Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆடியன்ஸுக்கு 36% புரிஞ்சா போதும்!” - ‘துப்பறிவாளன்’ விமர்சனங்களுக்கு மிஷ்கினின் பதில் #VikatanExclusive

ற்ற இயக்குநர்களின் படங்களில் காம்ப்ரமைஸ் இருக்கலாம். இயக்குநர் மிஷ்கினின் படம், மிஷ்கின் படம் மட்டும்தான். ஏற்கெனவே வெளியான மிஷ்கினின் படங்களில் உள்ள சில விஷயங்கள், சமீபத்தில் வெளியான 'துப்பறிவாளன்' படத்திலும் தொடர்கின்றன. 
இப்படம் குறித்த நேரெதிர் விமர்சனங்களுக்கு மிஷ்கினின் பதில் இது.

“கதாபாத்திரங்கள் சிலையாக நிற்பது, ஹீரோ கடகடவெனப் பேசுவது… இதுதான் மிஷ்கின் பாணி. இந்த கிளிஷே காட்சிகள் இந்தப் படத்திலும் தொடர்வது ஏன்?”

“நீங்க கிளிஷேனு சொல்றதுதான், என் படத்தோட ஸ்டைல். என்னோட அடையாளம். தவிர, நீங்கதான் அதைப் பேசிக்கிட்டே இருப்பீங்க. படம் பார்க்கிற மக்களுக்கு அதெல்லாம் தெரியாது, தேவையும் இல்லை. மக்கள் இதை ஒரு நல்ல படமா பார்க்கிறாங்க. அதனால, இந்தக் கேள்விகளைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை!”

“ஹீரோயின் கையில் ஹீரோ துடைப்பக்கட்டையைக் கொடுத்து உள்ளே தள்கிறார். ஹீரோயினுக்குக் காதல் வருகிறது… இந்தக் காட்சியில் நீங்கள் சொல்வது என்ன?”

“இந்தக் காட்சி மூலமா நான் சொல்ல வர்றது… அந்தப் பொண்ணுக்கு ஹீரோ நல்ல வேலையைக் கொடுக்கிறார். ‘பிக்பாக்கெட் அடித்துப் பிழைக்கிறதுக்குப் பதிலா, வீட்டைச்  சுத்தம் பண்ணி நேர்மையான தொழில் பாரு’ இதுதான் ஹீரோ சொல்ல வர்ற விஷயம். ஏற்கெனவே ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘இங்கே வேலைக்குப் போ’னு ஹீரோ சொல்வார். ஆனா, அதுக்குப் பிறகும் ஹீரோயின் பிக்பாக்கெட் அடிப்பாங்க. பிக்பாக்கெட் அடிச்சுப் பழகின பொண்ணு, அதை விட முடியலை. அதை உடைக்கிறதுக்குத்தான் ஹீரோ ஒரு நேர்மையான தொழிலை ஏற்படுத்திக் கொடுக்கிறார். பிக்பாக்கெட் அடிக்கிறதுக்கு, இந்தத் தொழில் எவ்வளவோ மேல்தானே? தவிர, ஹீரோவுக்கு மின்னல் மாதிரி தோன்றும் இந்த ஐடியாதான், பிக்பாக்கெட் தொழிலிலிருந்து அந்தப் பொண்ணு விடுதலை ஆகிறாள்.”

மிஷ்கின் - விஷால்

“ஸ்டைலான மேக்கிங் நல்லா இருக்கு. ஆனா, மிஷ்கினின் திரைக்கதை அடர்த்தி இந்தப் படத்துல குறைஞ்சிருக்கிறதா ஒரு விமர்சனம்… உங்க பதில் என்ன?”

“ரொம்பக் கஷ்டப்பட்டு 20 வருடம் திரைக்கதை பத்திப் படிச்சிருக்கேன், படிச்சுக்கிட்டு இருக்கேன். பல திரைக்கதைகள் எழுதியிருக்கேன். என் திரைக்கதைகள் சில திரைப்படக் கல்லூரிகளில் பாடமா இருக்கு. விமர்சனம் பண்றவங்களுக்குத் திரைக்கதை பத்தித் தெரியாது. அறிவு ஜீவிகளா நினைச்சுக்கிட்டுப் பேசிக்கிட்டு இருப்பாங்க. பல நூறு திரைக்கதைகளைப் படிச்சுட்டுதான், நான் என் படத்துக்குத் திரைக்கதை அமைக்கிறேன். விமர்சனம் பண்றவங்க வாயில வர்றதைப் பேசட்டும். நான் எதையும் காதுல போட்டுக்கமாட்டேன். திரைக்கதை பெட்டரா இல்லைனு சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கு. யாரும் கருத்துச் சொல்லலாம். ஐந்து வயதுக் குழந்தை ஒரு படத்தைப் பார்த்துட்டு, ‘தி…ரை…க்…க…தை நல்லா இல்ல’னு எழுதுனா, காமெடியாதானே இருக்கும். நான் அப்படித்தான் எடுத்துக்குறேன்!”

“படத்துல வர்ற பைக் சேஸிங் காட்சி, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துல வந்த சேஸிங்கை ஞாபகப்படுத்துது…”

“நான் எழுதும்போது எனக்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ஞாபகத்துக்கு வரலை. கதையோட அந்தச் சூழலுக்கு பைக் சேஸிங்தான் சரியா இருந்தது. ரெண்டுபேர் தப்பிச்சுப் போகணும். அது பைக்கா இருந்தா என்ன, காரா இருந்தா என்ன… ஆனா, எஸ்கேப் ஆகுறதுக்குப் பைக்தான் சரியான வாகனமா இருக்கும். சந்து பொந்துல புகுந்து போயிடலாம். ஸோ, இது ஒரு பேஸிக் லாஜிக். ஸோ, படம் பார்க்கும்போது முதல்ல ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திலிருந்து வெளியே வந்துட்டு, இந்தக் காட்சியைப் பாருங்க, கதைக்குப் பொருத்தமா இருக்கும்!”

“ஹீரோயின்கிட்ட ரொம்பக் கடினமா நடந்துக்கிறார் ஹீரோ. தவிர, படத்துல இடம்பெற்ற மூன்று பெண் கேரக்டர்களும் ஏதோ ஒரு வகையில இறந்து போறாங்க. அவங்களோட கேரக்டர்களுக்கு நீங்க சொல்ற நியாயம் என்ன?”

“அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு என்னென்ன நியாயமோ, அதையெல்லாம் நான் செஞ்சிருக்கேன். அது கதை ஓட்டத்துல நடக்குற விஷயங்கள். அவ்ளோதான். தவிர, ஹீரோயின்கிட்ட ஹீரோ ஹார்ஷா நடந்துக்கலை. ஹீரோவுக்கு இந்தப் படத்துல மிக முக்கியமான அன்பு, ஹீரோயின்தான். அவன் அன்பு கொஞ்சம் கரடுமுரடாதான் இருக்கும். அதுக்காக அவன் கொடூரமானவன் இல்லை. 50 லட்சம் ரூபாய் கேஸை விட்டுட்டு, ஒரு சின்னப் பையனோட நாய்க்குட்டி இறந்ததைக் கண்டுபிடிக்க ஹீரோ சம்மதிக்கிறான். தவிர, ஹீரோயினைக் கட்டிப்பிடிக்கிறதும், முத்தம் கொடுக்கிறதும்தான் அன்புன்னா, அதை நான் வெறுக்கத்தான் செய்வேன். சாமானிய ரசிகர்கள் அந்தக் காட்சியை ரசிக்கிறாங்க. காரணம், ஹீரோவோட முரட்டுத்தனத்துல இருக்கிற குழந்தைத்தனத்தை அவங்க ரசிக்கிறாங்க.

தவிர, படத்துல இருக்கிறதுலேயே பெரிய நியாயம், பாக்யராஜ் சார் தன் மனைவியைக் கொலை பண்றது. ஒரு கொலைகாரன், அவனோட மனைவி… பலநாள்களா படுத்த படுக்கையிலேயே இருக்காங்க. அவங்களைக் கூடவே இருந்து பார்த்துக்கிட்ட அவர், கத்தியால குத்தப்பட்டு சாகப்போறார். அவர் இல்லைனா, அவரோட மனைவி படுத்த படுக்கையாவே இருந்து, இறந்து, நாறிப்போய்… நாதி இல்லாம கெடப்பாங்க. அவங்களுக்கு ஒரு விடுதலை தேவை. அதனால, தன்னோட கூட்டிப்போறார். அது ஒரு கருணைக் கொலை. அதுதான், அவரோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கிற நியாயம். இதை நான் சொல்ற நியாயமாகவோ, நீங்க நினைச்சுக்கிற நியாயமாகவோ பார்த்து, சமூக ஆராய்ச்சியெல்லாம் பண்ணக் கூடாது. அது அந்தக் கேரக்டருக்கான நியாயம், அது ஒரு மனிதப் பரிதாபம். அப்படித்தான் பார்க்கணும்!”

மிஷ்கின்

“சரி… தொடர்ந்து ஒரே ஸ்டைலை ஃபாலோ பண்ணா, ரசிகர்களுக்குப் போர் அடிக்காதா?”

“ரசிகர்களுக்குப் போர் அடிச்சா, இந்தப் படம் ஓடியிருக்காதே! என் கெரியர்லேயே இதுதான் வெற்றிப்படம். விஷாலுக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம். ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. தவிர, ரசிகர்களுக்கு மேக்கிங் ஸ்டைல் ஒரு பிரச்னையே இல்லை. நல்ல கதையும், ‘அடுத்து என்ன?’ங்கிற சுவாரஸ்யமும் இருந்தாப் போதும். நிச்சயமா கொண்டாடுவாங்க. படம் நல்லா இருக்கா… ‘நல்லா இருக்கு’, ‘நல்லா இல்லை’ இதுதான் அவங்க மனநிலை. தியேட்டருக்குப் போனேன். ரசிகர்களோடு படம் பார்த்தேன். ‘நல்லா இருக்கு சார்’னு எல்லோரும் கை கொடுத்தாங்க… இதுபோதும்!”

“எந்தச் சூழ்நிலையில வில்லன்கள் ஒண்ணு சேர்ந்தாங்கனு காட்டவே இல்லையே… ஏன்?”

“அது தேவைப்படலை. ஆடியன்ஸுக்கும் அது தேவையில்லை. ஒரு படத்தோட 36% அமைப்பை ரசிகர்களுக்குப் புரியவெச்சாப் போதும். அந்தப் படத்தோட கதை, திரைக்கதையை அவனால புரிஞ்சுக்கமுடியும். மிச்சம் இருக்கிற 64% ரசிகனுக்குத் தேவையில்லை. கதை ஓட்டத்துல மத்ததையெல்லாம் அவங்க புரிஞ்சுப்பாங்க. இது ஆடியன்ஸ்மேல நான் வெச்சிருக்கிற நம்பிக்கை. படத்தோட வெற்றி, அந்த நம்பிக்கை சரிதான்னு சொல்லிடுச்சு.”

“அன்புதான் உங்க படத்தோட பிரதானமா இருக்கும். அதை இந்தப் படத்துல சரியாப் பதிவு பண்ணிட்டோம்னு நினைக்கிறீங்களா?”

“நிச்சயமா. ‘நான் எவ்ளோ மனிதர்களைக் கொன்னேன், மாட்டிக்கலை. உன் நாயைக் கொன்னுதான் மாட்டிக்கிட்டேன், ஸாரி’னு ஒரு சின்னப் பையன்கிட்ட வில்லன் சொல்றார். ஒரு சின்னப் பையனுக்கு நாய்மேல இருக்கிற அன்பு அவனுக்குப் புரியாம போயிடுச்சு. அந்த அன்புதான் வில்லனை மாட்டிவிடுது. அதை ஆடியன்ஸ் புரிஞ்சுக்கிட்டதுனாலதான், தியேட்டர்ல அந்த வசனத்துக்கும், அந்தக் காட்சிக்கும் கை தட்டுறாங்க. நான் போதிச்ச அன்பை ஆடியன்ஸ் புரிஞ்சுக்கிட்டாங்க.”

மிஷ்கின்

“உங்க படத்தோட போஸ்டர்கள் மீது ஒரு தொடர் விமர்சனம் இருக்கே?”

“உங்களுக்குத்தான் அது போஸ்டர். என்னைப் பொறுத்தவரைக்கும் அது படத்தோட ஒரு இமேஜ். அதுல வழவழ கொழகொழனு இருந்தா நல்லா இருக்காது. எனக்குத் தேவையில்லைனு தோணுச்சுனா, அடுத்த படத்தோட போஸ்டர்ல என் பெயரைக்கூடப் பதிவு பண்ணமாட்டேன்.”

“ ‘துப்பறிவாளன் – 2’ ?”

“நிச்சயமா வரும். இந்தப் படத்தோட சீக்குவென்ஸா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்