“தயாரிப்பாளர்களை அழிப்பது அல்ல, வளர்ப்பதுதான் எங்கள் நோக்கம்!” - ஆர்.கே.செல்வமணி | Our motive is to support producer says - R.K.Selvamani

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (15/09/2017)

கடைசி தொடர்பு:14:46 (15/09/2017)

“தயாரிப்பாளர்களை அழிப்பது அல்ல, வளர்ப்பதுதான் எங்கள் நோக்கம்!” - ஆர்.கே.செல்வமணி

தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சி அமைப்புக்கு இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம் விதித்த சில நிபந்தனைகளைப் ஃபெப்சி அமைப்பு ஏற்றுள்ளது. 

ஆர்.கே.செல்வமணி

மதுரையில் நடந்த `பில்லா பாண்டி' படப்பிடிப்பை சில தொழிலாளர்கள் நிறுத்த, தயாரிப்பாளர் தரப்புக்கும் ஃபெப்சி அமைப்பிற்கும் இடையே மோதல் உருவானது. ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்த டெக்னீஷியன் டீம் 'பில்லா பாண்டி ' படப்பிடிப்பில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அந்த வாரம் தொழிலாளர்களுக்கு டபுள் பேட்டா கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்த இருவர் பயணத்துக்கான பேட்டாவில் 30 கி.மீட்டருக்கும் டபுள் பேட்டா கேட்டனர். டபுள் பேட்டா கொடுக்க முடியாது எனத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதனால், மதுரையில் நடந்த  அப்படத்தின் படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது. இரு சங்கங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு முதல் காரணம் இது.

இப்பிரச்னை குறித்து விவாதிக்க, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஃபெப்சி அமைப்பின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழவே, 'இனி ஃபெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது' என அறிவித்தார், நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால். 'இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்' எனப் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டார். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கவே, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து முழு வேலை நிறுத்தத்தை அறிவித்துச் செயல்படுத்தியது.

ஆயிரத்திற்கு அதிகமான ஃபெப்சி தொழிலாளர்கள் ரஜினியின் 'காலா' படத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். திடீரென அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம், அவர்களுக்குப் பதிலாக உடனடியாக ஆயிரம் தொழிலாளர்களைத் திரட்ட முடியாத சூழல் போன்ற பல்வேறு காரணங்களால், 15 கோடி செலவில் அரங்குகள் அமைத்து ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த 'காலா' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. தவிர, விஜய் நடிக்கும் 'மெர்சல்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்'  உள்ளிட்ட 40-க்கும் அதிகமான படங்கள் இந்த வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டன. விஷாலின் 'துப்பறிவாளன்' மட்டுமே ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, 'ஃபெப்சி அமைப்பில் 23,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதின் பேரில், ஃபெப்சி அமைப்பின் போராட்டம் கைவிடப்பட்டதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

'பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய டெக்னீஷியன் யூனியன் நிர்வாகிகளிடம் இருந்து மன்னிப்புக் கடிதமும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட பிறகும் சமாதானம் ஏற்படாத காரணத்தால், ஃபெப்சி அமைப்பில் இருந்து டெக்னீஷியன் அமைப்பை நீக்கினார்கள். இதற்குப் பிறகும் 'திரைப்படப் படப்பிடிப்பில் வேலை செய்ய ஆட்கள் தேவை' என்ற அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட்டது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த அறிவிப்பைப் பார்த்துக் கொந்தளித்த ஃபெப்சி அமைப்பு, பிறகுதான் உடனடியாக வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஃபெப்சியின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்தார்கள். இப்படிப் பிரச்னை மேல் பிரச்னையாகத் தொடர்ந்துகொண்டிருந்த இந்த விவகாரம்தான், இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

FEFSI

அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.செல்வமணி, ''தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையே புரிதலுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு விட்டதால், இன்று முதல் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நல்ல முறையில் நடக்கவும் சம்மேளன  நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கம், சங்கத் தலைவர் விஷால் அனைவரும் ஒத்துழைத்தார்கள். அனைவருக்கும் ஃபெப்சி சார்பாக நன்றி. பிரச்னைக்கு முதல் காரணமாக இருந்தது 'வேலைக்குச் சம்பளம் கொடுப்போம். ஆனால், பயணப் படி கிடையாது' என்று சொன்னதுதான். அதைப் பேசி முடித்து, 'வேலை செய்யும் போது கொடுக்கும் சம்பளத்தில் பாதியை பயணப் படியாகக் கொடுக்கவேண்டும்' என்று பேசிமுடிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைக்குக் காரணமாக இருந்த டெக்னீஷியன் யூனியனை நீக்கியுள்ளோம். அவர்களும் தன்னிச்சையாகச் செயல்படுகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் உரிமையை நாங்கள் பறிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். சில நேரங்களில், காலமாற்றத்துக்கு ஏற்ப, தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் யுகத்திற்குத் தகுந்தபடி வேலைசெய்யும் மனநிலையில் டெக்னீஷியன் தொழிலாளர்கள் இல்லை. அது தவறு. அதையெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். எங்களது புதிய ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இனி வராது. தவிர, சிறிய பட்ஜெட் படங்களுக்கு சில சலுகைகளைக் கொடுக்கிறோம். அதிக வேலையாட்கள் தேவைப்படாது என்றால் சரி... ஆனால், வெளி ஆட்களை வைத்து வேலை பார்க்கக்கூடாது. சிறிய படங்களுக்கு ஞாயிறுகளில் ஷூட்டிங் நடத்தினால், பாதி சம்பளம் கொடுத்தால் போதும். அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாங்கள் செய்து தருவோம். ஏனெனில், தயாரிப்பாளர்களை நசுக்கவேண்டும் என்பது எங்கள் சங்கத்தின் நோக்கமல்ல... அவர்களை வளர்ப்பதுதான் எங்கள் நோக்கம்!'' எனத் தெரிவித்திருக்கிறார், ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close