“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது.

மெர்சல்

இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தார் தயாரிப்பாளர் ராஜேந்திரன். இவர் ஏற்கெனவே ‘மெர்சலாகிட்டேன்’ என்ற தலைப்பில் படம் தயாரித்து வருகிறார். ‘அவர்களுக்கு முன் நான்தான் ‘மெர்சலாகிட்டேன்’ தலைப்பை பதிவு பண்ணினேன். அதனால் ‘மெர்சல்’ என்ற தலைப்பைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அக்டோபர் 6ம் தேதி வெளியாகிறது. 

இந்தநிலையில், ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஜல்லிக்கட்டு வீரராக வரும் சீனியர் விஜய், எப்படி மாடுபிடிக்கிறார் என்ற காட்சியைக் காளைமாடுகளை வைத்து படமாக்கியுள்ளார்கள். இதுதவிர சீனியர் விஜயின் மகன்களில் ஒருவரான மேஜிக் கலைஞர், பல்வேறு விதமான விலங்குகளை வைத்து வித்தைகள் காட்டும் காட்சிகள் சென்னை பின்னிமில்லில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சல்

இப்படி விலங்குகளை பயன்படுத்தி படம்பிடிக்கும்போது விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ‘மெர்சல்’ படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை. அதனால் அவர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்தச் சான்றுடன்தான் படத்தை சென்சாருக்கு அனுப்புவது வழக்கம் என்பதால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில் அக்டோபர் 18 அன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றும் செய்தி வெளியானது. 

இந்தத் தகவல்களை ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி ராமசாமியிடம் கூறினோம். அதற்கு அவர் சொன்ன பதில் வருமாறு:

“எங்கள் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு, விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் நடந்தது என்று சொல்வது தவறான செய்தி. விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சிகளைப் படம்பிடிக்கும்போது கால்நடை மருத்துவர்கள் அருகாமையில் இருக்க அவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது 'மெர்சல்' படத்துக்கான அனுமதி சான்றிதழை விலங்குகள் நல வாரியம் கொடுத்துவிட்டது. அடுத்து படத்தை சென்சாருக்கு சமர்பிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறோம். 

மெர்சல்

மெர்சல்’, ‘மெர்சலாகிட்டேன்’ தலைப்பு விஷயத்தில் சில விவரங்களை நினைவுகூற விரும்புகிறேன். 1948-ம் ஆண்டில் 'ஞானசுந்தரி' என்கிற ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. அடுத்து பிரசாந்த் நடித்த 'தமிழ்' படமும், விஜய் நடித்த 'தமிழன்' படமும் ஒரே நேரத்தில் வெளியாகின. இந்த நிகழ்வுகளை மனதில் வைத்து பார்க்கையில், 'மெர்சல்' படத்தலைப்பு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். 

'மெர்சல்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  பரபரப்பாக நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதனால் விஜய்சார் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். ’மெர்சல்' திரைப்படம், தீபாவளி விருந்தாக 'நிச்சயம் ரிலீஸாகும்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!