“இது ஆசிரியர் - மாணவர் உறவு!” - மம்முட்டியின் ‘பேரன்பு’ கதை சொல்லும் ராம் #VikatanExclusive

'தரமணி' படம் வெளியானவுடன் நல்ல வரவேற்பையும், சில எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது. முகநூலில் பல கருத்துகள்  அதுபற்றி பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்தப் படம் வெளியான கையோடு பேரன்பு படத்தின் வேலைகளில் மூழ்கிவிட்டார் இயக்குநர் ராம். தரமணியின் ரெஸ்பான்ஸ் பற்றியும், பேரன்பு பற்றியும், அடுத்த படம் பற்றியும் அவருடன் பேசியதிலிருந்து.... 

ராம்

"`தரமணி'க்கான பாசிட்டிவ், நெகட்டிவ்னு கலவையான ரெஸ்பான்ஸை எப்படி எடுத்துக்கிட்டீங்க?"

`` `தரமணி'க்கான ரெஸ்பான்ஸை நிறைய விதமாப் பிரிக்கலாம். ஃபேஸ்புக்ல, விமர்சகர்கள் மத்தியில, பத்திரிகைகள்லனு எல்லோரும் நிறைய விஷயங்களைக் கவனிச்சுச் சொல்லியிருந்தாங்க. அது மட்டுமல்லாம அது ஒரு விவாதத்தை உருவாக்குச்சு. அதைத்தான் ஒரு சினிமா செய்யணும். அதுவும் தரமணிக்காக எழுந்த விவாதம் படத்தை நாலு வாரம் வரை உயிர்ப்போடு வைத்திருந்தது. படத்திற்கு இடையில் நான் நரேட் பண்ணினது பற்றி சில எதிர்மறைக் கருத்துகள் வந்தன. ஆனா, ஆடியன்ஸுக்கு அந்த மாதிரியான கதை சொல்லல் பிடிச்சு இருந்தது. படத்தினுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாத்தான் நான் பார்க்கிறேன். எப்பவுமே ஒரு வழக்கமான விதத்தை மாற்றும் போது இந்த மாதிரி கருத்துகள் வரத்தான் செய்யும். சிலருக்குப் பிடிக்கலைனா, சரி பிடிக்கலைனுதான் எடுத்துக்கணும். அதை நாம குற்றம் சொல்ல முடியாது. அது புதிய பாணியும் கிடையாது, அப்படியான கதை சொல்லலும் சினிமாவில் ஒரு ஜானர்தான். படத்தின் கன்டென்ட் பற்றி நிறையப் பேசினாங்க. ஆனா, அதனுடைய திரை மொழி அந்த அளவுக்குக் கவனிக்கப்படலை.’’ 

taramani

"படத்தில் சில விஷயங்கள் தவறாப் புரிஞ்சுகிட்டாங்கனு நினைக்கறீங்களா?"

’’அது இந்தப் படம்னு இல்லை. பொதுவா என்னுடைய மூணு படத்திலுமே இந்த மிஸ்கம்யூனிகேஷன் நடக்குது. சில நேரம் அது சொல்லப்பட்ட விதத்தில் தப்பு இருக்கலாம். அதுவே சில சமயம் அந்த மிஸ்கம்யூனிகேஷனுக்கு,  பார்க்கும் ஆடியன்ஸும் காரணமா இருக்கலாம்ல. ஒரு படத்தை எல்லோரும் ஒரே மாதிரி புரிஞ்சுக்கறதில்லைங்கறதுதான் உண்மை. அதனால அதை என்ன செய்ய முடியும்னு தெரியல.’’ 

"எப்போதும் உங்களுடைய படங்கள் மெய்ன்ஸ்ட்ரீம் சினிமால இருந்து விலகி இருக்குதே. இப்படிப் பண்ணணும்ங்கறதுதான் உங்களுடைய ஸ்டைல்னு நினைக்கறீங்களா?"

’’இல்ல `தரமணி'ய நான் மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாவாதான் நினைச்சு எடுத்தேன். படம் ஓடுச்சுனா மெய்ன்ஸ்ட்ரீம், ஓடலைனா இல்லனு நினைச்சிருந்தேன். `தரமணி' ஓடிடுச்சு அதனால அது ஒரு மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாதான். நாம ஒன்னும் ஆர்ட்ஸ்கூல் படமெல்லாம் எடுக்கல. நம்மளுக்கு எது வருதோ அந்த வகையில் ஒரு மெய்ன்ஸ்ட்ரீம் படம்தான் எடுக்கறோம் அவ்வளோதான்.’’

Mammootty

" `பேரன்பு' எப்போ பார்க்கலாம்?"

இப்போ படத்துக்கான பின்னணி இசை வேலைகள் போயிட்டிருக்கின்றன. இன்னும் ஒரு 20 நாள்ல படம் முடிஞ்சு சென்சாருக்குப் போயிடும். இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்தில் ரிலீஸ் ஆகிடும்னு நினைக்கறேன். "ஒரு தனிமனிதன் பேரன்பு மிக்கவனாக எப்படி மாறுகிறான்" இதுதான் படத்துடைய லைன். படத்தில் மம்முட்டி சாருடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமா எப்பவும் இருக்கும். அவர் ஒரு பெரிய ஸ்டார், அத்தனை படங்கள் பண்ணியிருக்காருங்கறதைத் தாண்டி அவர் மிகப் பிரமாதமான நடிகர். நடிப்பை ஒரு கலையா அவர்கிட்ட இருந்து கத்துக்க முடியும். அவர் கூட வேலை செய்த அனுபவம் ஒரு ஆசிரியர் மாணவர் உறவாகத்தான் இருந்தது. அவர் நடிப்பிலிருந்து நிறைய நல்ல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். அடுத்த முறை நான் நடிக்கும் போதும், இயக்கும் போதும் அவருடைய பாதிப்பு என்கிட்ட இருந்து வெளிப்படும்னு நினைக்கறேன்.''

"அடுத்த படத்தில் விக்ரமுடன் இணைவதாகத் தகவல் வந்ததே?"

''அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அடுத்து என்ன மாதிரி படம் பண்ணப் போறேன்னு கூட யோசிக்கலை. இப்போதைக்குப் `பேரன்பு' பட வேலைகள்தான் போயிட்டிருக்கு. அந்த வேலைகள்லயே நேரம் சரியா இருக்குது. படம் ரிலீஸானதுக்குப் பிறகுதான் அடுத்த படம் பற்றி முடிவு பண்ணணும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!