’’ஆக்ஸிடென்ட்டா... எனக்கும் ஜெய்க்குமா..?!’’ - பதறிய பிரேம்ஜி... நடந்தது என்ன!

`நடிகர் ஜெய்யின் கார், அடையாறு மேம்பாலத்தில் விபத்துக்குள்ளானது. காயமின்றி ஜெய் தப்பினார். அவர் மட்டுமல்ல, நடிகர் பிரேம்ஜியும் உடன் இருந்தார். நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய பரிந்துரை!' இவையெல்லாம் நேற்று ஒரு நாளில் வெளிவந்த தகவல்கள். புதன்கிழமை (20.09.17) இரவிலிருந்து நேற்று (21.09.17) இரவு வரை நடந்தது என்ன?!

ஜெய்,பிரேம்ஜி

* புதன்கிழமை இரவு நடிகர் பிரேம்ஜி `Wednesday night fever GOA Part 2’ என்ற கேப்ஷனுடன் சேர்த்து நடிகர்கள் ஜெய் மற்றும் வைபவுடன் தான் இருக்கும் போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். 

* தாஜ் ஹோட்டலில் நடத்த பார்ட்டியை முடித்துவிட்டு, ஜெய் தனது ஆடி காரில் பிரேம்ஜியுடன் வீட்டுக்குச் செல்லும் வழியில் அடையாறு மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது இடித்து கார் விபத்துக்குள்ளானது.

ஜெய் கார்

* அதிகாலை 2.30 மணிக்கு நடந்த இந்த விபத்து தொடர்பாக, கிண்டி போக்குவரத்துக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளிதரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். 

* இவர் நேரில் சென்று பார்க்கும்போது காரை ஓட்டி வந்த நடிகர் ஜெய், பார்ட்டி மோடிலிருந்து வெளியே வராமலேயே இருந்திருக்கிறார். அதனால், நடிகர் ஜெய் மீது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவில் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்துள்ளனர். 

ஜெய்,பிரேம்ஜி

* பிறகு, ஜெய்யின் வக்கீல் உதவியால் அவருக்கு ஜாமீன் கிடைத்து, மாலை 4 மணியளவில் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைத்துள்ளனர். 

* நடிகர் ஜெய் இப்படி தனது காரை விபத்துக்குள்ளாக்குவது முதல் முறை அல்ல. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி காலை 5.10 மணிக்கு காசி தியேட்டர் பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோதினார். அப்போதும் அவர் மீது ஒரு வழக்கு போடப்பட்டிருக்கிறது. நடிகர் ஜெய் ஒரு ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது. 

* நேற்று விபத்து நடந்ததாக தகவல் வந்ததும், நடிகர் பிரேம்ஜியைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``ஆக்ஸிடென்ட்டா... எங்களுக்கா?! அப்படியெல்லாம் இல்லையே. நான் வீட்டுலதானே இருக்கேன். ஜெய் ஷூட்டிங்ல இருக்கான்’’ என்று எதுவும் நடக்காததுபோல் மழுப்பினார். 

வெங்கட் பிரபு ட்வீட்

* இவை எதுவும் தெரியாமல் நடிகர் பிரேம்ஜியின் அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபு, தனது `பார்ட்டி' படத்தின் ஷூட்டிங்கை சிங்கப்பூரில் நடத்திவருகிறார். இன்று (22.09.17) காலை 10 மணிக்கு ட்விட்டரில், `` `பார்ட்டி' படத்தின் ஷூட்டிங்கை 70 நாள்கள் சிங்கப்பூரில் முடித்துவிட்டு, திங்கள்கிழமை சென்னைக்கு வருகிறேன்’ என ட்வீட் செய்துள்ளார். 

* அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு ஃபாலோயர் ஒருவர் சென்னையில் அவர் தம்பி செய்ததைக் குறிப்பிட்டுச்  சொல்ல, ` `பார்ட்டி' படத்துக்கான புரமோஷனை இப்பவே ஆரம்பிச்சுட்டாங்களா!’ என இந்த பிரச்னையின் சீரியஸ்னஸ் தெரியாமல் கிண்டல் தொனியில் பதிலளித்துள்ளார். ஜெய்யினால் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளினால் அப்பாவி மக்களுக்கு எதுவும் ஆகவில்லைதான், அதற்காக இப்படி பொறுப்பற்ற முறையில் அவர்கள் தொடர்ந்து செய்து வருவது நியாயம் தானா? சட்டம் - ஒழுங்கு, நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது தெரிகிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!