Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பிரியா பவானி சங்கர் பேசினால்தான் நான் பேசுவேன்!' - அடம்பிடித்த வைபவ்

குறும்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கோலிவுட் சினிமாவில் இயக்குநராக வேண்டுமானால் முதலில் அதற்கு அட்ரஸ் காரட்டாக ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம் என்று ரோடு போட்டு காட்டிய கார்த்திக் சுப்புராஜின் முதல் தயாரிப்பு படமாக 'மேயாத மான்' திரைப்படம் வெளியாகயிருக்கிறது.

வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடந்தது. மாணவர்கள் முன்னிலையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இசைத்தட்டை வாங்கியதும் லயோலோ கல்லூரி மாணவ, மாணவிகள்தான். ரொம்ப கலகலப்பாகச் சென்ற இந்த நிகழ்ச்சியை ஸ்மைல் சேட்டை ஆர்.ஜே.விக்னேஷ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டிவிட்டது இந்த இசை வெளியீட்டு விழா. 

கார்த்திக் சுப்புராஜ் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா மற்றும் படத்தின் இரட்டை இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார், பாடலாசிரியர்  விவேக், இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பாபி சிம்ஹாவும் கலந்து கொண்டார்.

வழக்கமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலிருந்து சற்று மாற்றுப்பட்ட விழாவாக இது இருந்தது. விழா மேடையிலேயே சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பிரதீப்  குமார் கிதார் வாசித்தபடி படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடினார். மேலும், படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலுக்குப் படத்தில் வைபவ் தங்கச்சியாக நடித்துள்ள இந்துஜா நடனமாடினார். 

முதலில்  பேசுவதற்காக மேடையேறிய இசையமைப்பாளர்  பிரதீப் குமார் லயோலோ கல்லூரி பெண்களைக் கவரும் வகையில் 'பிரேமம்' நிவின் பாலி ஸ்டைலில் டிரெஸ் மற்றும் கூலர்ஸ் அணிந்து வந்தார். '' படத்தோட இயக்குநர் ரத்னகுமாருக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். சந்தோஷ் நாராயணனும் நானும் சேர்ந்து இசையமைத்தால் நன்றாகயிருக்குனு அவர்தான் சொன்னார். நானும் சந்தோஷூம் சேர்ந்து வேலைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் 'மேயாத மான்'தான்'' என்றார் பிரதீப்  குமார்.

அவரைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணை மேடைக்கு அழைத்த போது ''டி.ஜே'' போட்ட 'நெருப்புடா' பாடலுக்கு அரங்கம் அதிர, சந்தோஷ் பேச ஆரம்பித்தார். '' காலேஜில் ஆடியோ லான்ச் நடத்துவதற்கு எப்படி ஃபெர்மிஷன்  வாங்குனாங்கனு தெரியலை, 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்குத்தான் ஆடியோ லான்ச் நடக்குது. ஏன்னா, ஆன் லைன்னிலேயே லீக், ரிலீஸ்னு முடிஞ்சிரும். அதனால், இந்த விழாவைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஆர்.ஜே விக்னேஷ், ’நீங்களே லீக் பண்ணுவீர்களா’ என்ன கேட்க, ''நம்ம,  ரிலீஸ் பண்ணினாலே ஓடாது'' என்றார். ''உங்கள் மனசு கஷ்டப்படுற அளவுக்கு யாராவது உங்கள் பாட்டை பாடியிருக்கிறீர்களா'' என்று விக்னேஷ் கேட்க, '' நான்தான், உங்கள் மற்றும் என் மனசு கஷ்டப்படுற அளவுக்கு பாடியிருக்கிறேன்'' என்று சொல்லி எஸ்கேப் ஆனார் சந்தோஷ் நாராயணன்.

பாடலாசிரியர் விவேக் மேடையேறும் போது ''டி.ஜே'', ''ஆளப்போறான் தமிழன்'' பாடலை ஒலிக்கவிட விஜய்  ரசிகர்கள் ஆரவாரத்தில் விசில் தெறிக்க, மேடையில் பேச ஆரம்பித்தார் விவேக். ''இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாட்டு நானும், இயக்குநரும் சேர்ந்து எழுதியிருக்கிறோம். ''மெர்சல்'' மேடைக்கு அப்புறம் நான் ஏறுகின்ற முதல்  மேடையிது. உலகத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான நபர் சந்தோஷ்.

நல்ல மனசு உள்ளவர்கள் கலைக்குள்ளே வரணும். அதுதான் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரொம்ப சரியான ஆளு பிரதீப். அவர் ஒரு நாள்கூட யாரையும் தப்பா பேசி நான் பார்த்ததில்லை. சிம்பிளா சொல்லணும்னா பிரதீப் ஒரு ஓவியா. கார்த்திக் சுப்புராஜின் பெரிய ரசிகன் நான். இந்த டீமில் என்னைச் சேர்த்தற்கு பெரிய நன்றி'' என்றார்.

'' ‘ஈடுயில்லை எவனும், தளபதிதான் வரணும்’னு ஒரு பாடல் வரி 'மேயாத மான்' படத்தில் வருகின்றதே எதற்காக இந்த வரி'' என்று ஆர்.ஜே.விக்னேஷ் கேட்க, ''படத்தில் இடம் பெற்ற தங்கச்சி பாடலுக்காகத்தான் இந்த வரி எழுதினேன். ஆடுறதுக்கு தளபதியை விட்ட வேற ஆளு கிடையாது.  இந்தப் பாடலுக்கான வரிகள் எழுதும் போது டைரக்டர் அப்படியே பார்த்தார். போய்ட்டார். விஷூவலில் பார்த்தால் இந்தப் பாடலுக்காக விஜய்க்கு பெரிய கட் அவுட்டே வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு விஜய்யின் பெரிய ரசிகர் 'மேயாத மான்' டைரக்டர்'' என்றார் பாடலாசிரியர் விவேக்.

படத்தின் இயக்குநர் ரத்னகுமார் பேசும் போது, '' ஒரு எம்.ஏல்.ஏ வை மீட் பண்ணுனா எப்படி முதலில் கார் டிரைவர், மச்சான்னு எல்லோரையும் பிடித்து கடைசியாக எம்.ஏல்.ஏவை பார்ப்போமோ அதே மாதிரிதான் தயாரிப்பாளரை மீட் பண்ண ஒரு வழி குறும்படம் பண்ணுவது. அதே மாதிரிதான் ஒரு குறும்படம் பண்ணி கார்த்திக் சுப்புராஜை மீட் பண்ணினேன். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறும்படம் இயக்கும் இயக்குநர்கள் அடுத்ததாக பெரிய படங்கள் இயக்க வேண்டும் என்பதற்குத்தான் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு கம்பெனியே ஆரம்பித்தார். சில படங்களை பார்க்கிறதுக்கு சும்மா இருக்கலாம். சில படங்களை சும்மா இருக்கிறதுக்காக பார்க்கலாம். அப்படி, சும்மா இருக்கிறதுக்கு பார்க்கத்தான் இந்தப் படத்தை இயக்கினேன்’’ என்றார். 

'மேயாத மான்' படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், '' லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்க முடியாமல் போன பையன் நான். இப்போது, இந்த காலேஜில் என் படத்தின் ஆடியோ லான்ச் நடக்கிறது சந்தோஷமாகயிருக்கு. இந்தப் படம் பல பேருக்கு முதல் படம். வைபவ் செமையான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம். பென்ச் டாக்கீஸ் மூலமாக ஐந்து குறும்படங்களை லான்ச் பண்ணினோம். அதில் ரத்னகுமாரின் 'மது' குறும்படமும் இடம்பெற்றிருந்தது. அப்போதே எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. அந்த குறும்படத்தைத்தான் இப்போது முழுபடமாக எடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான படம் எல்லோருக்கும் பிடிக்கும்'' என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

மேடையில் பேசுவதற்கு நடிகர் வைபவை அழைத்தவுடன் பிரியா பவானி சங்கர்  பேசினால்தான், பேசுவேன் என்று அடம்பிடிக்க பிரியா பவானி சங்கர் மேடைக்கு வந்தார். '' இது என் முதல் படம். எனக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்குப் பெரிய நன்றி. ரொம்ப எதிர்பார்ப்பு இருக்கு. என்னுடைய பெரிய நம்பிக்கை ரசிகர்களாகிய நீங்கள்தான். உங்களை ஏமாற்றாத ஒரு படமாக 'மேயாத மான்' இருக்கும். எனக்கு இந்த நிகழ்ச்சியின் டி.ஜேவை பார்க்க வேண்டும்’’ என்று பிரியா பவானி சங்கர் ஆசைப்பட மகிழ்ச்சியில் பூரத்து போனார் டி.ஜே.சாம். கடைசி வரை எதுவும் உருப்படியாக பேசாமல் மேடையை விட்டு இறங்கினார் நடிகர் வைபவ்.

கடைசியாக நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருதினராக வந்த பாபி சிம்ஹா பேசும் போது, ''எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். படம் பார்த்தேன். சூப்பராக வந்திருக்கு. வைபவ் ஆக்டிங் இந்தப் படத்தில் செமையா வந்திருக்கு'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்