Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பேராண்மை படம் ரசிகனுக்கும் கோடம்பாக்கத்துக்கும் கற்றுக்கொடுத்தது என்ன..!? #9YearsOfPeranmai

பேராண்மை

ஒரு நாட்டின் விவசாயத்தில் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தும் பொருட்டு ஒரு செயற்கைக்கோள் அந்நாட்டின் விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த செயற்கைகோளை அழிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் காடு வாயிலாக பல விதமான தொழில்நுட்ப ஆயுதங்களுடன் ஊடுருவி உள்ளனர். அக்கும்பலை ஐந்து தேசிய மாணவர் படை மானவிகளைக்கொண்டு கதாநாயகன் அழிப்பது கதை. இப்படி ஒரு கதையை கேட்கும் போது நம்முள் ஒரு வர்த்தக ரீதியிலான அம்சங்களைக்கொண்ட ஒரு திரைப்படம்தான் தோன்றும். ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தில் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எப்படியெல்லாம் சமுதாயத்தால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், இடஒதுக்கீடு குறித்து ஒரு தெளிவான புரிதலையும், பொதுவுடைமை கொள்கைகளையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க முடியும் என பேராண்மை திரைப்படம் மூலம் ரசிகனுக்கும் கோடம்பாக்கத்துக்கும் கற்றுக்கொடுத்தவர் இயக்குநர் ஜனநாதன். இன்றோடு(16/10/2017) பேராண்மை திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பேராண்மை திரைப்படம் குறித்து ஒரு சிறப்பு பகிர்வு.

இப்படிப்பட்ட ஒரு கதையில் நாயகனின் சாகச செயல்கள், தேசப்பற்று என பலவற்றை புகுத்த வாய்ப்பு இருந்தும், தான் சொல்லவந்த கருத்தை எவ்விதமான வர்த்தக சமரசங்களும் இல்லாமல் பழங்குடி இன மக்களின் வாழ்கையை அப்படியே சித்தரித்ததற்காக இயக்குநர் ஜனநாதனுக்கும் இன்று மீண்டும் நம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

“என்னதான் ஜெயம் ரவி நிமிர்ந்து நில், தனி ஒருவன், பூலோகம்னு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டினாலும் அதுக்கெல்லாம் விதை நான் போட்டது” என தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பேசிய வசனத்தின் template-ஐ வைத்து மீம் போடும் அளவிற்கு ஜெயம் ரவியின் முழு திறமையையும் நமக்கு எடுத்துக்காட்டிய திரைப்படம் பேராண்மை. கதைக்கு தேவை என்றால் எவ்விதமான பாத்திரத்திலும் நடிக்கும் தைரியம் கொண்ட தமிழ் சினிமா நாயகர்களின் பட்டியலில் ஜெயம் ரவியின் பெயரை சொல்லும் அளவிற்கும் தன் உழைப்பை கொட்டிக் கொடுத்திருப்பார். கோவனத்துடன் மாட்டிற்கு பிரசவம் பார்ப்பதாகட்டும், ஐந்து மாணவிகள் கொடுக்கும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளும்போது முகத்தில் காட்டும் முதிர்ச்சியிலும், எதிரிகளுடன் சண்டை போடுவதாகட்டும் படம் நெடுகிலும் துருவனாகவே நம்முன் தோன்றினார்.

பேராண்மை

திரைப்படத்தில் முன்னணி கதாநாயகி என யாரும் இல்லையென்றாலும் தேசிய மாணவர் படை மாணவிகளாக நடித்த ஐவரின் நடிப்பும் சிறப்பானதாகவே அமைந்தது. தன்ஷிகா, வசுந்தரா, சரண்யா, வர்ஷா அஷ்வதி மற்றும் லியாஸ்ரீ ஆகியோரை பேராண்மைக்கு பிறகும் நாம் பல திரைப்படங்களில் பார்த்தோம். அதுவே அவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டு. அதிலும் தன்ஷிகா பேராண்மையில் தொடங்கி கபாலி வரை அருமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

‘அவன விடாதீங்கடா... கொல்லுங்கடா...’ என டாடா சுமோவில் அடியாட்களுடன் பறந்து கொண்டிருந்த வில்லன்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான வில்லனாக ரோலண்டு கிக்கிங்கேர் (Roland Kickinger) கெத்து காட்டினார். ஆறடி உயரத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து தன் பங்குக்கு திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தார்.

பேராண்மை

பொதுவுடைமை கொள்கைகளையும் மலைவாழ் பகுதி மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்யும் ஒரு திரைப்படத்தில் வசனங்கள்தான் மிக உயிர்ப்பாக இருக்க முடியும். அந்த வகையில் “பின்கோடு இல்லாதப்பவே இந்த புத்தகமெல்லாம் படிக்கிரானுக கான்வென்ட்ல படிச்சா எங்களையே துரத்திருவீங்கடா”, “அரசாங்க காசுல படிச்சிட்டு அரசாங்கத்துக்கு எதிராகவே அரசியல் பண்ணுவீங்களா”, “இடஒதுக்கீட்டில் படிச்ச உங்கள எங்க குருவா இருக்க தகுதி இல்லன்னு நினைச்சோம்” போன்ற வசனங்கள் பழங்குடியின மக்களின் மீது சமூதாயம் கொண்ட அதிகாரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தின. “கிராமத்து பொண்ணுங்களுக்கு முந்தானையை ஒதுக்கியே காலம் போச்சு; நகரத்து பொண்ணுங்களுக்கு முடியை ஒதுக்கியே காலம் போச்சு”, “பெண்கள் மிகப்பெரிய சக்தி அதை தேவை இல்லாம வீணடிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்” போன்ற வசனங்கள் ஆங்காங்கே பெண்ணியமும் பேசின. சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு என கரும்பலகையில் எழுதப்பட்ட வாசகம் இடம்பெற்ற காட்சிகள் வரலாற்றில் அம்மக்களின் பக்கங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டின. அதுபோலவே படம் முழுவதிலும் கார்ல் மார்க்சை நாம் பார்க்க முடிந்தது.

படத்தின் அடிக்கடி வந்து கிச்சுக்கிச்சு மூட்டிய வைகைப்புயல், ஊர்வசி மற்றும் பொன்வண்ணனின் பாத்திர படைப்புகள் மிகக் கச்சிதம். திரைப்படத்தின் இன்னொரு பலம் சதீஷ் குமாரின்  ஒளிப்பதிவு. இரண்டரை மணிநேரமும் ஒரு காட்டினுள் பயணம் செய்த அனுபவத்தையே நமக்கு கொடுத்தது.

ஜெயம் ரவியும் ஐந்து மாணவிகளும் தங்கள் உயிரைப் பணையம் வைத்து இருவர் உயிர்த் தியாகம் செய்தும் பசுமை 1 செயற்கைகோளை காப்பாற்றினாலும் இறுதியில் பொன்வண்ணன் விருது வாங்கும் இடத்தில் எப்படி நம் சமூதாயம் நமக்கு அறியாமை என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக அரசியல் செய்கிறது என்பதை எடுத்துக்காட்டிய வகையில் பேராண்மை நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement