"நான் இந்தப் படத்தைப் பார்க்கவே மாட்டேன்!" - தான் நடித்த படம் பற்றி ஆண்ட்ரியா

தமிழில் 'ஜில் ஜங் ஜக்' படத்தைத் தொடர்ந்து சித்தார்த் நடித்திருக்கும் படம் 'அவள்'. த்ரில் கலந்த ஹாரர் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சித்தார்த்தின் எடாகி என்டர்டெயின்மென்ட்டும், வயாகாம் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இவருடன் சேர்ந்து சித்தார்த்தும் கதை எழுதியுள்ளார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
  

அவள்

இதில் பேசிய சித்தார்த், " நானும் மிலிந்தும் 17 வருடங்களாக நண்பர்கள். நாங்கள் ரெண்டு பேரும் மணிரத்னம் சாரிடம் ஒரே நாளில் தான் உதவி இயக்குநராக சேர்ந்தோம். இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதிய ஒன்று. நாங்கள் ஹாரர் படங்களுக்குத் தீவிர ரசிகர்கள். நம் ஊரில் எல்லோரும் பேசும்மாதிரி ஒரு ஹாரர் படம் பண்ண வேண்டும், மக்களை உட்கார வைச்சு பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, கனவு எல்லாம். அது இப்போது உண்மையாகி உள்ளது. மிலிந்த் ராவ் இந்தப் படத்திற்குப் பிறகு நன்றாக பேசப்படுவார். அதேபோல, படத்தின் கதாநாயகி ஆன்ட்ரியா மிகப்பெரிய பலம். 'தரமணி' படத்துலேயே பார்த்துருப்பீர்கள். நானும் அதுல் குல்கர்னியும் 12 வருடம் கழித்து சேர்ந்து படம் நடித்திருக்கிறோம்" என்று படக்குழுவை அறிமுகப்படுத்தினார் சித்தார்த். 

அவள்

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், "நான்கரை வருடமாக உழைத்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் படம் டெக்னிக்கல் ரீதியாக நிச்சயம் பேசப்படும். பயங்கரமாக உழைத்தார்கள் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும்" என்றார். அடுத்த பேசிய ஆன்ட்ரியா, "மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனக்கு வித்தியாசமான கதைகள் வந்துகொண்டே இருக்கிறது. இதுதான் என்னை இன்னும் பலப்படுத்தும் என்று நினைக்கிறேன். அதற்கு வாய்ப்பு கொடுத்த சித்தார்த்திற்கும் மிலிந்திற்கும் நன்றி. ஆனா, நான் இந்த படம் பார்க்கப்போவது இல்லை. ஏனெனில், எனக்குக் கொஞ்சம் பயம் இந்தமாதிரியான ஹாரர் படங்கள் பார்க்கும்போது. அதுல் குல்கர்னியுடன் சேர்ந்து நடித்தது மறக்க முடியாது" என்றபடி விடைபெற்றார். 

அவள்

"எனக்குத் தமிழ் சினிமாதான் முதல் வாய்ப்பைக் கொடுத்தது. கமல் சாருடன் 'ஹே ராம்'. அவர் தான் எனக்கு சினிமாவை கற்றுக்கொடுத்தார். நானும் சித்தார்த்தும் 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் நடித்துள்ளோம். ஒரு நல்ல சினிமா நல்ல அணியாலும் நண்பர்களாலும் உருவாக்கப்படுகிறது. இந்தப் படக்குழு மிகவும் ஸ்பெஷல். பாலிவுட் சினிமா எப்போதும் தமிழ் சினிமாவை கவனித்துக்கோண்டு இருக்கும். காரணம், தமிழ் சினிமாவின் எழுத்து, தொழில்நுட்பம், இசை. இந்தப் படம் இந்திய சினிமாவில் நிச்சயம் பேசப்படும் ஹாரர் திரைப்படமாக இருக்கும். இளம்படை நிறைய ஐடியாக்களுக்குடன் இருக்கிறார்கள்" என்றார் அதுல் குல்கர்னி. இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் ஒரு பாடலும் திரையிடப்பட்டது. இறுதியில் பேசிய சித்தார்த், "படம் நவம்பர் 3ம் தேதி மூன்று மொழிகளிலும் திரைக்கு வரவிருக்கிறது. தீபாவளியும் வருகிறது. எல்லோரும் மெர்சலாக இருப்பீர்கள். இருந்தும், உங்கள் ஆதரவு தேவை" என்றார் புன்னகைத்தபடியே.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!