உலகின் ஒரே 7 ஸ்டார் ஹோட்டலில் 2.0 இசை வெளியீடு! - துபாய் சுவாரஸ்யங்கள்

சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்திருக்கும் திரைப்படம் 2.0. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லாஞ்ச் நிகழ்ச்சியை மும்பையில் பிரமாண்டமாக நடத்திய தயாரிப்பு நிறுவனம், வரும் 27-ம் தேதி துபாயில் மிக பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளது. இந்தப் பிரமாண்ட நிகழ்வில் என்னவெல்லாம் இருக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

இசை வெளியீட்டு விழாவுக்கு முந்தைய நாளான அக்டோபர் 26-ம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 2.0 படக்குழுவினர்கள், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு 2.0 படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. 

2.0 படத்தின் இசை வெளியீடு burj park-ல் நடைபெறுகிறது. முதன்முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை நேரலையாக இசையமைக்கவுள்ளார்.

பாஸ்கோ நடனக்குழு, ரஜினி - இயக்குநர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான சிவாஜி, எந்திரன், 2.0 பட பாடல்களுக்கு நடனமாடவுள்ளது.

12,000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரமாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

துபாய் அரசர் இந்தப் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர் எனப் படக்குழுவினரிடமிருந்து இந்தச் செய்திகள் வந்துள்ளன. மேலும், துபாய் அரசின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்தான் இந்த 2.0 இசை வெளியீட்டு விழாவையும் நடத்தித்தரவுள்ளது. 

இந்த இசை வெளியீட்டைத் தொடர்ந்து  நவம்பரில் படத்தின் டீசர் ஹைதராபாத்திலும் டிசம்பர் மாதம் ட்ரெய்லர் சென்னையிலும்  வெளியிடப்படவுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!