வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (25/09/2017)

கடைசி தொடர்பு:14:04 (25/09/2017)

“மிஸஸ். சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ‘நோ’ சொல்லிட்டேன்” - ‘ஜூனியர் சீனியர்’ கல்யாணி!

கல்யாணி

னது ஏழு வயதில் 'ஜெயம்' படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்தவர் கல்யாணி. பிறகு, விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக தாய்க்குலங்களிடம் வரவேற்பு பெற்றவர். அந்த சீரியலுக்குப் பிறகு, ஒரு மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜீ தமிழ் சேனலின் 'ஜூனியர் சீனியர்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது, 'ஜூனியர் சீனியர் பார்ட் 2' நிகழ்ச்சிக்குத் தயாராகி வருகிறார். அவரிடம் பேசியபோது... 

''சீரியலில் நடிக்க ஆரம்பிச்சீங்களே என்ன ஆச்சு?'' 

''ஆமாம்! ஜீ தமிழின் 'ஜூனியர் சீனியர்' நிகழ்ச்சிக்குப் பிறகு, சன் டி.வியில் 'கங்கா' சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால், தொடர்ந்து நடிக்க விருப்பமில்லாமல் விலகிட்டேன்.'' 

''அந்த திடீர் விலகலுக்கு என்ன காரணம்?'' 

'' 'கங்கா' சீரியலில் முக்கியமான கதாபாத்திரம்னு சொல்லித்தான் கூப்பிட்டாங்க. நம் நடிப்பு திறமையை நிரூபிக்கும் கதாபாத்திரமாக இருக்கும்னு ஒப்புக்கிட்டேன். பத்து நாள்கள் மட்டுமே நடிச்சேன். அதற்குப் பிறகு, 'எனக்கு இந்தக் கதாபாத்திரத்தில் தொடந்து நடிக்க விருப்பமில்லை'னு சொன்னேன். 'அது உங்க விருப்பம் மேடம்'னு சொல்லிட்டாங்க. அப்படி மியூச்சுவலாக அந்த சீரியலிலிருந்து வெளியே வந்துட்டேன்.'' 

''உங்களை மாதிரியான முன்னணி ஹீரோயின்களுக்கு இப்போது வாய்ப்பு குறைந்து வருவதாக தோன்றுகிறதா?'' 

''இப்போ இந்தத் துறை ரொம்பவே மாறிடுச்சு. மாற்றம் எப்பவுமே நல்லதுதான். ஆனால், மத்தவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிற மாதிரியான மாற்றங்கள் ஆபத்தானது. இப்போது பணம் சார்ந்தே பல விஷயங்கள் நடக்குது. மலையாளத்தில் திறமை இருக்கிறவங்களுக்கு எப்பவுமே வாய்ப்புகள் கொடுக்கப்படும். அங்கே ஒரு கேரக்டர் ரோல்கூட வெயிட்டாக இருக்கும். அந்த மாதிரியான சூழல் தமிழில் வந்தால் நல்லா இருக்கும்.'' 

கல்யாணி

''உங்களுக்கு வந்த சமீபத்திய ஆஃபர் என்ன?'' 

''விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும், 'மிஸஸ்.சின்னத்திரை' ரியாலிட்டி ஷோவுக்குக் கூப்பிட்டாங்க. எனக்குப் போட்டிப் போடுறது, டாஸ் ஜெயிக்கிறது மாதிரியான விஷயங்கள் செட் ஆகாது. சின்ன வயசிலிருந்தே போட்டின்னா ரொம்பப் பயம். 'இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கும் எல்லாப் போட்டியாளர்களுமே திருமணமானவங்க. நீங்களும் கலந்துக்கிறீங்களா?'னு கேட்டாங்க. 'எனக்கு விருப்பமில்லை'னு சொல்லிட்டேன். இதேமாதிரிதான் 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டாங்க. அப்பவும் 'இதோ சொல்றேன் அதோ சொல்றேன்'னு தள்ளிப் போட்டுட்டே இருந்துட்டேன். பிறகு, அவங்க என்னைக் கூப்பிடுறதையே விட்டுட்டாங்க. இது மாதிரியான நிகழ்ச்சியில் அன்றைய தினம் நாள் சரியில்லனா அவுட் ஆகிடுவோம். நான் எப்பவுமே மெண்டலி பாதிக்கப்படக்கூடாதுனு நினைக்கிறேன். அதனால், நடிப்பும் காம்பியரிங்கும்தான் எனக்கு செட் ஆகும்.'' 

''அறுவைச் சிகிச்சை முடிந்து உங்கள் உடல் நலம் எப்படி இருக்கு?'' 

''சீரியலிலிருந்து விலகி முழுக்க ரெஸ்டில் இருக்கேன். இப்பத்தான் தேறிட்டு வரேன். ஸ்விம்மிங் ரொம்ப பிடிக்கும் என்பதால், என் நேரத்தை அதிகமாக நீச்சலில் செலவழிச்சுட்டிருக்கேன். மற்ற நேரங்களில் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் என ஜாலியாக இருக்கேன்.'' 

''இன்டஸ்ட்ரியில் உள்ள உங்க ஃப்ரெண்ட்ஸ் பற்றி...'' 

''நான் ஏழு வயசிலிருந்து நடிச்சுட்டிருக்கேன். நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. குறிப்பாக, 'கில்லி' படத்தில் விஜய் தங்கையாக நடிச்ச ஜெனிஃபர், என் பெஸ்ட் ஃப்ரெண்ட். நானும் அவங்களும் ஒரே நேரத்தில் நடிக்க வந்தவங்க. டைம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சந்தித்துப் பேசுவோம். எங்க ஃப்ரெண்ட்ஷிப் எப்பவுமே எவர்கிரீன்தான்.'' 

நல்ல வாய்ப்புகளைத் தேடும் கல்யாணியின் விருப்பம் நிறைவேறட்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்