சிந்தனையாளர். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களை எல்லாம் இயக்கி இருக்கிறார். அவரையும் குருவாக ஏற்றுக்கொண்டு உனக்கு பிடித்திருந்தால் படம் பண்ணுனு சொன்னேன்...` என கொஞ்சம் சாந்தமானவர், `மதியம் ஹைதராபாத்துக்கு கிளம்பணும். இன்னொரு நாள் சந்திப்போம். நன்றி` என சொல்லிவிட்டு, தலையை மீண்டும் கோதிவிட்டு கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!