Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“ ‘தூரத்துச் சொந்தம் மாதிரி எப்பவாச்சும்தான் வர்றே’னு இளையராஜா மாமா கேட்பார்!” வி.ஜே. விலாசினி

விலாசினி

Chennai: 

" 'அய்யய்யோ... லவ் லெட்டரா? எனக்கா? வேணாம். நான் படிக்கணும். படிக்கிற வயசுல லவ்வெல்லாம் பண்ண மாட்டேன். வீட்டுக்குத் தெரிஞ்சா அடிப் பின்னிடுவாங்க' என 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஶ்ரீதிவ்யாவுக்கு பேசின டப்பிங், நல்ல ரீச் கொடுத்துச்சு. என் டப்பிங் கேரியரும் வேகமா வளர்ந்துச்சு" - உற்சாகமாகப் பேசுகிறார், டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் ஆங்கர், விலாசினி. 

விலாசினி

"உங்க மீடியா என்ட்ரி பற்றி...'' 

"காலேஜ் முடிச்சுட்டு, மீடியா ஆர்வத்தில் வாய்ப்புத் தேட ஆரம்பிச்சேன். நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திச்சாலும் தொடர்ந்து முயற்சி செஞ்சேன். 2007-ம் வருஷம், ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே ஆனேன். சில பண்பலைகளில் வொர்க் பண்ணிட்டு, 'ஆதித்யா' சேனலில் தொகுப்பாளராகச் சேர்ந்தேன். நிறைய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் வாய்ஸ் ஓவர் செய்தேன். மூணு வருஷத்தில் தொகுப்பாளர் பணியை விட்டுட்டு, மறுபடியும் ரேடியோ சிட்டி பண்பலையில் ஹாசினி என்கிற பெயரில் வொர்க் பண்ணினேன்." 

"எதனால் அவமானங்களை சந்திச்சீங்க?'' 

" 'நீயெல்லாம் வீஜேவா?'னு என் நிறத்தையும் உடல் தோற்றத்தையும் நிறையவே அவமானப்படுத்தினாங்க. ஒண்ணு, ரெண்டு இல்லை. பல இடங்களில் இதே அவமானம்தான். அதனால், நிறப் பாகுபாடு பார்த்து பேசுறவங்க யாரா இருந்தாலும், 'என் திறமையைப் பாருங்க. நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன?'னு கண்டிப்பேன். அதனால், என்னைக் கோபக்காரினு சொல்லி விரட்டுவாங்க. தொடர்ந்து முயற்சி செய்துதான் என்னை நிரூபிச்சேன்.'' 

ஶ்ரீதிவ்யா உடன் விலாசினி

"டப்பிங் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைச்சது எப்படி?'' 

"இயக்குநர் பாண்டிராஜ் சார்தான் என்னை டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகப்படுத்தினார். டப்பிங் நமக்கு செட் ஆகுமானு தயங்கினேன். ஆனால், 'நீ பேசினா நல்லா இருக்கும்'னு பாண்டிராஜ் சார் ஊக்கப்படுத்தினார், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடிகை ரெஜினாவுக்கு டப்பிங் பேச வெச்சார். அடுத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'காக்கிச்சட்டை' உள்ளிட்ட, நடிகை ஶ்ரீதிவ்யாவின் எல்லா படங்களிலும் டப்பிங் பேசுறேன். 'ருத்ரமாதேவி' (நித்யா மேனன்), 'பொதுவாக என் மனசு' தங்கம் (நிவேதா பெத்துராஜ்), 'யாக்கை' (சுவாதி) என 75 படங்களுக்கும் மேல் டப்பிங் கொடுத்துட்டேன். பல சேனல்களில் ஃப்ரீலான்சராகவும், வெளிநிகழ்ச்சிகளிலும் ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன்." 

இளையராஜாவுடன் விலாசினி

"உங்க மாமா இளையராஜாவை சந்திப்பீங்களா?" 

"என் அப்பாவின் அக்கா கணவர், இளையராஜா மாமா. அவர்தான் எனக்குப் பெயர்வெச்சார். மாமாவின் விரல் பிடிச்சு அதிக நேரம் சுற்றின குழந்தை நான். பிறகு சந்திக்கிறது குறைஞ்சுடுச்சு. விஷேச நாள்களில் சந்திக்கப் போகும்போது, 'என்ன நீ, ஏதோ தூரத்து சொந்தம் மாதிரி எப்பவாச்சும் வர்றே. அடிக்கடி வந்துப் போகணும்'னு சொல்லுவார். என் ஆங்கரிங், டப்பிங் வேலைகள் பற்றியும் ரொம்பவே அக்கறையோடு விசாரிப்பார். என் மேல் ரொம்பவே பாசம் வெச்சிருக்கார்.'' 

"ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, நீங்க அமைதியாகிட்ட மாதிரி தெரியுதே..." 

"பல நாள்களாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரமாகப் போராடினேன். போராட்டத்தின் கடைசி நாளில், நான் ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளர்ங்கிற போர்வையைப் போத்தி என்னை ரொம்ப காயப்படுத்திட்டாங்க. ரொம்பவே விரக்தி அடைஞ்சுட்டேன். அப்புறம், அந்தப் பிரச்னையிலிருந்து மீண்டு, பழையபடி என் வேலையில் அமைதியா கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆனாலும், எனக்குள் சமூகப் பிரச்னைகளுக்குப் போராடும் குணமும் எண்ணமும் இருந்துட்டே இருக்கு."

விலாசினி

“போராட்டத்தில் பங்கெடுக்காமல் இருக்க, தடையாக இருப்பது எது?" 

"ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்துக்குப் பிறகு, கதிராமங்கலம், விவசாயிகள் போராட்டம், நீட் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கு. அதுக்காக, மக்களும் போராட ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால், போராட்டத்தின் தொடக்கத்தில் இருக்கும் வீரியம், சில நாள்கள்லயே நீர்த்துப்போயிருது. அதுக்குப் போராட்டக்காரர்கள் மேல் தொடுக்கப்படும் அரசின் பன்முனைத் தாக்குதல் பெரிய காரணம். அப்புறம், 'பிக் பாஸ்', 'ஜிமிக்கி கம்மல்'னு நம் கவனம் திசை திருப்பப்படுது. இதனால், மக்களின் போராட்டம் பெருசா வெற்றி பெறுவதில்லை. மக்களுக்கு ஆதரவாகப் போராட நினைச்சாலும், மறுபடியும் என் மேல அரசியல் சாயம் பூசிடுவாங்களோ என்கிற வேதனையில் ஒதுங்கி இருக்கேன். ஆனாலும், சமூகப் பிரச்னைகளைத் தொடர்ந்து கவனிச்சுட்டுதான் இருக்கேன்'' என்கிறார் விலாசினி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement