“டார்க் காலர் க்ரைம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?!” - ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ இயக்குநர் வினோத்

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் வினோத். இவர் தற்போது கார்த்தியை வைத்து இயக்கியிருக்கும் படம் `தீரன் அதிகாரம் ஒன்று'. இந்தப் படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங், சத்யன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநரை தொடர்புகொண்டோம்.

தீரன்

“ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ன மாதிரியான படம்?”    

“க்ரைம் த்ரில்லர் படம். 1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு வழக்கைச் சுற்றி கதை நகரும். ஏன் அந்த வழக்கு போடப்பட்டது, யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது படத்தின் திரைக்கதை. இந்தப் படத்தின் பெயரை சுசீந்திரன் சார் பதிவுசெய்திருந்தார். தயாரிப்பாளர் கேட்டுக்கொள்ள, அவர் விட்டுக்கொடுத்தார்.”

“ ‘சதுரங்க வேட்டை’ - 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ன வித்தியாசம்?''

" 'சதுரங்க வேட்டை' வசனத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் அப்படி அல்ல. ஒரு பன்ச் டயலாக்கூட கார்த்திக்கு இல்லை. அது மட்டுமல்லாமல், 'சதுரங்க வேட்டை' ஒயிட் காலர் க்ரைம். இந்தப் படத்தில் சொல்லியிருப்பது டார்க் காலர் க்ரைம்.''

" 'சிறுத்தை' ரத்னவேல் பாண்டியன் கேரக்டர்ல இருந்து கார்த்தியை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி இருக்கீங்க?" 

" 'சிறுத்தை' படத்தில், பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு கம்பீரமாக பன்ச் பேசும் போலீஸ் அதிகாரியாக வருவார் ரத்னவேல் பாண்டியன். இந்தப் படத்தில், நம் வீட்டில் ஒருவர் போலீஸ் அதிகாரி இருந்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி யதார்த்தமான உறவுகளை வைத்து ஆக்‌ஷன் கலந்த போலீஸாகக் களம் இறங்குவார் தீரன். ரத்னவேல் பாண்டியனுடன் தீரன் நிச்சயம் ஒத்துப்போக மாட்டார்.''

"படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் ஏதேனும்...''

"இந்தியா முழுக்கப் படப்பிடிப்பு நடைப்பெற்றது. வடஇந்திய நடிகர்களும் டெக்னீஷியன்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். மொழிப் பிரச்னை இருந்தது. தென்னிந்திய உணவுகள் அங்கு இருப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ரொட்டி போன்ற வடஇந்திய உணவுகள் நமக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. போகப்போக, வடஇந்தியர்கள் நம் பொங்கலுக்கு அடிமையாகிவிட்டார்கள். இங்கு இருப்பவர்கள், ரொட்டியை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அங்குள்ள வெயிலுக்கும் நம் ஊர் வெயிலுக்கும் நிறைய வித்தியாசம். 115 டிகிரி 120 டிகிரி என வெயில் சுட்டெரித்தது.  சூடான வறட்சிக் காற்று வீசிக்கொண்டே இருக்கும். தினமும் ஒரு க்ளைமேட் இருக்கும். அதனாலேயே, சிலருக்கு மூக்கில் ரத்தம் வரும், அடிக்கடி மயக்கம் ஏற்படும். கேரவனை அருகில் நிறுத்த முடியாது. இந்த மாதிரியான இடங்களில்தான் அதிகம் ஷூட் செய்தோம். ஒவ்வொரு ஷாட் முடிந்த பிறகு கேரவனுக்கு எல்லாம் போகமுடியாது. தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை எடுத்து வந்து அருகிலேயே வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க அங்கேயே இருந்தோம். இந்த மாதிரியான சவால்கள் இருந்தன. அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம்.''

வினோத்

 “நீங்கள் எழுதி, நிர்மல் இயக்கிவரும் 'சதுரங்க வேட்டை 2' படம் பற்றி...”

“ ‘சதுரங்க வேட்டை’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்கு நான்தான் கதை எழுதினேன். 'சலீம்' பட இயக்குநர் நிர்மல்குமார் இயக்குகிறார். அர்விந்த் சுவாமிக்காகவும் நிர்மலின் ஸ்டைலுக்கு ஏற்றவாறும் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கின்றனர்.”

“அடுத்து?”

“இந்தப்படம் வெளிவரட்டும். சின்ன இடைவேளை தேவை. மறுபடியும் ஓர் உண்மைச் சம்பவத்தை ஆராய்ந்து கதை எழுதுவேன். காரணம், உண்மைச் சம்பவத்தை வைத்துப் படம் எடுக்கும்போது மக்களிடம் கனெக்ட் செய்ய எளிதாக இருக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தின் டீசர் வரும் 27ஆம் தேதியும், ட்ரெய்லர் அடுத்தமாதம் 17ஆம் தேதியும், நவம்பர் மாதம் 17ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும்” என உற்சாகமாகப் பேசி முடித்தார் இயக்குநர் வினோத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!