“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர் | I shall send money to watch my movie the man behind the mask mgr series episode 1

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (20/09/2017)

கடைசி தொடர்பு:17:03 (20/09/2017)

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர்

எம்.ஜி.ஆர்

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!”

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா:

முனைவர் இராஜேஸ்வரி ஆங்கிலம் தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1992 முதல் அமெரிக்க ஐரோப்பிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். அவர்களில் சிலர் தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சிகள் செய்தபோது அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைத் திரட்டவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவியவர். பலதுறை நூல்களை மொழிபெயர்த்தவர்.  பல மொழிப்பயிற்சியிலும் ஆய்விலும் ஈடுபாடு கொண்டவர். 

இத்தொடர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தகவல் திரட்டு மட்டுமல்ல. அவரது ஒப்பனை வாழ்க்கையும் ஒரிஜினல் வாழ்க்கையும் இணைந்து எப்படி அவருடைய வெற்றியின் ஃபார்முலாவை உருவாக்கிக் கொடுத்தது என்பதையும் விளக்கும் சுவாரஸ்யமான தொடர்

இலக்கியமும் நாடகமும் திரைக்கலையும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழகத்தில், `எம்.ஜி.ஆர்' என்ற மூன்றெழுத்து நபர் நடத்தியிருக்கும் சாகசம், சரித்திரத்தில் இதுவரை காணப்படாத புதுமை. நாடகத்தில் ஆரம்பித்த அவரது வாழ்க்கைப் பயணம், திரையுலகில் கோலோச்சி, அரசியலில் நிறைவுபெற்றது. அவர் பிறந்து நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்த ஆண்டில், அவரின் வெற்றிக்கான சூட்சுமங்களில் சிலவற்றைக் காண்போம்...

ரசிகர் மன்றம்
‘நடிகன், நாடாள முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து தி.மு.க எள்ளி நகையாடியபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவரின் ரசிகர்கள்தான். இவர்கள்தான், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த `அண்ணா தி.மு.க' கட்சியின் தொண்டர்களாக தம்மை அறிவித்துக்கொண்டு கட்சிப் பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி நடத்தினர். கட்சி, அதற்கான கொள்கை, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை எனத் தொடங்கப்படும் முறைக்கு மாறாக, ரசிகர்களே தொண்டர்களாக மாறி எம்.ஜி.ஆரிடம் சென்று, `கட்சி தொடங்க வேண்டும்’ என வற்புறுத்தி, அவரைத் தம் தலைவராக ஏற்றுக்கொண்டது தமிழகத்தின் புதுமையான... மறக்க முடியாத வரலாறு.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்பது, தமது படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நடிகருக்காகத் தொடங்கப்பட்ட மன்றம் அல்ல. இந்த மன்றங்களை, நாம் சினிமா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. `கடவுள் இல்லை’ என்ற பாரம்பர்யத்தில் தோன்றிய தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கடவுள் பயம் இல்லாத கெட்டவர்கள், ஏழை ஏதிலி, படிக்காத பாமரர், ரெளடி, எம்.ஜி.ஆரை ரசிக்கும் பெண்கள் மோசமானவர்கள்... என்பதுபோன்ற எண்ணங்களும் பரவலாக இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவர்மீது தீவிர அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். 

எம்.ஜி.ஆருக்கு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர், தன் மனைவியின் தாலியை விற்று தொடங்கினார். அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் புற்றீசல்களாகத் தோன்றின. கோயில் இல்லாத ஊர் இருக்கலாம், குளம் இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் மன்றம் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் துளிர்த்தன.

எம்.ஜி.ஆர்
 

பிரதமர் திறந்துவைத்த மன்றம்!

எம்.ஜி.ஆருக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன.  ஆளும் கட்சியான காங்கிரஸ், எம்.ஜி.ஆருக்குச் சிறிதும் ஆதரவு காட்டாத காலத்திலேயே மக்களின் ஆதரவு எம்.ஜி.ஆருக்குப் பரிபூரணமாக இருந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள், அவரை வசூல் சக்கரவர்த்தியாக வைத்திருந்தன. அந்தமான் தீவில், எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயத்தில் அங்கு பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வருவதாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆர் ரசிகர்கள், பிரதமரைக் கொண்டே மன்றத்தைத் திறக்க முடிவுசெய்து, அதில் வெற்றியும் பெற்றனர். இந்திய வரலாற்றிலேயே, ஏன் உலக வரலாற்றிலேயே ஒரு பிரதமர் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தைத் திறந்துவைத்த பெருமை எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே. 

மன்றத்தைக் கலைத்துவிடு!

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் திரைப்படம் வெளியாகும் நாள்களில் கட் அவுட் வைப்பது, கூட்டமாகத் திரளும் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவது, இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை எதிரி ரசிகர்களிடமிருந்து பாதுகாப்பது... எனப் பல்வேறு பணிகளை அவர்கள் செய்துவந்தனர். ஒரு சமயம் எம்.ஜி.ஆருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாயிற்று. `தன்மீதான அதீத அன்பால் ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலபல வேலைகளில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டுவிடுகின்றனர்’ என்று கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அப்போது அவர்கள் தங்களின் உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக்கூறி, தங்களின் நியாயத்தை உணர்த்த முயன்றனர். எம்.ஜி.ஆருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. அவர்களைப் பார்த்து, `மன்றத்தைக் கலைத்துவிடுங்கள்' என்றார். 
கூட்டத்தில் இருந்த கோபக்கார ரசிகர், `அதைச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் சொல்லி நாங்கள் மன்றம் ஆரம்பிக்கவில்லை. படம் நடிப்பதுதான் உங்கள் வேலை. ரசிகர் மன்றம் நடத்துவது எங்கள் விருப்பம். எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்' என்றார். எம்.ஜி.ஆர் அசந்துபோய்விட்டார். ‘நம்மீது இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்களே... இவர்களது பாசத்தையும் பற்றையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே’ என நினைத்து, ‘இவர்கள்தான் தமது சொத்து, சுகம், வாழ்வு!' என்பதை உணர்ந்துகொண்டார். அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

எம்,ஜி.ஆர்

 

எங்க ஊர் எம்.ஜி.ஆர் இயேசுபுத்திரன்!
எம்.ஜி.ஆரையே தன் வாழ்வின் வழிகாட்டியாகக்கொண்டு வாழும் ரசிகர்கள் பல கோடிப்பேர் உண்டு. கன்னியாகுமரியைச் சேர்ந்த இயேசுபுத்திரன் என்பவர், கடலில் மூழ்கி இறக்க முயற்சி செய்பவர்களைக் காப்பாற்றுவதைத் தம் தலையாயக் கடமையாகக்கொண்டு வாழ்பவர்; கடலில் நீந்தும் ஆசையில் அங்கு இருக்கும் பாறைகளில் சிக்கி உயிரிழக்கும் பலரின் உடல்களைக் கரை சேர்த்தவர். அந்தப் பணிக்கான உந்துதல், எம்.ஜி.ஆர் நடித்த `படகோட்டி’ படம். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இயேசுபுத்திரன் ``சின்ன வயசுல இருந்து எம்.ஜி.ஆர்-னா எனக்கு அவ்வளவு ப்ரியம். படகோட்டியா நடிச்சதுல இருந்து அவரு மேல உசிராயிட்டு. எம்.ஜி.ஆர் மாதிரி சும்மா பேசினா லட்சியம் ஆகிடுமா? உதவின்னு வந்தா உதவணும் சார்'' என்று கூறும் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். ஏழைதான் என்றாலும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையே தன் கொள்கைகளாகக்கொண்டு வாழும் எளியவர், லட்சியவாதி.

ரத்தத்தின் விலை 15 ரூபாய்!
பழைய படங்களில், எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் மட்டுமே இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. மதுரை, சென்னை போன்ற பெரிய ஊர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் படங்கள் ஓடுவதைக் காணலாம். ரத்ததானம் பற்றிய விழிப்புஉணர்வு வந்த காலத்தில், அரசு மருத்துவமனைகளில் இளைஞர்கள் வந்து ரத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். சிலர் வாரம் ஒருமுறை வந்ததைக் கேள்விப்பட்ட மருத்துவர்கள், அதிர்ந்துபோயினர். அவர்களை விசாரித்தபோது எம்.ஜி.ஆர் நடித்த புதுப்படம் வெளியாகும் நாள்களில், இளைஞர் கூட்டம்  இவ்வாறு ரத்ததானம் செய்ய அதிக எண்ணிக்கையில் வந்த உண்மையைத் தெரிந்துகொண்டனர். இவர்கள், ‘நாம் சொன்னால் கேட்க மாட்டார்கள்’ எனக் கருதிய மருத்துவர்கள், அதை எம்.ஜி.ஆருக்குத் தெரியப்படுத்தினர். 

எம்.ஜி.ஆர் பதறிப்போய் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என் படத்தைப் பார்ப்பதற்காக  எவரும் உங்கள் ரத்தத்தை விற்கக் கூடாது. பணம் இல்லையென்றால், எனக்குத் தந்தி கொடுங்கள். நான் பணம் அனுப்பிவைக்கிறேன்’ என்றார். சிலர் அந்த வழியையும் கையாண்டனர். பணம் மணியார்டரில் வந்தது. படம் பார்த்து மகிழ்ந்தனர். ஆனாலும், ‘எம்.ஜி.ஆரிடமே பணம் வாங்கி அவர் படத்தைப் பார்ப்பதா!’ என்று மனம் வெதும்பினர். பிறகு, அவ்வாறு பணம் கேட்பதையும் ரத்தத்தை விற்பதையும் விட்டுவிட்டனர். 

எம்.ஜி.ஆர் ரசிகர்கள், `எம்.ஜி.ஆருக்கு, தாம் ஏதாவது செய்ய வேண்டும்' என நினைப்பார்களே தவிர, அவரிடம் எதையும் கேட்டுப் பெற விரும்புவதில்லை. `உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்று எம்.ஜி.ஆர் பலரிடம் கேட்டபோதும், ரசிகர்கள் `எங்களுக்கு எதுவும் வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்தாலே போதும் தமது ஜென்மம் பூர்த்தியடைந்துவிட்டதாகவே கருதினர். இதுவும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்.

எம்.ஜி.ஆர்

 

ரசிகையின் தீவிரப்பற்று!

‘எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கு, 1950 - 60களில் ‘அவள் நல்லவள் அல்ல’, ‘கடவுளுக்கு பயப்பட மாட்டாள்’ போன்ற அவப்பெயர்கள்  நிலவியபோதும் பெண்கள் தீவிர ரசிகையாகவே இருந்தனர். கிராமங்களில், `எம்.ஜி.ஆர் ரசிகையோடு வாழ மாட்டேன்’ என பஞ்சாயத்தைக் கூட்டிய வரலாறும் உண்டு. 

ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தில் தகராறு எனப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. கணவர், ``என் மனைவி எம்.ஜி.ஆர் படத்தைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை'' என்றார். மனைவியோ, ``இவருடன் நான் வாழ மாட்டேன். இவர் எப்போதும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறைத்துப் பேசுகிறார்'' என்றார். பஞ்சாயத்தார் கணவனிடம்,  ``எம்.ஜி. ஆரைப் பற்றி நீ எதுவும் குறைத்துப் பேசக் கூடாது. அவள் எம்.ஜி.ஆர் படம் பார்க்க நீ அனுமதிக்க வேண்டும். நீங்கள் தனித்தனியாக படம் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டில், வீட்டு விஷயம் மட்டுமே பேசுங்கள். சினிமா பற்றி இருவரும் பேசக் கூடாது'' என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

அரசியலில் ரசிகையர் புரட்சி! 
எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்து திண்டுக்கல்லில் முதல் தேர்தலைச் சந்தித்த நேரம். அப்போது அங்குள்ள காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் புது மருமகள் தலையில் இரட்டை இலையில் ரோஜா செருகியிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன... பொண்ணு அந்தக் கட்சியா?’ என்றார். அதில் வருத்தப்பட்ட பிரமுகரின் மகன், ‘ஆமாம். நமக்கு சரிவரலைன்னா திருப்பி அனுப்பிட வேண்டியதுதான்’ என்றார். அப்போது அங்கு வந்திருந்த பிரமுகர் ஒருவர் , இந்தப் பதிலால் அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘அதுதான் என் தலைவிதின்னா அப்படியே ஆகட்டும்’ என்றார். 

எம்.ஜி.ஆர்
 

இப்போது இரண்டாவது முறையாக அந்த விருந்தினருக்கு அதிர்ச்சி. ‘என்ன பெண் இவள், கணவர் சொல்படி கேட்காமல், அவர் வழிப்படி செல்லாமல் தனக்கென ஒரு கருத்து வைத்திருக்கிறாளே. அதுவும் `அப்படியே ஆகட்டும்' என்கிறாளே. ‘மன்னித்துவிடுங்கள். உங்கள் சொல்படி நானும் இனி காங்கிரஸ் அபிமானியாகவே மாறிவிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டாமா? அவளால் அவள் கணவருக்கு எவ்வளவு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் தன்னைப்போன்ற ஓர் அயலான் முன்னிலையில் அந்தப் பெண் இப்படிப் பேசியிருக்க வேண்டாமே’ என்று சங்கடப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் ரசிகைகள் இதற்கெல்லாம் அஞ்சுவது கிடையாது. பலர் பட்டென பதில் சொல்லிவிடுவர். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் அசந்துபோகும் அளவுக்குப் பெண்கள் தம் தலையில் இரட்டை இலையுடன்கூடிய பூவைச் சூடியபடி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளைப் பதிவுசெய்தனர். 

ரசிகைகள் முடிவுசெய்த ஆட்சி!
தம் ரசிகையரின் உள்ளக் கருத்தின் உறுதிப்பாட்டை நன்கு உணர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ஒரு பொதுக்கூட்டத்தில், `பெண்கள், தம் கணவர் சொன்னாலும் கேட்க மாட்டர்கள்; நான் சொன்னால் கேட்பார்கள். இது தாய்க்குலத்தின் கட்சி' என்றார். அதுபோல வேறு எவரும் நினைத்திருக்கக்கூட இயலாது. பெண்களும் அரசியல் மற்றும் ஆட்சி பற்றி தனித்து முடிவெடுக்க முடியும், அவர்களின் கருத்தும் சபையேறும், அதுவும் வெற்றிபெறும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகைகளே என்றால், அது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.

எம்.ஜி.ஆர்

பெண்களின் இந்த ரசிகப் பற்றுக்குக் காரணம் என்னவென்றால், படங்களில் அவர் பெண்களை மதித்த விதம் என்பது சத்தியவாக்கு. பல ஆண் விமர்சகர்கள், எம்.ஜி.ஆரை `ஆணாதிக்கவாதி' என்று குறை சொல்வதும் உண்டு. ஆனால், இலக்கியமும் திரைப்படங்களும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதே இந்தக் குற்றச்சாட்டுக்கான நேர்மையான பதில். சமூகத்தின் போக்கையும் மீறி எம்.ஜி.ஆர் தன் படங்களில் பெண்களை மன உறுதி படைத்தவர்களாக, செயல்திறன் படைத்தவர்களாகக் காண்பித்தது உண்டு. ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் மதனா (பானுமதி), ‘அரசகட்டளை’யில் வரும் அமுதா (சரோஜாதேவி), ‘அடிமைப்பெண்’ணில் வரும் ஜீவா (ஜெயலலிதா)... எனப் பல பெண் கதாபாத்திரங்களை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

- தொடரும்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close