“தாடி வச்சா அண்ணன்... தாடி எடுத்தா தம்பி... செமல்ல..!” - கலகல விஜய் ஆண்டனி #VikatanExclusive

“இரட்டை வேடத்தில் நான் நடிக்கும் முதல் படம் அண்ணாதுரைதான். 'எமன்' படத்தில் அப்பா, பையன் என இரண்டு கேரக்டரில் நடிச்சிருப்பேன். அதில் அப்பா கேரக்டர் இறந்ததுக்குப் பிறகுதான் பையன் கேரக்டர் வரும். ஆனால், இந்தப் படத்தில் அண்ணன், தம்பியா ஒரே ஃப்ரேமில் இரண்டு கதாபாத்திரங்களும் இருக்கிற மாதிரியான படம். ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன்...’’ உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி

“இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட எந்தளவுக்கு வொர்க் பண்ணுனீங்க..?"

“எனக்கு கமல் சார் மாதிரியெல்லாம் அதிகம் வித்தியாசம் காட்டி நடிக்கத் தெரியாது. எனக்கு என்ன வருமோ அதைத்தான் பண்ணியிருக்கேன். நான் கோவப்பட்டா எப்படிக் கோவப்படுவேனோ அப்படித்தான் படத்திலும் இருக்கும். நான் நல்லா நடிக்கிறேன்னு எந்த இடத்திலும் சொல்லிக்கமாட்டேன். யார் சொன்னாலும் அதை ஏத்துக்கமாட்டேன். ஏன்னா, நான் எப்படி நடிப்பேன்னு எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் அண்ணன் கேரக்டருக்கும் தம்பி கேரக்டருக்கும் எப்படி வித்தியாசம் காட்டினேன்னா, தாடி வச்சேன், தாடி எடுத்தேன். அவ்வளவுதான். இதுதான் என்னோட மெனக்கெடல். அதுபோக இயக்குநர் அந்தந்த கேரக்டருக்கென ஒரு வடிவம் வெச்சிருக்கார். அதுவே உங்களுக்கு வித்தியாசம் கொடுக்கும். அண்ணனோட வாழ்க்கைச் சூழல் வேற, தம்பியோட வாழ்க்கைச் சூழல் வேற. படம் பார்க்கும்போது அண்ணன் வேற ஆளாகவும், தம்பி வேற ஆளாகவும்தான் தெரிவாங்க.’’

“ ‘எமன்’ படத்தில் அரசியல் கதைக்களம், இப்போ 'அண்ணாதுரை'னு அரசியல் தலைவர் பெயரைப் படத்துக்கு வெச்சிருக்கீங்க, அடுத்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்க... அரசியல் ஆசை இருக்குதோ..?"

“நான் ரொம்ப வெளிப்படையான ஆள். நான் ஏதாவது சொல்லணும்னா ஓப்பனா, உடனடியா சொல்லிடுவேன். இதை அப்போ சொல்லலாம், அந்த நாள் சொன்னாதான் சரியா இருக்கும்னு யோசிக்கமாட்டேன். அரசியலுக்கு வரணும்னு ஆசை இருந்தா நான் முன்னாடியே சொல்லியிருப்பேன். இப்படி மறைமுகமா படங்களில் சேர்ந்துட்டு அப்பறம் சொல்ற ஆள் நான் இல்ல. இப்போ வரைக்கும் அரசியல் ஆசை எனக்கு வந்தது இல்ல. ‘எமன்’ ஒரு கதை, 'அண்ணாதுரை' ஒரு கதை அவ்வளவுதான்.’’

விஜய் ஆண்டனி

“உங்களோட படங்களுக்குத் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் நேரடித் தெலுங்குப் படம் பண்ற ஐடியா இருக்கா... கதை சொல்ல வராங்களா..?"

“எனக்குத் தெலுங்கு தெரியாது. இப்போதான் கத்துக்கிறேன். எனக்கு ஒரு மொழி நல்லா தெரிஞ்சாதான் அதில் நடிக்கிறதுக்கும், மியூசிக் பண்றதுக்கும் ஈசியா இருக்கும். அவங்க என்ன பேசுறாங்க, அந்த சீனோட எமோஷன் என்னன்னு தெரியாம என்னால வொர்க் பண்ண முடியாது. ஆனா, நிறைய பேர் கதை சொல்ல வர்றேன்னு சொன்னாங்க. ஆனா இப்போ எனக்கு அந்த ஐடியா இல்ல. ஏன்னா, நான் பண்ற படங்களின் கதை இரண்டு ஊர் மக்களுக்குப் பிடிக்கிற மாதிரியான கதைகள்தான். அதுனால இப்போ எப்படிப் போயிட்டு இருக்கோ, அப்படியே போகட்டும்னு இருக்கேன். அதுபோக, தமிழ்ல ஹிட்டான படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. சமீபத்தில்கூட 'குரங்கு பொம்மை' படம் பார்த்து, அதைத் தெலுங்கில் ரீமேக் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா அந்தப் படத்தோட தெலுங்கு ரைட்ஸ் ஆல்ரெடி விற்பனை ஆகிடுச்சு. இனி வேற நல்ல படங்கள் பார்த்தா அது அந்த ஊர் மக்களுக்கு செட்டாகும்னு தோணுச்சுன்னா ரீமேக் பண்ணுவேன்.’’

"விஜய் ஆண்டனி ஃப்லிம் கார்ப்பரேஷனில் உங்க படம் மட்டும்தான் தயாரிப்பீங்களா..?"

‘’வேற ஹீரோஸ் படம் பண்ற ஐடியா இருக்கு. ஆனா அதைப் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ஸ்டெடி ஆகிக்கலாம்னு தோணுது. அதுனாலதான் இதுவரைக்கும் அப்படி எந்த முயற்சியிலும் நாங்க இறங்கலை. ஆனா என்னோட படங்களில் புது இயக்குநர், புதிய நடிகர்கள், டெக்னீஷியன்ஸ்னு அறிமுகப்படுத்துறேன்.’’

விஜய் ஆண்டனி

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வின்னர் ஆரவ் உங்களோட 'சைத்தான்' படத்தில் அறிமுகமானவர். அவருக்கு வாழ்த்துச் சொன்னீங்களா..?"

“கொஞ்சம் பிஸியா இருந்ததால என்னால அவர்கிட்ட பேச முடியலை. 100 நாள் ஒரு வீட்டுக்குள்ள போன், டிவி எதுவும் இல்லாம அவ்ளோ கேமராக்கள் முன்னாடி இருக்கிறது ரொம்ப கஷ்டம்தான். வெளியில என்னதான் விமர்சனங்கள் வந்தாலும் உள்ள இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும். அப்படி 100 நாள் உள்ள இருந்து, மக்களுக்கு அவரைப் பிடிச்சி, இப்போ வெற்றி பெற்றிருக்கார். வாழ்த்துகள் ஆரவ்.’’

“உங்களோட படங்களுக்கு மட்டும் இசையமைக்கிறதோட நிப்பாட்டிக்கிறீங்களே... வேற படங்களுக்கு இசையமைக்கிற ஐடியா இல்லையா..?"

‘’நேரம் இல்ல. நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த நேரத்தில் எனக்குப் பிற நடிகர்கள் படங்களில் இசையமைக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் நான் தவிர்த்துட்டேன். அப்பறம் போகப் போக நான் நடிக்கிற படங்களைப் பார்த்துட்டு நான் பிஸியா இருக்கிறது அவங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.’’

விஜய் ஆண்டனி

“நீங்க நடிக்கிற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் ஓர் ஒற்றுமை இருக்குறதை ஃபீல் பண்ணியிருக்கீங்களா..?”

“ஒரு சாதாரண கதையைப் படமா எடுத்தா, பார்க்கிறவங்களுக்குப் பிடிக்காது. ஒருத்தன் கஷ்டப்பட்டு, பல மேடு பள்ளங்களைத் தாண்டி எப்படி மேல வர்றாங்கிறதை என் படத்தில் சொல்றேன். படத்துக்குப் படம் மேடு பள்ளங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான். ஒரு பெண்ணை எப்படி லவ் பண்றது, அவங்ககூட எப்படி ரொமான்ஸ் பண்றதுனு சொல்ற படங்களுக்குள் நான் போகலை. என் முகத்துக்கு அந்த மாதிரியான விஷயங்கள் வரலை. எனக்கு இதுதான் செட்டாகுது, இது சரினும் தோணுது.’’

“அப்படிப்பட்ட கதைகளைத்தான் நீங்க இயக்குநர்கள்கிட்ட இருந்தும் எதிர்பார்க்குறீங்களா..?"

“நீங்க என்னாவேணுனாலும் சொல்லுங்க. அந்த ரெண்டு மணி நேரம் நான் என்ஜாய் பண்ணணும்னுதான் அவங்ககிட்ட சொல்லுவேன். அவங்க கதை சொல்லி முடிச்சதும் அந்த ஹீரோவை எனக்குப் பிடிக்கணும், அந்தக் கதாபாத்திரமா வாழணும்னு எனக்கு ஆசை இருக்கணும். அப்படி இருந்தா அந்தப் படத்தை ஓகே பண்ணுவேன்.’’

விஜய் ஆண்டனி

“பாடல்கள் பதிவு செய்யும் போது பாடலாசிரியர் அண்ணாமலையை மிஸ் பண்றீங்களா..?”

“ரொம்ப... ரொம்ப மிஸ் பண்றேன். அவர் ஒரு கண்ணதாசன். எனக்கு எந்த வெற்றியும் கிடைக்காத காலத்தில் இருந்தே என்னோட அவர் இருந்தார். ரொம்ப நல்ல மனிதரை நான் இழந்துட்டேன்.’’

“ஜல்லிக்கட்டு, நீட் எனப் பல போராட்டங்களில் திரைத்துறையினர் கலந்துக்கிட்டாங்க... அதில் எதிலுமே உங்களைப் பார்க்க முடியலையே..?"

“இந்த மாதிரியான பிரச்னைகள் வரும்போதும், அதுக்காக மக்கள் போராடும்போதும் நான் பேசணும்னு நினைப்பேன். ஆனா, நான் சொன்ன விஷயம் சரியா கன்வே ஆகலைனா அது நமக்கே பிரச்னை ஆகிடும். அனிதா விஷயத்திலும் எனக்குச் சில வருத்தங்கள் இருந்தன. நல்ல மதிப்பெண் எடுத்து சாதிக்க நினைத்த பொண்ணுக்கு டாக்டர் சீட் கிடைக்காம போனதும் தற்கொலை பண்ணிக்கிட்டது தவறு. அவங்க உயிரோட இருந்து வேற ஒரு துறையில படிச்சிச் சாதிச்சிருக்கணும். அனிதா அப்படித்தான் பண்ணியிருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, இப்போ பெரிய ஆளா நம்ம முன்னாடி இருக்கிற பலரும் அவங்களோட படிப்பால பெரிய ஆளா ஆனவங்க இல்லை. இதை நான் அப்போ சொல்லியிருந்தா, அது எல்லோருக்கும் சரியாப் புரிஞ்சிருக்குமானு தெரியலை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!