Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராடத் தயாரான ஃபெப்சி தொழிலாளர்கள்... ஆரம்பிப்பதற்குள் முடக்கப்பட்ட காரணம் என்ன?

ஃபெப்சி

ஃபெப்சி, சினிமா தொழிலாளர் சம்மேளனத்தின் 23 சங்கங்களில் ஒரு சங்கமான `டெக்னீசியன்ஸ் யூனியன்' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடபழனியில் இருக்கும் ஃபெப்சி அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பிக்கலாம் என எத்தனித்திருந்தனர். இன்று காலை, சரியாக 10 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், டெக்னீசியன்ஸ் யூனியன் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் வடபழனியில் குழுமினர். ஆனால், திடீரென்று ஒரு சலசலப்பு... `போராட்டம் நடத்த வேண்டுமானால், கமிஷனர் அலுவலகத்தில் முன்பே ஒப்புதல் பெற்று, அதை ஏரியா லோக்கல் போலீஸிடம் தெரிவித்துவிட வேண்டும். அவர்களும் சம்மதம் தெரிவித்தால்தான் போராட்டத்துக்கு யாரும் முழுக்கு போட முடியாது' என்று உறுப்பினர்கள் மத்தியில் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் திரும்பிப் பார்க்க வேண்டும், ஃபெப்சிக்கு உள்ளேயே தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று தீர்க்கத்துடன் கூடிய டெக்னீஷியன்ஸ் யூனியன் உறுப்பினர்களுக்கு பெரும் ஏமாற்றம்.

போராட்டத்துக்கான காரணம் என்ன..?

மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் டெக்னீஷியன்ஸ் யூனியனுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும் சம்பள விஷயத்தில் சில முரண்பாடுகள் எழுந்துள்ளன. இரு தரப்புக்குமான முரண்பாடுகள்தான் ஆகஸ்ட் 1,2,3-ம் தேதிகளில் ஃபெப்சி வேலை நிறுத்தத்துக்கே வித்திட்டதாம். இதையடுத்து, தயாரிப்பாளர் தரப்புக்கும் ஃபெப்சிக்கும் இடையில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன், டெக்‌னீஷியன்ஸ் யூனியன் நீக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தை திருப்தி படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெக்னீஷியன்ஸ் யூனியன் தரப்பில் அப்போதில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து டெக்னீஷியன்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தனபால், "ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டம், எங்கள் யூனியன்தான் தூண்டிவிட்டது என்பது போல சொல்லப்படுகிறது. உண்மையில், ஃபெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் நிலவிய சம்பள பிரச்னைதான் போராட்டத்துக்கு காரணம். தயாரிப்பாளர் சங்கம் எங்களை ஒடுக்குவதற்கு காரணம், ‘துப்பறிவாளன்’ படப்படிப்பின்போது, எங்கள் யூனியன் சார்பில் வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கி வைத்தனர். பிறகு, படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக சம்பளப் பாக்கி பைசல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே தயாரிப்பாளர் தரப்புக்கு எங்கள் மீது புகைச்சல் இருந்தது. பின்னர், ஃபெப்சி வேலைநிறுத்தம் சுமுகமாக முடியும்போது, முன்னர் நிலவிய பகையின் காரணமாக எங்கள் அமைப்பை ஃபெப்சியில் இருந்தே நீக்கினர்" என்றார் வேதனையுடன்.

இப்படி ஃபெப்சியில் இருந்து நீக்கப்பட்டதால், டெக்னீஷியன்ஸ் யூனியனில் இருக்கும் 1,300 உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் யாரும் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்துதான், திரைத்துறையில் இருக்கும் சீனியர்களை வைத்தும் முக்கியப் புள்ளிகளை வைத்தும் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி பிரச்னை தீர்க்க முயன்றுள்ளனர் டெக்னீஷியன்ஸ் யூனியனைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடைசி வரை முரண்டுபிடித்த தயாரிப்பாளர் சங்கம், `தற்போது டெக்னீஷியன்ஸ் யூனியனில் இருக்கும் நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வாங்கள், பேசலாம்' என்ற பதிலை மட்டுமே உதிர்த்துள்ளனர். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று முடிவுசெய்த டெக்னீஷியன் யூனியன், இன்று போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஃபெப்சியின் அலுவலகத்தில்தான் இந்தப் போராட்டம் நடத்த இருந்ததால், லோக்கல் போலீஸை அணுகியுள்ளனர். `அமைதியான முறையில் அலுவலகத்துக்கு உள்ளேயே இப்படி போராடுவதற்கு சட்ட ரீதியில் எந்த எதிர்ப்பும் இல்லை' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர் போலீஸார்.

அமைதியான போராட்டம் கூட செய்ய முடியாத காரணம் என்ன? என்று திரைத்துறை வட்டாரத்தில் இருப்பவரிடம் கேட்டோம். "போராட்டம் பற்றி சனிக்கிழமை அறிவித்தனர் டெக்னீஷியன்ஸ் யூனியன். நடுவில் இரண்டு நாள் இருந்ததால், திரைத்துறை வட்டத்துக்கு முழுவதும் இந்த தகவல் பரவியது. எனவே, இதை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து, காவலர்கள் மூலமே போராட வந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர் மேலிடத்தில் இருந்தவர்கள். இதனால், டெக்னீஷியன்ஸ் யூனியனில் இருப்பவர்களும் செம அப்செட்டில் இருக்கிறார்கள். இனி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் செவி சாய்க்காது என்று முடிவெடுத்துள்ளனர் டெக்னீஷியன்ஸ் யூனியன். நேரடியாக தமிழக முதல்வரை சந்தித்து விடலாம் என்ற முடிவிலும் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார் உறுதியாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்