Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

29 வயதில் 17 வேலைகள் பார்த்து கவிஞரானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! - நினைவுதின சிறப்புப் பகிர்வு #VikatanInfographics

‘‘திருடாதே, பாப்பா திருடாதே!””
‘‘தூங்காதே தம்பி தூங்காதே...’’
‘‘சின்னப்பயலே சின்னப்பயலே... சேதி கேளடா'' -  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பிஞ்சிலிருந்தே நேர்மையை வளர்க்கவும், வாழ்க்கையை நெறிப்படுத்தவும், தேவையற்ற பயங்களைத் துரத்தவுமான எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல்கள் இவை.

''கையில வாங்கினேன் பையில போடல 
காசு போன இடம் தெரியல''
லட்சங்களில் சம்பளம் வாங்கும் இந்தக் காலத்திலும் இதுதான் நிலை. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னும்கூட இதேதான் நிலை என்பதைத்தான் இந்தப் பாடல் சோகத்துடன் நமக்குப் புரிய வைக்கிறது.

விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் தற்போது ஓயாமல் கவலைப்பேச்சுகள் முளைத்தபடி இருக்கின்றன. ஆனால், நாற்பதைம்பது ஆண்டுகளுக்கு முன்பே,


''காடுவௌஞ்சென்ன மச்சான்
நமக்குக் கையும்காலும்தானே மிச்சம்''
என்று கவலைகொண்டதோடு...
''நம்ம நாட்டுக்குப் பொருத்தம் 
நாமே நடத்தும் 
கூட்டுப்பண்ணை விவசாயம்''


என்று விவசாய முறைகளில் நாம் எதைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டி,
''தைபொறந்தா வழிபொறக்கும் தங்கமே தங்கம்''
என்று நம்பிக்கையும் விதைத்திருக்கின்றன இவரின் பாடல்கள்.

இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டதுமே பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள்தாம் பொதுவாக நினைவுக்கு வருவார்கள். ஆனால், அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு எப்போதுமே முன்னே நிற்கும் புரட்சிக் கவிஞன்... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அக்டோபர் 8, அந்தப் புரட்சிக்காரருக்கு நினைவுநாள். ஆம், அற்புதமான, ஆழ்ந்த கருத்துகளுக்குச் சொந்தக்கவி அவர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் பிறந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலமும் கவிபாடும் திறன்பெற்றவர். அண்ணன் கணபதியோடு உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த கல்யாணசுந்தரம், இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை. அண்ணனிடமே அடிப்படைக் கல்விகளைக் கற்றுக்கொண்டார். 

வளர்ந்த பிறகு, திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும், விவசாயச் சங்கங்களிலும் ஈடுபாடுகொண்ட கல்யாணசுந்தரம், தமிழ்மீது கொண்ட காதலால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனிடம் தமிழ்ப் பயின்றார். பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலும் சிலகாலம் பணிபுரிந்தார். இளம்வயதில் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நடிகர் டி.எஸ்.துரைராஜ் உதவியால் சக்தி நாடக சபாவில் இணைந்தார். அப்படியே திரையுலகிலும் கால்வைத்தார். ஆறடி உயரம் கொண்ட ஆஜானபாகுவான கல்யாணசுந்தரம், 1951ல் ‘ராஜகுரு’ கதாபாத்திரத்தில் ‘கவியின் கனவு’ எனும் தமிழ் நாடகத்தில் நடித்தார்.

1953-ல் சக்தி நாடக சபா மூடப்பட்டதால் ‘சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து நடித்தவர், நாடகங்களுக்குப் பாடல்களும் எழுதினார். சினிமா பாடலாசிரியராக அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக உழைத்தார். வாழ்க்கையில் தான் படித்த கடினமான பாடங்களையும் தான்பெற்ற பற்பல அனுபவங்களையும்தாம் அதிகமாகத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், இவரின் நெருங்கிய நண்பர். 1954-ம் ஆண்டில் ஜீவானந்தம் உதவியால் கம்யூனிஸ்ட் பத்திரிகையான ‘ஜனசக்தியில் தன்னுடைய கவிதைகளை வெளியிட்டார் கல்யாணசுந்தரம்.

1954-ம் ஆண்டுக்குப்பின் முழுநேர பாடலாசிரியராக சினிமாவில் தன் பணியைத் தொடர்ந்தார். முதல் பாடலை ‘படித்த பெண்’ என்னும் தமிழ்ப் படத்துக்காக எழுதினார். இத்திரைப்படம் 1956-ல் வெளியானது. அதேஆண்டில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘பாசவலை’ திரைப்படம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பிரபலப்படுத்தியது. பல வெற்றிப் பாடல்களை சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்காக எழுதினார். இவர் எழுதிய பாடல்கள் பலவும்தாம், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமாக அமைந்தன. கிட்டத்தட்ட 189 படங்களுக்குப் பாட்டு எழுதியிருக்கிறார் கல்யாணசுந்தரம். இவரின் பாடல்கள் தற்போது நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

கல்யாணசுந்தரத்தின் மனைவி பெயர் கௌரவாம்பாள். 1959-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டில்தான் (08.10.1959) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென மரணமடைந்தார்.

பட்டுக்கோட்டை

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன், பிரமிப்புடன், பொறாமையுடன், நம்பிக்கையுடன்... பலராலும் பார்க்கப்பட்ட கல்யாணசுந்தரம், தன்னுடைய 29 வயதிலேயே மறைந்தது, பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய 29 ஆண்டுகால வாழ்க்கையில் விவசாயி, மாடுமேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு, கடைசியில் கவிஞராக உருவெடுத்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கல்யாணசுந்தரம்.

அவரின் பாடல்களில் இருக்கும் வரிகள் வெறுமனே காசுக்காகப் படைக்கப்பட்டவையல்ல. ஒவ்வொன்றும் அவருடைய இயல்பான வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவைதாம். இதற்கு உதாரணமாகப் பலரும் சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்...

சினிமா கம்பெனிக்குப் பாட்டெழுதிக் கொடுத்தவகையில் பணம் வந்து சேரவில்லை. அதைக் கேட்க படத்தயாரிப்பாளரைத் தேடிப்போனார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது. பணத்தை வாங்காமல் இங்கிருந்து நகரக் கூடாது என்கிற உறுதியுடன் அங்கேயே நின்றார் கல்யாணசுந்தரம். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் படத்தயாரிப்பாளர்.

ஒரு தாளை எடுத்து அதில் சில வரிகள் எழுதி, அந்தத் தயாரிப்பாளரின் மேஜைமீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் கல்யாணசுந்தரம். என்ன ஆச்சர்யம்... படக்கம்பெனியைச் சேர்ந்த ஓர் ஆள் அலறியடித்துக்கொண்டு அடுத்த சில மணி நேரங்களில் கல்யாணசுந்தரத்திடம் ஓடிவந்து பணத்தைக் கொடுத்தார். 

‘தாயால் வளர்ந்தேன்; 
தமிழால் அறிவு பெற்றேன்; 
நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; 
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’

இதுதான் அந்தத் தாளில் கல்யாணசுந்தரம் எழுதியிருந்த வரிகள்!
பாட்டுக்கோட்டை, மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டையார் என்றெல்லாம் தமிழகத்தில் பலருடைய மனங்களிலும் தமிழக வரலாற்றிலும் பதிந்துகிடக்கிறான் இந்தப் புரட்சிக் கவிஞன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement