வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (26/09/2017)

கடைசி தொடர்பு:14:32 (26/09/2017)

தலைநகரத்தின் அசல் முகம்... நகல் மனம்...! ‘மெட்ராஸ்’ பேசிய அரசியல் #3YearsOfMadras

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ படைப்பாளிகள் வட சென்னையையும் அதைச் சார்ந்த மக்களையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர். இந்த நிலையில், அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் வாழ்வாதாரம் எத்தகையது, போலி அரசியலாலும் அரசியல்வாதிகளாலும் அவர்கள் எப்படி பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை ரத்தமும் சதையுமான நமக்கு எடுத்துக்காட்டிய படைப்பாளி பா.இரஞ்சித். அப்படி `மெட்ராஸ்' திரைப்படம் நமக்கு என்ன புரிதலை ஏற்படுத்தியது?

உண்மையிலேயே `மெட்ராஸ்' திரைப்படம் வெளியாவதற்கு முன்புவரை வட சென்னையில் வாழும் மக்களைப் பற்றி ஒரு பிம்பம் நம் அனைவருக்குள்ளும் இருந்தது. குறிப்பாக, `இன்னா அண்ணாத்த... எப்டி கீரே?' போன்ற மொழியிலேயே பேசுவார்கள் என்றும், பெரும்பாலும் கைலி தவிர மற்ற உடைகளை அணிய மாட்டார்கள் என்றும் நாடகத்தனமான சில பிம்பங்கள் இருந்தன. அத்தகைய பிம்பங்களைத் தகர்த்தெறிந்து அவர்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியை நமக்குப் புரியவைத்தது `மெட்ராஸ்'. `சமூகத்தால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் எடுத்துக்கூறும் திரைப்படம்' என்ற இயக்குநர், பல முறை கூறியிருந்தபடி தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சியையும், அவர்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் தெளிவாக உணர்த்தியிருந்தார்.

மெட்ராஸ் 

அதுவும் கலை மற்றும் விளையாட்டுகளில் அவர்களின் ரசனை குறித்துக் கூறியவிதம் நம்மை ரசிக்கவைத்தது. குறிப்பாக, பாப் மார்லி படங்களைக் காண்பித்த விதம் பாராட்டுக்குரியது. கானா பாடல்கள் ஒலிக்கும் இடங்களில்தான் பாப் மார்லின் இசையும் ஒலிக்கப்படுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டியிருந்தனர். மேலும், கதையின் நாயகன் காளி, கைகளில் `தீண்டாத வசந்தம்' என்னும் புத்தகத்தை வைத்துப் படிப்பதும், புத்தக அலமாரியில் அம்பேத்கரின் கொள்கைகள் புத்தகத்தின் தொகுதிகள் இருப்பதும் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஒரு சான்று.

சமூக அரசியல் பேசும் ஒரு படத்தில் வசனங்கள் மிக முக்கியமான ஒன்று. அதை எந்தவித சமரசமும் இன்றி சாட்டையடி வசனங்களாகப் பதிவுசெய்திருந்தார் இயக்குநர் பா.இரஞ்சித். குறிப்பாக, இடைவேளைக்கு முந்தையக் காட்சியில் காளியும் அன்புவும் பேசும் வசனங்கள். அந்தக் காட்சியில் காளி பேசும் ஒரு வசனம், “இங்க இருக்கிவறனுகளே நாம வளர்ந்துற கூடாதுன்னுதான் நினைக்கிறானுக. எத்தனை பேர் இங்க தமிழ், தமிழ்னு பேசுறாங்க. இதுவே சாதி, மதம்னு வந்தா கையில கத்தியை எடுத்துக்கிட்டு வந்து நிக்குறானுங்க” என்று கூறும் வசனம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை வைத்துக்கொண்டு தங்களின் சுயலாபத்துக்காக அரசியல் தேடும் அரசியல்வாதிகளை நமக்குத் தோலுரித்துக் காட்டியது.

படத்தில் காளி மற்றும் அன்பு இருவருமே நண்பர்களாக இருந்தாலும், அவர்களின் இரு வேறு கருத்துகளை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் அதிகாரம் தங்கள் கைகளில் வந்தால் மட்டுமே தங்களின் வாழ்கை நிலை மாறும் என்ற எண்ணம்கொண்ட அன்பும், சமூக அரசியலுடன்கூடிய கல்வியே தங்களை உயர்த்தும் என்ற எண்ணம்கொண்ட காளியும் அசல் வட சென்னையின் இளைஞர்களாகவே நமக்குக் காட்சியளித்தார்கள்.

மெட்ராஸ்

திரைப்படங்களில் சில குறியீடுகள் வாயிலாக நமக்கு சில கருத்துகளை உணர்த்துவார்கள் இயக்குநர்கள். ஆனால், திரைப்படம் முழுவதுமே குறியீடுகளாலேயே நிரம்பியிருந்தன. அடிக்கடி தென்படும் அம்பேத்கரின் படங்கள், சில அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், `Blue Boys' என நடனக் குழுவின் பெயர், சே குவேராவின் படங்கள்... எனப் படம் முழுக்கக் குறியீடுகள். அவ்வளவு ஏன் `மெட்ராஸ்' என டைட்டிலிலேயே நீல நிறச் சுவரில் சிவப்பு நிறத்திலான எழுத்துகள் அதில் தென்படும் நட்சத்திரம் எனப் பலவற்றைக் கூறலாம்.

படம் முழுவதும் நாம் கார்த்தியையும் கலையரசனையும் ஒரு ஃப்ரேமில்கூடப் பார்க்கவில்லை; காளியையும் அன்பையுமே பார்த்தோம். குடியரசுக் கட்சியில் இருக்கும் தந்தையுடன் போராட்டங்களில் பங்குகொள்ளும் பெண்ணாக கேத்ரின் தெரசாவின் அறிமுகம் அழகும் மதிப்பும் வாய்ந்தது. நடிகர்களைவிடவும் திரைப்படத்துக்குப் பெரும்பலம் சேர்த்தது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. அதுவும் சுவரைக் காண்பிக்கும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் இசை... அப்ளாஸ் ப்ரோ! இறுதிக் காட்சியில் சுவரைவிட உயரமானதாகத் தெரியும் கார்த்தியின் நிழல் ஒளிப்பதிவாளர் முரளியின் திறமைக்கு ஒரு சான்று.

சூப்பர் ஸ்டாரை வைத்து `கபாலி'யை நமக்குக் கொடுத்து `காலா'வைக் காண்பிக்கத் தயாராக இருந்தாலும், இன்றுவரை `மெட்ராஸ்' நம்முள் ஏற்படுத்திய தாக்கத்தை எளிதில் கடந்துவிட முடியாது. படைப்பாளியின் முக்கியமான பங்கே எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தான் சொல்ல வந்த கருத்தை தைரியமாக மக்களுக்குச் சொல்வதில்தான் உள்ளது. அந்த வகையில் பா.இரஞ்சித்தின் மாஸ்டர் பீஸ் இந்த `மெட்ராஸ்'!


டிரெண்டிங் @ விகடன்