வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (18/09/2017)

கடைசி தொடர்பு:13:42 (18/09/2018)

கதிரேசனையும் மணிமேகலையும் ’எங்கேயும் எப்போதும்’ மறக்க முடியுமா? #7YearsOfEngeyumEppothum

அசுர வேகத்தில் பறக்கும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யாத ஆள்களோ... அப்படிப்பட்ட பேருந்துகள் விபத்துக்குள்ளாவதைச் செய்தியாகப் பார்க்காதவர்களோ, படிக்காதவர்களோ  இருக்க முடியாது. தினம்தோறும் பத்திரிகைகளில் சாலை விபத்துகள் பற்றியச் செய்திகளைப் படிக்கிறோம், வருத்தப்படுகிறோம். `ஏன் இந்த வேகம்... எதற்காக இந்தச் சம்பவம்...?' என்றெல்லாம் விசனப்படுகிறோம். ஆனால் விபத்தில்இறந்துபோனவர்களின் குடும்பம், வாழ்க்கை, அவர்களுடைய கனவுகள் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? இயக்குநர் சரவணன் அப்படி யோசித்ததினால் உருவானதுதான் 2011-ம் ஆண்டு வெளியான `எங்கேயும் எப்போதும்' திரைப்படம். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் இந்தப் படம் திரையிடப்பட்டு, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியோடு ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் ‘ஏன் இத்தனை விபத்துகள்’ என்று இந்தப் படம் எழுப்பிய கேள்விகள் மட்டும் பதிலின்றி தொடர்கின்றன.

எங்கேயும் எப்போதும்

இரு பேருந்துகளின் விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளை கலைத்துப்போடுகிறது என்பதுதான் ஒன்லைன். இது, சமூக விழிப்புஉணர்வுமிக்க திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய செய்தியான `அதிவேகம் ஆபத்து’ என்ற செய்தியைத் திரைப்படமாக்கவே பெரும் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலை சரவணனுக்குத் தந்தது, சுவாரஸ்யமான திரைக்கதையும் கதைக்கு முக்கியமான பாத்திரங்களான ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யாயும் தன் குருவும் படத்தின் தயாரப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸும்தான். 

திருச்சியிலிருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பயணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதல், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதல், புதிதாக திருமணமான ப்ரியமான ஜோடியின் பிரியமுடியாத காதல், அந்தச் சுட்டிக் குழந்தை, அரசூர் ஊர் தலைவர், அனன்யாவின் அன்பான அக்கா,... எங்கேயும் எப்போதும் இவர்களுடன் நாமும் படம் முழுவதும் பயணிப்பது போன்ற இயல்பான உணர்வை தந்ததுதான் படத்தின் மிகப்பெரிய பலம். 

சென்னைக்குப் புதிதாக வரும் பெண்ணின் சந்தேகக் கண்ணோட்டம், லேத் பட்டறையில் வேலைபார்ப்போரின் பேச்சுவழக்கு, கம்யூனிஸ்ட்களின் பொதுக்கூட்டம்... இப்படி காட்டப்படும் காட்சிகள் ஒவ்வொன்றும் போகிறபோக்கில்ஏதோ ஒன்றை நமக்குள் விதைத்துச்சென்றுகொண்டே செல்லும். மேலும், இதன் சிறப்பே, கதாபாத்திரங்களின் உருவாக்கம்தான். சென்னையில் ஒரு ஜோடி, திருச்சியில் மற்றொரு ஜோடி. இந்த இரண்டு காதல்களுமே மனதில் ஈரமாகப் பதிந்துவிடுவதுதான் சிறப்பு. இதில்ஒன்று மெலடி என்றால், மற்றொன்று சரவெடி.

ஜெய் தன் முந்தையப் படங்களைவிட இயல்பான நடிப்பில் இதில் தனித்து தெரிவார். மற்றொரு ஹீரோ சர்வானந்த், சென்னை இளைஞனாகவே இருப்பார். ஜெய்யை மடக்கி மிரட்டி காதலிக்க வைக்கும் அஞ்சலி, எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக வெளிப்படுத்தும் அனன்யா... நடிகர், நடிகையர் தேர்வு அவ்வளவு கச்சிதம். இரண்டு காதல்கள் இருந்தும் வழக்கமான காதல் வசனங்கள் ஒன்றுகூட இதில் இல்லை என்பதும் இதில் மிகப்பெரிய ஆறுதல், ஆச்சர்யம்.

முதல் காட்சியிலேயே இரு பேருந்துகளும் விபத்துக்குள்ளாவதைத் காட்டிவிடுவதால் அடிமனதில் பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது. ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும்தான். ஓர் உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒருசில நிமிட அவசரத்தால் ஏற்படும் விபத்து சிலரின் உயிரை குடித்து பலரை வாழ்நாள் முழுதும் பாதிக்கிறது என்பதை இயல்பான கதைகளுடன் சொன்ன  இந்தப் படத்துக்கு எங்கேயும் எப்போதும் ஆயிரமாயிரம் லைக்ஸ்.

‘சாலை விதிகளை மதிப்போம்; விபத்தினை தவிர்ப்போம்’ என்று பல ஆண்டுகளாக அரசு செய்யும் விளம்பரத்தால் ஏற்படாத விழிப்புஉணர்வு இந்த ஒற்றைப் படத்தால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை. ஆனால் ஒவ்வொரு பயணத்திலும் இந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை நினைவில் கொள்ளவேண்டும் என்பதே இந்தப்படம் உணர்த்தும் பாடம்.


டிரெண்டிங் @ விகடன்