''விஜய்... பா.ஜ.க-வினருக்கு மாலை போட்டுப் பாராட்டுங்கள்..!'' - ஓர் இயக்குநரின் உத்தரவு | This director talks about mersal movie issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (22/10/2017)

கடைசி தொடர்பு:17:49 (22/10/2017)

''விஜய்... பா.ஜ.க-வினருக்கு மாலை போட்டுப் பாராட்டுங்கள்..!'' - ஓர் இயக்குநரின் உத்தரவு

விஜய்யின் 'மெர்சல்' படத்துக்குத் தன்னுடைய ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ள இயக்குநர் சீனுராமசாமியிடம் பேசினோம். ''கர்நாடகாவில்  நடிகர் ராஜ்குமார், 'கன்னட மொழியில் வருகின்ற படங்கள் நம் தாய்மொழி திரைப்படங்கள்; அதன் வளர்ச்சியை நாமே தடுத்துவிடக் கூடாது' என்று எடுத்துச்சொல்லி  அன்றைய அரசாங்கத்திடம் போராடி, கன்னடப் படங்களுக்கு நிரந்தரமாக வரிவிலக்கு வாங்கிக்கொடுத்தார். அது இன்றளவும் தொடர்ந்துவருகிறது. இன்றைக்குத் தமிழ் சினிமாவுக்கு விதித்துள்ள இரட்டை வரி விதிப்பு முறையால் சினிமா உலகினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே சீனப் பெருஞ்சுவர் உயரத்துக்கு இடைவெளி ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சிறு பட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர்களே கிடைப்பதில்லை. 

சீனுராமசாமி

இப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்கும் சூழ்நிலையில் தமிழ்சினிமா இருந்து வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் திரைப்படக் கலைஞர்கள் சுட்டிக்காட்டும் கருத்துகளில் சரியானவைகள் இல்லாமல் இருந்தால் அவற்றை சீர்தூக்கிக் களையும் வேலையில் இறங்க வேண்டும், அந்தக் கலைஞர்களுக்கு எதிர்வினையாகச் செயல்படுவது எந்தவகையில் நியாயம்?

'மெர்சல்' படத்தைப் பெருவாரியான மக்கள் பார்த்து வருகிறர்கள். அந்தப் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து விஜய் அவதூறாக வசனம் எதுவும் பேசவில்லை. சமூகத்துக்குத் தேவையான, நியாயமான வசனத்தை அவர் பேசும்போது அதை நிவர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை. ஜி.எஸ்.டி வரியை நீக்கச்சொன்னால் மறுக்கிறார்கள், வசனத்தை நீக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதேபோல்தான் என்னுடைய 'நீர்ப்பறவை' படத்தில் 'இலங்கை அரசாங்கம்' என்கிற வார்த்தைகளையே பேசக்கூடாது கெடுபிடி செய்தனர். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள சென்சார் போர்டு உறுப்பினர்கள் அனைவரும் 'மெர்சல்' படத்தைப் பார்த்து சர்டிபிகேட் கொடுத்த பின்னரே ரிலீஸ் ஆகியிருக்கிறது. 'மெர்சல்' படத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் வசனங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. சிங்கப்பூரில் 8 சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்படுகிறது, மக்களுக்கு இலவச மருத்துவத்தையும் அளிக்கிறது. இங்கே 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கும் அரசாங்கம், ஏன் மக்களுக்கு இலவசமாக மருத்துவத்தை தரக் கூடாது? என்பதைப் படத்தில் சுட்டிக்காட்டுகிறார், விஜய். 

சீனுராமசாமி

விஜய்யைப் பொறுத்தவரை, தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வோர் அரசியல் வசனம் பேசி வருகிறார். 'கத்தி' படத்தில் 2ஜி ஊழல் பற்றிப் பேசினார். 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்துப் பேசியிருக்கிறார். விஜய் நினைத்திருந்தால் 'கத்தி' படத்திலும் சரி, 'மெர்சல்' படத்திலும் சரி... அரசியல் சார்ந்த வசனங்களை டைரக்டர்களிடம் நீக்கச்சொல்லி தவிர்த்து இருக்கலாம். ஆக, விஜய் அப்படிச் செய்யவில்லை. விருப்பப்பட்டுத்தான் அரசியல் வசனங்களைப் பேசியிருக்கிறார். தீபாவளிக்கு ரிலீஸான 'மெர்சல்' வெற்றித் திரைப்படம்தான் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் 'மெர்சல்' படத்துக்கு இலவச விளம்பரத்தைத் தேடிக்கொடுத்த பி.ஜே.பி-யை நிச்சயம் மனம்திறந்து பாராட்ட வேண்டும். 'மெர்சல்' படத்துக்கு தீபாவளி போனஸாக இந்தியா முழுவதும் விளம்பரம் செய்த பி.ஜே.பி பிரமுகர்களை விஜய் தேடிப்போய் மாலைபோட்டு பாராட்ட வேண்டும்" என்றார் ஜாலியாக

மேலும், " மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறித்து ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. அதில் பி.ஜே.பி கட்சிப் பிரமுகர்களே பங்கேற்றுப் பேசி வருகிறார்கள், அவற்றை எல்லாம் எதிர்க்கவில்லை. தவிர, எல்லாப் பத்திரிகைகளிலும் ஜி.எஸ்.டி வரி குறித்த எதிர்ப்புக் கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கிறது, அதனை யாரும் எதிர்க்கவில்லை. விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி வசனத்துக்கு மட்டும் திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. முடி வெட்டுவதற்கு 70 ரூபாய், அதற்கு ஜி.எஸ்.டி 40 ரூபாய் என்று சொல்வது, 'ஏன்டா முடியை வெட்டிக் கொள்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்பதுபோல் இருக்கிறது. அப்புறமென்ன எல்லோரும் தியாகராஜ பாகவதர் போல நீளமாக முடி வைத்துக்கொண்டு திரியவேண்டியதுதான். குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்று எல்லோரும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு அம்மையார் 'குழந்தைகள் எல்லாம் எவ்வளவு தன்னம்பிக்கையோடு வேலைக்குச் செல்கிறார்கள், அவர்களை ஏன் தடுக்கிறீர்கள்?' என்று பேசுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும், விந்தையாகவும் இருக்கிறது. '' என்கிறார், இயக்குநர் சீனுராமசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close