Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அரசியல்வாதிகள் தூங்குற மாதிரி நடிக்கிறாங்க; அவங்களை எழுப்ப சிரமமாத்தான் இருக்கும்!” - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் #VikatanExclusive

Chennai: 

`இறைவி'க்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் `மெர்க்குரி'. வசனமே இல்லாத த்ரில்லர் திரைப்படம். ``பிரபுதேவா சாரைத் தவிர, சனந்த், தீபக், அனீஷ், ஷஷாங் எல்லோருமே வளரும் நடிகர்கள். எங்களோட `ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிச்சிருக்கிற `மேயாத மான்’ல நடிச்சிருக்கிற இந்துஜா, இதுல முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. எங்க அப்பா நடிச்சிருக்கார். இப்படி படம் முழுக்க மொத்தமே ஆறேழு கேரக்டர்கள் மட்டும்தான். கொஞ்சம் சவால்தான். முயற்சி பண்ணிப் பார்த்திருக்கோம், வொர்க் அவுட் ஆகுதான்னு ஆடியன்ஸ் பார்க்கும்போதுதான் தெரியும்” - வழக்கமானவற்றிலிருந்து விலகி நிற்பதுதான்  கார்த்திக் சுப்புராஜின் சிறப்பு. எளிமையான வார்த்தைகளில் தன் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து சொல்கிறார்.  

`` `ஐ.டி-யில வொர்க் பண்ணினவர், எளிதா சினிமாவுக்கு வந்துட்டார்’னு சொன்னாலும் அதுக்குப்பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கும்ல… அது எப்படியானது?”

``கஷ்டத்தோட லெவல், சூழல் மாறுபடலாம்; ஆனா கஷ்டம் எல்லோருக்கும் ஒண்ணுதான். பிளாட்பாரத்துல படுத்து வளர்ந்தவங்க மட்டும்தான் கஷ்டப்பட்டு வர்றாங்கனு சொல்ல முடியாது. என்னைப் பார்த்து `ஐ.டி-யில வேலைபார்த்த பையனுக்கு என்ன கஷ்டம் இருந்துடப்போகுது?'னு பேசினாலும், அவங்களுக்குப் பதில் சொல்லாம கடந்து வந்திடுவேன். எல்லோரும் அப்போ குறும்படத்தை சாதாரணமா பார்த்தாங்க. சினிமா எடுக்கிறதுக்குக் கொஞ்சமும் குறைஞ்சதில்லை குறும்படங்கள். நான் இயக்கின `நீர்’ குறும்படத்துக்குப் பணம் திரட்ட நானும் என் அப்பாவும் எப்படி அலைஞ்சோம், `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில ஜெயிச்ச பிறகும் தயாரிப்பாளர் கிடைக்க ஒன்றரை வருஷம் ஆச்சு. செலவே இல்லாம ஒரு குறும்படம், ஆயிரம் ரூபாயில ஒரு குறும்படம், லட்சம் ரூபாய்க்கும் குறும்படம்… இப்படி சேர்த்துவெச்ச காசை எல்லாம் குறும்படத்துக்காகத்தான் செலவுபண்ணேன். சினிமாவுக்கு முன்னாடி 14 குறும்படங்கள் எடுத்திருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு. ஆனா, பயணப்பட்டுக்கிட்டே இருக்கோம். சிலபேர் பஸ்ஸுல வர்றாங்க, நான் ட்ரெயின்ல போறேன். ஆனா, எல்லோரும் போய்ச்சேரணும்னு நினைக்கிற இடம் ஒண்ணுதான்.”

கார்த்திக் சுப்பராஜ்

`` `ஸ்டோன் பெஞ்ச்' வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது?" 

``இந்த கம்பெனியை ஆரம்பிச்சதே குறும்படங்களுக்கும் ஒரு சந்தையை உருவாக்கணும்னுதான். ஏன்னா, ரசிகர்கள் யாரும் குறும்படம் பார்க்காம இல்லை. அப்படி இலவசமா பார்க்கிற ரசிகர்களுக்கு, தரமான குறும்படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கவைக்கிற முயற்சி இது. சிரமமான காரியம்தான். நல்ல திரைப்படங்களை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கிறதுல இருக்கிற பிரச்னை, குறும்படங்களுக்கும் இருக்கு. அதைக் களையுறதுக்கான வாய்ப்புகள் இப்போ அதிகரிச்சிருக்கு. அமேஸான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான தளங்களில் நம்ம படைப்புகளை ரிலீஸ் பண்ணலாம். நாங்ககூட ‘கள்ளச்சிரிப்பு’ங்கிற வெப் சீரிஸ் பண்ணினோம். அதுக்கு வரவேற்பு நல்லா இருக்கு. தொடர்ந்து தரமான படங்களைத் தயாரிச்சு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்கான முதல் முயற்சிதான் `மேயாத மான்’.”

`தமிழ் சினிமாவின் பேய்ப்பட சீஸனை `பீட்சா’வுக்கு முன் – `பீட்சா’வுக்குப் பின்னு பிரிச்சுடலாம். நீங்க ஆரம்பிச்சுவெச்ச பேய்ப்பட ட்ரெண்ட் இன்னும் ஓயலை...”

`` `பீட்சா’வுக்குப் பிறகு நிறைய பேய்ப் படங்கள் வந்தது உண்மைதான். ஆனா, அதுல பயமுறுத்தின பேய்களைவிட சிரிக்கவெச்ச காமெடிப் பேய்கள்தான் அதிகம். அந்த காமெடி ஹாரர்ல சில படங்கள் எனக்குப் பிடிச்சிருந்தது. லோ பட்ஜெட்ல ஒரு ஹாரர் படம் பண்ணா, அது ஆடியன்ஸுக்கும் திருப்தியா இருக்கும், தயாரிப்பாளரும் தப்பிச்சுக்கலாம்னு ஒரு ஐடியா `பீட்சா’ மூலமா கிடைச்சது. ஆனா, அதைக் கொஞ்சம் அதிகமாத்தான் கொடுத்துட்டாங்கனு தோணுது!”

கார்த்திக் சுப்பராஜ்

``விவசாயிகள் பிரச்னைக்கு ட்வீட் பண்ணீங்க, அனிதாவுக்கான நிகழ்வுகளில் கலந்துக்கிட்டீங்க. தற்போதைய அரசியல் சூழல் உங்களை எந்த அளவுக்குப் பாதிக்குது?”

`` `சமீபகாலமா நாம பதற்றமான ஒரு சூழல்ல இருக்கோம்’ - இது நான் மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கிற எல்லோருமே சொல்றது. எனக்கு என்ன கோபம்னா, போராட்டமெல்லாம், இப்போ தினசரி வேலைக்குப் போயிட்டு வர்ற மாதிரி ஆகிடுச்சு. டெல்லியில விவசாயிகள் போராடுறாங்க, படிப்புக்காக மாணவர்கள் போராடுறாங்க, டாஸ்மாக்கை அகற்றணும்னு பெண்கள் போராடுறாங்க. எத்தனை பிரச்னைகள், எத்தனை போராட்டங்கள்! எல்லாமே அரசியல்வாதிகளுக்குத் தெரியுது; அதுல இருக்கிற நியாய, அநியாயங்கள் புரியுது. ஆனா, கண்டுக்க மாட்டேங்கிறாங்க. இதோ, இப்போ அனிதாவைக் கொன்னுட்டாங்க. என்னோட பொருள் உங்ககிட்ட இருக்குன்னா நான் கேட்டு வாங்கிக்குவேன்; அடிச்சுப் பிடுங்கி எப்படியோ வாங்கிடுவேன். ஆனா, அனிதா கோர்ட் வாசல் வரை போனாங்க. அதுவரை நம்பிக்கை கொடுத்த அரசு, திடீர்னு `அதெல்லாம் கிடையாது போ’னு அனுப்பிவெச்சுடுது. தனக்குத் தேவையானதை யார் பறிச்சுக்கிறாங்கனு தெரியாத சூழல்லேயே இறந்துபோயிட்டாங்க.

பல இடங்கள்ல, இந்த மரணத்தை சாதிரீதியாவும் பார்க்கிறாங்க. நிச்சயமா அதையும் தவிர்க்க முடியாது. காலம் காலமா பணம் இல்லாதவங்க, இங்கே வாழ்றதே கஷ்டமான காரியமாத்தான் இருக்கு. எந்தச் சாதியா இருந்தாலும், மதமா இருந்தாலும் பணக்காரனா இருந்தா இங்கே பிரச்னையே இல்லை. ஏழையா இருக்கும்போதுதான் எல்லாம் ஒண்ணு சேரும். முக்கியமா, இந்தியா முழுக்க மதரீதியான ஒரு அழுத்தம் இருக்கிறதையும் உணர முடியுது. எலெக்‌ஷன், வாக்குரிமை… இதெல்லாம் எவ்ளோ பெரிய ஆயுதங்கள்! நாம சரியா பயன்படுத்தாம விட்டுட்டோமேனு எல்லோரும் ஃபீல் பண்றாங்க. எதிர்காலத்துல அதைச் சரியா பயன்படுத்துவாங்கனு நம்புறேன். அரசியல்வாதிகள் தூங்குற மாதிரி நடிக்கிறாங்க. அதனாலதான் மக்கள் அவங்களை எழுப்ப சிரமப்படுறாங்க. பரவாயில்லை… தூங்குறவங்க ஒருநாள் எழுந்துதானே தீரணும். இல்லைன்னா வாழ முடியாது!”

``ரஜினி, கமல், விஜய், விஷால்னு சினிமா டு அரசியல் என்ட்ரி கொடுக்கப்போற நடிகர்களோட பட்டியல் நீண்டுக்கிட்டேபோகுதே?”

``நம்ம ஊர்ல பல அரசியல்வாதிகள் சினிமாவுல இருந்துதான் வந்திருக்காங்க. இனி வரப்போறவங்க ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ங்கிற பாடத்தைப் படிச்சவங்க, அதை உள்வாங்கிட்டவங்களா இருந்தா நல்லா இருக்கும். அதனால, இவங்க வந்தா எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா, கவர்ச்சி, கற்பனைகளுக்கு மயங்கி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தா, நிச்சயமா இப்போ படுற கஷ்டங்களையெல்லாம் அப்பவும் படவேண்டியதிருக்கும். அதனால, அரசியலுக்கு வரத் தகுதி இருக்குனு நினைக்கிற சினிமா பிரபலங்கள் தாராளமா அரசியலுக்கு வாங்க. அவங்களை ஏத்துக்கிறதா, நிராகரிக்கிறதானு மக்கள் முடிவுபண்ணட்டும்!”

கார்த்திக் சுப்பராஜ்

``சமீபத்துல நடந்த தயாரிப்பாளர்கள் - திரைப்படத் தொழிலாளர்கள் பிரச்னையை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க?"

``சினிமா தொழிலாளர்கள் சங்கம் பாரம்பர்யமான யூனியன். அதை மொத்தமா ஒதுக்கிறது தவறு. சேர்ந்துதான் வேலைபார்க்கணும். ஆனா, சில விதிகள் தளர்த்தப்படணும். ஏன்னா, எல்லா படங்களுக்கும் டெக்னீஷியன்ஸ் ரொம்ப முக்கியம். ஒரு காட்சிக்கு எந்த இடத்துல லைட் கட்டணும், செட் பண்ணணும்னு அவங்களுக்குத்தான் கச்சிதமா தெரியும். புதுசா வர்றவங்களை வெச்சு வேலை வாங்கிடலாம். ஆனா, ஷூட்டிங் தாமதம் ஆகும். ஒரு மணி நேரம் ஷூட்டிங் தாமதமானா, தயாரிப்பாளருக்கு எவ்ளோ நஷ்டம் வரும்னு சினிமாவுல இருக்கிறவங்களுக்குத் தெரியும். அதே சமயம், படைப்பாளிகளோட தேவைக்கேற்ற தொழிலாளர்கள் ஸ்பாட்ல இருந்தா போதும். உதாரணத்துக்கு, ஒரு சின்ன ரூம்ல நான் ஒரு காட்சியை எடுக்கிறேன்னா, அதிகபட்சம் மூணு லேபர் போதும். ஆனா, அதிகமா பயன்படுத்தணும்கிற கட்டாயம் வருது. அதை மாத்தினா சினிமா ஆரோக்கியமா இருக்கும். பல படைப்பாளிகள் வெளியே வருவாங்க. தயாரிப்பாளரோட பட்ஜெட் குறையும். ஃபெப்சி அமைப்பு அந்தப் பிரச்னைகளையெல்லாம் சரி பண்றதா சொல்லிட்டாங்க, மகிழ்ச்சி!"

``உங்களோட சில குறும்படங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவை. ஆனா, இதுவரை நீங்க இயக்கிய படங்களில் அப்படியான களம் இல்லையே?”

``எதிர்காலத்துல சமூகம், அரசியல் சார்ந்த படங்கள் நிச்சயமா பண்ணுவேன். ஒரு விஷயத்தை நாம சொல்லும்போது, மேம்போக்கா சொல்லி உணர்வுகளைத் தூண்டிவிட்டு கைதட்டலும் வசூலும் வாங்கிட்டுப் போயிடக் கூடாது. ஒருத்தனுக்கு ஒரு விஷயம் தெரியலைன்னா, அந்த விஷயத்துக்கான விழிப்புஉணர்வை அந்தப் படம் கொடுக்கணும். நான் ஹிட்லரோட கொடுமைகளை எல்லாம் உலக சினிமாவுல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தத் தாக்கம் இன்னும் எனக்குள்ள இருக்கு. இப்போ நான் ஈழத்தமிழர்களோட கதையைச் சொல்லணும்னாலும், அப்படி ஒரு தாக்கத்தோடுதான் பதிவுபண்ணணும். தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியலைன்னாலும், வெவ்வேறு வழிகளில் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிற சூழல் வரணும்… அப்படி ஒரு சூழல் வரும்போது, நிறைய போல்டான அட்டெம்ட்ல இறங்குவேன்!”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்