வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (23/10/2017)

கடைசி தொடர்பு:10:35 (24/10/2017)

"வாவ்... எமோஷனல் கமல், விரும்பி ரசித்த விஜய்!" - 'மெர்சல்' விஷ்ணு #VikatanExclusive

இயக்குநர் அட்லீயின் முதல் குறும்படமான முகப்புத்தகத்தின் மூலம் உதவி இயக்குநராகத் தனது கெரியரை ஆரம்பித்தாலும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்கிற தனது கனவை விடாமல் பிடித்துத் தற்போது மெர்சலாய் என்ட்ரி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. மெர்சலான அனுபவங்களைப் பற்றி கேட்க, அவரைத் தொடர்புகொண்டோம். 

மெர்சல் படத்துக்குள்ள எப்படி வந்தீங்க..?

‘‘அட்லீக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நட்பு இருந்ததால, அவரோட பட டிஸ்கஷனில் நான் இருப்பேன். அப்படித்தான் மெர்சல் படத்தின் டிஸ்கஷனுக்கும் நான் போனேன். முதலில் நான் இந்தப் படத்தில் வொர்க் பண்ணப்போறேன்னு எனக்குத் தெரியாது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் அண்ணாவோட கால்ஷீட் இல்லைனு தெரிஞ்சதும், அட்லீ என்கிட்ட ‘நீ பண்றீயா’னு கேட்டார். எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும். இது பெரிய படமா இருக்கிறதுனால மத்தவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேனு சொன்னேன். அப்புறம் அட்லீ, விஜய் அண்ணாகிட்ட கேட்டதும், ‘உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகே மா’னு சொல்லியிருக்கார். இப்படித்தான் நான் மெர்சல் படத்துக்குள்ள வந்தேன். என்னோட முதல் படமே இவ்வளவு பெரிய படமா அமைஞ்சதுக்கு என் அப்பா, அம்மா செய்த பிரார்த்தனைதான் காரணம்.’’

முதல் படமே பெரிய பட்ஜெட்டா இருந்ததால உங்களுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்துச்சு..?

‘’நான் 2016 டிசம்பர் மாதம் இந்தப் படத்துக்கு கமிட்டானேன். அடுத்த மாதமே ஷூட்டிங் ஆரம்பிக்கிறதா இருந்ததால, வேக வேகமா வொர்க் ஸ்டார்ட் பண்ணிட்டோம். படத்தோட முதல் ஷெட்யூலே ஃப்ளாஷ்பேக் போர்ஷன்தான். படத்தில் கமிட்டானதும் ஐரோப்பாவுக்குப் போய் லொகேஷன் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நான் பண்ணப் போற வேலைமேல எனக்குப் பயமே இல்ல. ஆனால், அதைச் சரியா பண்ணிடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். எப்போதெல்லாம் நான் சோர்வு ஆகுறேனோ அப்போதெல்லாம், இந்த வேலையை நாம சரியா செய்யணும்னு எனக்குள்ளேயே சொல்லிச் சொல்லி என்னை நானே உற்சாகப்படுத்திப்பேன். 

ஃப்ளாஷ்பேக்குக்கு ஒரு கலர், கரென்ட்டா நடக்குற கதைக்கு ஒரு கலர்னு பெரிய ஒளிப்பதிவாளர் எப்படி வொர்க் பண்ணுவாங்களோ அப்படித்தான் இதில் வொர்க் பண்ணினேன். தனக்கு என்ன தேவையோ அதைத் தெளிவா கேட்டு வாங்கக்கூடியவர் அட்லீ. அதுனால தெளிவா ப்ளான் பண்ணி வொர்க் பண்ணினோம்.’’

பொதுவா மாஸ் ஹீரோக்களுக்கு ஒரு இன்ட்ரோ சீனையே மாஸா காட்டணும்னு ஒளிப்பதிவாளர்கள் அதிகம் மெனக்கெடுவாங்க. இந்தப் படத்தில் மூன்று இன்ட்ரோ சீன் இருக்கு. அதற்காக எவ்வளவு மெனக்கெட்டீங்க..?

‘‘முதல் இன்ட்ரோ சீன் பார்த்தீங்கன்னா, ஒரு சின்ன ரூம்குள்ள விஜய் அண்ணா புஷ்-அப் எடுக்குற மாதிரி இருக்கும். பெரிய இடத்தில் ஷூட் பண்ணும்போது நிறைய யோசிக்கலாம். ஆனா, அந்த சீனில் நாங்க ஒரு சின்ன ரூம்ல மாட்டிக்கிட்டோம். இருந்தாலும், அதில் எப்படி வித்தியாசமான ஃப்ரேம்ஸ் வைக்கலாம்னு அதிகம் யோசிச்சோம். அந்த சீன் எடுக்கும்போதே, `இந்த சீன்தான் படத்தோட முதல் சீன். செம மாஸா இருக்கணும்’னு அட்லீ சொல்லிட்டார். அதுனால, விஜய் அண்ணா கையை மடக்குறது, ஒரு கையில புஷ்-அப் எடுக்குறது, புஷ்-அப் எடுக்கும்போது க்ளாப் பண்றதுனு நிறைய ஷாட்ஸ் யோசிச்சு, யோசிச்சு பண்ணினோம். அந்த சீன்ல விஜய் அண்ணாவோட முகத்தைக் காட்டவே கூடாதுனு அட்லீ சொன்னார். அதுக்கு ஏற்ற மாதிரியும் ஃப்ரேம் வைக்கிறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. 

இதே மாதிரிதான் ப்ளாஷ் பேக் ஹீரோவோட இன்ட்ரோ சீனும். காலில் ஆரம்பிச்சு, அவர் நடக்கும்போது பின்னாடி இருந்து ஷூட் பண்ணினோம். அப்புறம் கையில மண்ணை எடுத்து, அதைத் தட்டிவிடும்போது ஹீரோவோட முகம் தெரியும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி அந்த இன்ட்ரோ சீன்களை எடுத்தோம். இப்போ தியேட்டரில் அதுக்கான ரெஸ்பான்ஸைப் பார்க்கும்போது மெய்யாலுமே மெர்சலாயிருக்கு.’’

படத்தோட எந்த சீன் மேக் பண்றதுல சிரமமா இருந்துச்சு..?

‘‘ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்குச் சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவருவது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’

படத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்... அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..?

‘‘அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்பப் பிடிச்சிருந்ததுனு சொன்னார்.’’

கமல் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்..?

மெர்சல் ஒளிப்பதிவாளர் விஷ்ணு

‘‘நேற்று (22.10.2017) கமல் சாரோட ஆஃபிஸுக்குப் போய் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். படம் பார்த்துட்டு `ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப எமோஷனலா இருக்கு’னு சொன்னார். அவருக்கு நேரம் இல்லாதனால அதிகமா பேச முடியலை. போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம்.’’

மெர்சல் படத்தோட கதை சம்பந்தமா சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..?

‘‘கதைக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. அதுக்கு என்னால ரியாக்டும் பண்ண முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்கள் பற்றி அட்லீ எங்களிடம் டிஸ்கஷ் பண்ணவும் மாட்டார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து என்ஜாய் பண்ணிட்டு போற மாதிரிதான் நாங்க படம் எடுத்திருக்கோம். யாரும் வருத்தப்படுற அளவுக்கு நாங்க படம் எடுக்கலை. இதுவே எங்களுக்குத் திருப்திதான்.’’


டிரெண்டிங் @ விகடன்