கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! | concert for a cause in aid of cancer by andrea and agam

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (17/10/2017)

கடைசி தொடர்பு:18:17 (17/10/2017)

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்பதால், புற்றுநோய் வகைகளும் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதைத் தடுக்க ஏராளமான மருத்துவ வசதிகளும் தொழில்நுட்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து, பல ரோட்டரி சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் கேன்சரைத் தடுக்க பல வழிகளில் விழிப்பு உணர்வு செய்துவருகின்றனர். இதையடுத்து, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஆன்ட்ரியா

இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்குழுவான அகம் குழுவினரும் ஆண்ட்ரியாவின் இசைக்குழுவினரும் பங்கேற்றனர். அகம் குழுவினர் கர்நாடக சங்கீதத்தை இன்றைய மாடர்ன் இசைக்கருவிகளை வைத்து ராக் ஸ்டைலில் பாடுவதில் வல்லவர்கள். இவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்களின் முதல் சினிமா பாடல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சோலோ' படத்தில் இடம்பெற்றது. மேடையில் அகம் குழுவின் ப்ரோமோ திரையிடப்பட்டவுடனே அவர்களின் ரசிகர்கள் கூட்டத்தில், அவர்கள் எப்போது தோன்றுவார்கள் என்ற பேச்சு வர ஆரம்பித்தது. மேடையில் அகம் குழுவினர் வந்து நின்றவுடனே அவர்களது ரசிகர்கள் உற்சாகமானார்கள். பல மொழிகளில் அவர்கள் பாடியது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுடன் அவ்வப்போது உரையாடி அவர்களை மியூசிக் மோடிலேயே வைத்திருந்தார். அவர்கள் இசையமைத்த 'சோலோ' மலையாள வெர்ஷனில் 'ஒரு வாஞ்சி பாட்டு', 'தாலோளம்' என்ற பாடலைப் பாடி அப்ளாஸ் அள்ளினர். 'சோலோ' படத்தின் 11 இசையமைப்பாளர்களில் இவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைமேடையில் அவர்கள் பாடப்பாட கீழிருந்த பார்வையாளர்களும் அவருடன் சேர்ந்து கோரஸாக பாட ஆரம்பித்தனர். இதைக்கண்டு உற்சாகமடைந்த அகம் குழுவினர் ட்ரம்ஸில் பல உத்திகளைக் கையாண்டு அரங்கத்தை ஆட வைத்தனர். அவர்களின் நிறைவுப் பகுதி வந்தவுடன், 'அகம் வி மிஸ் யூ' என்றது அவர்களது ரசிகர் பட்டாளம். 

ஆன்ட்ரியா

இரண்டாவது பகுதியில் ஆண்ட்ரியாவின் குழு வருவதற்கு முன்பாகச் சிறப்பு விருந்தினர் கெளரவிக்கப்பட்டனர். இந்த தி நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனின் மகள் மீனாட்சியும் அவர் கணவர் பெரிய கருப்பனும் தான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். ஆண்ட்ரியாவின் இசைக்குழு அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்தனர். அவர் பாட ஆரம்பிக்கும் முன்னரே ஒவ்வொரு பாடலாகச் சொல்லி பாடச் சொன்னார்கள் ரசிகர்கள். முதலில் அவரது ஹிட்டான 'இது வரை' பாடல் பாட ஆரம்பித்தவுடன் இசை மழையில் நனையத் தயாராகியது அரங்கம். இளையராஜாவின் 'வா வா பக்கம் வா', 'ஓ க்ரேஸி மின்னல்', 'மாலை நேரம்', 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' போன்ற பாடல்களைப் பாடிமுடித்தவுடன் அவரது ஹைலைட் பாடல்களை ஆரம்பித்தார். 'ஹு இஸ் த ஹீரோ', 'மாமா ட்ரவுசர் கழன்டுச்சு', 'குகூள் குகூள்' போன்ற பாடல்களை மேடையில் ஆண்ட்ரியா பாடப்பாட இருக்கையில் இருந்தவர் அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். இசை நிகழ்ச்சி ஆரம்பித்து நிறைவுபெறும் வரை உற்சாகத்துக்கும் ஆரவாரத்துக்கும் பஞ்சமில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் நிதி அனைத்தும் கேன்சர் சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இவர்கள் செய்யும் நற்செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்