Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசியேட்டனிடம் ’சார் எவிடைக்கா’ என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..! #RIPIVSasi

ஜெய பாரதியின்  ஆடைகளற்ற விஸ்தாரமான முதுகை ஒரு விதமான மூச்சுப் பிடிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றேன். அது ஒரு போஸ்டர். இருந்த பூனை மயிர் மீசையில் தீக்குச்சி கரியைப் பூசிக்கொண்டு வாயில் தம்மையும் வைத்துக்கொண்டு கவுண்டரில் டிக்கெட் வாங்கினேன். படம் ஓடி முதல் ரீலில் நான் வந்த காரியத்தை மறந்தாயிற்று. அந்தக் கதை இழுத்துக்கொண்டு சென்றது. அநேகமாய் படத்தின் தரம் எனக்குப் புதுமையாய் பட்டிருக்க வேண்டும். எதிர்பார்த்துப் போன காட்சிகள் இல்லாமலில்லை. ஆனால், அவை கடந்து போயிற்று. எனக்கு சோமனும் மதுவும் சாரதாவும் ஜெயபாரதியும் பிரமாண்டமாய் தெரிந்தது போக, அப்பா அம்மாவைக் கொன்ற ஆளை பழி தீர்க்கும் கதை இவ்வளவு நன்றாய் இருக்குமா என்று நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப படம் பார்த்தேன். கவனித்துக் கொண்டேன். படம் இதா இவிடே வர. இயக்குநர் ஐ வி சசி. எழுதியவர் பத்மராஜன். சொல்லப் போனால் மலையாளப் படங்களுக்குக் காத்திருந்து பார்க்கத் தொடங்கியது அப்போதுதான்.

அதற்கு அப்புறம் வந்து, சென்னையில் புழுதி பறக்க ஓடிய அவளுடே ராவுகளுக்கு நான் பதட்டப்படவில்லை. ஒரு நல்ல படம் பார்க்கப் போகிறோம் என்பது தெரியும். நான் என்னளவில் சசியை அறிந்த கதையைச் சொல்லுவதற்கு ஒரு காரணமே உண்டு. அவரைப் பலரும் இப்படியெல்லாம் அறிந்தே தங்களுள் அவரை மதித்தார்கள். அப்புறம் அவர் பல தலைமுறைகளைத் தனது படங்கள் மூலம் மக்களை நேரிட்டார்.   

முக்கியமாய் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் அவரால் குரு செய்ய முடியும். காளி செய்ய முடியும். அலட்டிக் கொள்ளாமல் பகலில் ஓர் இரவு செய்ய முடியும். மெட்ராசிலே மோன் என்று ஒரு படம். அந்தச் சத்தத்துக்கு நான் இப்போது கூட காது பொத்திக்கொள்வேன். அவர் தான் எம் டி யின் அட்சரங்கள் பண்ணினாரா, அபயம் தேடி பண்ணினாரா என்பது வியப்பு. ஆள் கூட்டத்தில் தனியே வேறு என்றால் உயரங்களில் மற்றொரு ரகம். இருந்தார் போல இருந்து திடீர் என்று அலாவுதீனும் அற்புத விளக்கும், இன்னும் எதிர்பாராமல் ஒரே வானம், ஒரே பூமி. எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு இந்தக் கதை, உப கதை, திரைக்கதை, கூடுதல் திரைக்கதை, வசனம், இணை வசனம், அப்புறம் மொத்த டைரக்‌ஷன் பிசினஸ் எல்லாம் வராதா? இயக்கம் சசி என்று சிம்பிளாய் போட்டுக்கொண்டு மிக நேர்மையாய் எழுத்தாளர்களுடன் பணிபுரிந்தார். அவரது வெற்றி அது. பத்மராஜன் கதை ஒரு வடிவம், எம் டி வேறு, டி தாமோதரன் வேறு, ரஞ்சித் வேறு என்பதால் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கோணம் கிட்டியது.  

அவர் பாக்கெட்டுக்குள் கை விட்டுக்கொண்டு மோவாயை சொறிந்து பாவனைகள் காட்டுகிற ஜோக்குக்கு நேரம் கொடாமல் ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டே இருந்தார் என்று நம்ப விரும்புகிறேன். மிருகயாவாக இருக்கட்டும், அல்லது இணா என்கிற ஜிலுப்பான்ஸ் படத்தில் கூட தனது முத்திரைகளைக் கைவிடவில்லை. ஜானி நேரத்தில் பாடல்கள் எடுப்பது பற்றின பேச்சில் மகேந்திரன் சசியை மிகவும் குறிப்பிட்டு சொல்லியிருந்தார். பாலு மகேந்திராவின் பாராட்டு பற்றி சுகா பதிவு போட்டிருந்தது முக்கியம். கமலின் பாராட்டு பற்றி கூட. அவை அவரது தொழிலின் நேர்த்திக்குச் சான்று. ஓர் ஆள் இடைவிடாமல் நூறு படங்களை எல்லாம் தாண்டி க்வாலிட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது விளையாட்டுக் காரியமில்லை என்பதை எந்த சினிமா கொம்பனும் ஏற்றுக்கொள்வான் என்பதில் அவநம்பிக்கை வேண்டாம்.

ஒரு நேரத்தில் அவர் நெற்றியடி அடித்த அரசியல் படங்கள் கேரள அரசுக்குத் தலைவலியாய் இருந்தன. ஈநாடு சாராய சாவுகளைக் குறித்தது. அப்காரியும் அந்த தினுசுதான். இனியெங்கிலும் படமெல்லாம் புரட்சி பேசின என்று நினைவு. கமல், லால், மம்முட்டி என்றில்லை. சகல நடிகர் நடிகையரும் அவர் படத்தில் நடிக்க விரும்பியிருப்பார்கள். காரணம் அவரது நெறியாளுகையில் எந்தப் பாத்திரமும் ஒளி கொண்டு விடும் என்கிற நம்பிக்கை.  

தேவாசுரம் படத்தை யாரும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதில் லாலும், ரேவதியும், வேணுவும், ஒடுவில்லும் ஒருவரை தாண்டி ஒருவர் நடித்துக் கொண்டு முந்தியது தெரியும். நெப்போலியன் செய்த அந்த சேகரன் கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? விழுந்து விட்ட லாலின் மார்பில் மிதித்துக்கொண்டு விஷம் தோய்ந்த வார்தைகளால் வைக்கப்படுகிற சவால் படத்தின் இறுதி நிமிடம் வரை நீடிக்கும். கேரளாவே அவரைப் பிரமிப்பாய் பார்த்தது என்று சொல்ல வேண்டும். 

இப்படி எத்தனையோ மாயங்களை நிகழ்த்தினவர் அவர். இதென்ன ரொம்ப ஓவராக இருக்கிறதே, பாராட்டு மழை மட்டும் தானா என்றால், இல்லை. அவரும் பல டுபாக்கூர் படங்களைச் செய்திருப்பார். யாரும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். அதை சசியின் படம் என்பதையே கவனிக்க விரும்பாமல் அடுத்த படத்தை நம்பியிருப்பார்கள். மனிதனிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஓர் இறப்பு நடந்த நேரத்தில் நல்லது பற்றி மட்டுமே பேசுவது மாதிரி வைத்துக்கொள்ளலாம். அப்புறம் யாரைப் பற்றியாயினும் கறாரான விமர்சனம்தான் வைக்கணும் என்கிற டிரென்டின் மீது எனக்கு ரொம்ப வெறுப்பு.

சாதனை செய்கிறவரை மனமார புகழ்ந்து நமக்குள் எடுத்துக்கொள்ளுவது மிக முக்கியம். சினிமா கற்கிறவர்களுக்கு அவர் தனது அற்புத படைப்புகளைக் குவித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.

மறுபடியும் ஜெயபாரதி முதுகு காட்டின படத்துக்கு வருகிறேன். அந்தப் படத்தில் சார் எவிடைக்கா என்பார்கள். எங்கே போகிறீர்கள் என்று அர்த்தம். இதா இவிடே வரே என்பார் ஹீரோ. இதோ இது வரையில் என்று பொருள். நாம் எங்கே போகிறோம் என்பது பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை என்பது நமது தனிமையைக் குறிக்கிறது. மரணத்தைக் காட்டிலும் தனிமையுண்டா?  சசியேட்டனிடம் சார் எவிடைக்கா என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். இதா இவிடே வரே என்று அவராலும் சொல்லியிருக்க முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement