Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்! #HBDSSRajamouli

சிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். 'அமர் சித்ர' கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை!

ராஜமெளலி

1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான 'விஜயேந்திர பிரசாத்' தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங்கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.

தன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.

ராஜமெளலி

பழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த 'சாந்தி நிவாசம்' என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.

கதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான 'Ninnu Chudalani' யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.

என்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.

தான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே 'சிம்ஹாத்ரி'. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது 'ராஜமௌலி' யார் என்று. 

ராஜமெளலி

அடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ணா(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக... அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். ஆந்திராவில் 'ஜக்கண்ணா' என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

ராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். 'சிம்ஹாத்ரி' முதல் 'பாகுபலி' வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.

எப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்புவதுதான் ராஜமௌலியின் வழக்கம்.

ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மேருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான்  நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.

ராஜமெளலி

இவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த 'அதிசயப் பிறவி'யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.

இவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,'பழிவாங்கலே' முதன்மையாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,'ஹீரோவின் பலத்தை காட்டவே' இவ்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.

ராஜமெளலி

பாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.

இசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.

தன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.

தொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட 'மஹாபாரதம்' படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்... ஜெய் மகிழ்மதி!

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜக்கண்ணா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்