’அன்பே வா’ முதல் ’உலகம் சுற்றும் வாலிபன்’ வரை... எம்.ஜி.ஆர் படங்களின் சிம்பிள் சிங்கிள் கரு! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 9 | The one line of MGR movies. MGR series episode 9

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (20/10/2017)

கடைசி தொடர்பு:10:42 (21/10/2017)

’அன்பே வா’ முதல் ’உலகம் சுற்றும் வாலிபன்’ வரை... எம்.ஜி.ஆர் படங்களின் சிம்பிள் சிங்கிள் கரு! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 9

எம்.ஜி.ஆர்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எம்.ஜி.ஆர் படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். என்னுடைய அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும் திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்

அகம்-புறம் 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங்கள் தம் பாடுபொருளை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்துள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்குரிய இந்தப் பண்டைய இலக்கண நூல்கள் உலகில் வேறு எந்தச் செவ்வியல் மொழியிலும் இல்லாத தனிப்பெரும் பண்பாக, மனித வாழ்க்கையின் செயற்பாடுகளுக்கு வகுத்துள்ளன. அந்த இலக்கண வகைப்படி இலக்கியங்கள் அகம், புறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் universal எனப்படும் love and war-ஐ குறிப்பவையாகும்.

அகத்தினை

மனிதனின் அந்தரங்க வாழ்வு அல்லது காதல் வாழ்க்கை அகத்திணை எனப்படும். இதற்குச் சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.

 

எம்.ஜி.ஆர்

பூத் தரு புணர்ச்சி

அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத் தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும். சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆரை ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.

புனல் தரு புணர்ச்சி

சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.

மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல் தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.

எம்.ஜி.ஆர்

மதுரை வீரன் கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது.

களிறு தரு புணர்ச்சி

களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர்

‘நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.

‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்.

ஆக காதல் என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் ரசிக்கப்படுவது போல எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுகிறது. எனவே, எம்.ஜி.ஆர் தன் படத்தில் சொந்தம், பந்தம் பாசம் போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் - காதல் பாடல்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

புறத்திணை 

புறத்திணை என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.

உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.

கிரேக்க இலக்கியத்தில் the trojan war பேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஒருவன் பத்துப்பேரை அடிப்பதா?

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் படத்தில் அவர் ஒருவரே பத்துப்பேரை அடித்து உதைத்து ஓடவைப்பது சாத்தியமா? என்று அவரிடம் கேட்டதற்கு புராணத்தில் அர்ஜூனன் இதே செயலைச் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறீர்களே என்றார். அந்த இதிகாச புராண நாட்டுப் புறக் கதைத் தாக்கமே எம்.ஜி.ஆர் படங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது.

மேனாட்டறிஞர் ஒருவர் ஹீரோ என்பதற்கு இலக்கணம் வகுக்கும்போது, “ஒரு மனிதனால் செய்யக்கூடியதை, ஆனால் எல்லா மனிதராலும் செய்ய இயலாததைச் செய்பவனே ஹீரோ” என்கிறார். இந்த இலக்கணம் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தும். அவர் செய்யும் சண்டைக்காட்சி ஒரு வீரமும் விவேகமும் உடைய மனிதனால் செய்யக்கூடிய வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

சுவரை உடைத்து உள்ளே செல்வதா?

எம்.ஜி.ஆர் படங்களில் கதவை உடைத்து உள்ளே போகும் காட்சிகள் உண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்து பலருக்கும் ஐயம் தோன்றுவதுண்டு. கராத்தே மணி என்பவர் சண்டைப் பயிற்சிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு படத்தில் சுவரை உடைக்கும் காட்சியில் நிஜமான சுவரை உடைத்துக் காட்டினார். ஆனால், இவர் சும்மா சொல்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கருதிய கேமராமேன் கேமராவை இயக்காமல் இவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதை கராத்தே மணி ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆக சுவரை உடைப்பதும், கதவை உடைப்பதும் ஒரு மனிதனால் செய்யக்கூடியதுதான் என்பது நிரூபணமாகிவிட்டது. கராத்தே மணி மாதிரி ஒருவர் செய்யக் கூடியதைத்தான் எம்.ஜி.ஆர் தனது படங்களில் செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் ஹீரோதான்.

காதலும் போரும்

காதலும் போரும் எல்லாக் காலத்திலும் மனித இனத்துக்குப் பரவசமூட்டுவதாக இருப்பதற்கு முக்கிய காரணம் இரண்டுமே மனித உயிர் சார்ந்ததாகும். காதலால் மனித உயிர் ஜனிக்கிறது போரால் மனித உயிர் மரிக்கிறது. இந்த இரண்டுமே மனிதனை மிகுந்த பரவசத்துக்குள்ளாக்குகின்றன. எனவே, மனிதர் வாழும் காலம் எல்லாம் ஆண்-பெண் ஈர்ப்பும், ஆண் - ஆண் மோதலும் மனிதர்களுக்கு அலுக்கவே அலுக்காத நிரந்தரப் பரவசங்கள் ஆகும்.

உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்

எம்.ஜி.ஆர்

காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
 ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.

சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.

தேடல் என்ற அடிநாதம்

காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.

உலகில் ஓர் ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர் ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்