மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்த பொற்காலம்..! #20yearsOfPorkkaalam

அவர் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம். தன் படத்தின்  வெற்றிவிழா மேடையில்,  ஒரு புதுமுக இயக்குநரை அழைத்து "உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிக அழகாகன படமாகக் கொடுத்துருக்கீங்க. இந்த மேடையில் உங்களை வாழ்த்த ஆசைப்படுகிறேன் " என்றுக் கூறி தங்கச்சங்கிலியைப் பரிசாக அணிவித்து மகிழ்ந்தார். தன் பட வெற்றி விழா மேடையில் படத்துக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு புது இயக்குநரை அழைத்து தங்கச்சங்கிலி கொடுத்து கெளரவிக்கிறாரே என விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வியப்படைந்தனர். இதையெல்லாம் கண்டு ஆனந்த கண்ணீருடன்  மேடை ஏறி பரிசு பெற்றார் அந்த இயக்குநர். அந்த இயக்குநரின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் மேடை அங்கீகாரம் அதுதான். அந்த இயக்குநர்தான் சேரன். அந்த உச்சநட்சத்திரம் வேறுயாருமல்ல, ரஜினிகாந்த். இந்த நிகழ்வு அருணாச்சலம் பட வெற்றி விழாவில் நிகழ்ந்தது.

பொற்காலம்

தமிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்ஷியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆக வேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிக்கலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் உலகத் திரைப்படங்களையும் இந்திய கமர்ஷியல் திரைப்படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாக்களை உருவாக்குபவர்கள்.

ஆனால், தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய மனித வாழ்வியல்களைப் பேச துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளிய வழி. அந்தவகையில் பாரதி கண்ணம்மா என்ற  காதல்கதையுடன் தன் திரைவாழ்வை ஆரம்பித்தார் சேரன். காதல் கதையுடன் வந்த சேரன் தன்னை வித்தியாசமான இயக்குநராக தனது இரண்டாவது படமான பொற்காலம் படத்திலேயே நிலைநிறுத்தினார்.

படத்தின் கதை?

பொற்காலம்

மண் பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்து வரும் முரளியின் வாய் பேச முடியாத தங்கை ராஜேஸ்வரி. தான் செய்து வரும் மண்பாண்டத் தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருவதால் வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது முரளிக்கு. இந்தச் சூழ்நிலையில் முரளியின் தந்தையான மணிவண்ணனோ குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போயிருப்பதுடன் சூதாட்டத்திலும் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார். தன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாவைக் காதலிக்கிறார் முரளி. மீனா கைத்தறி துணிகளை நெசவு நெய்யும் பெண். முரளியின் நெருங்கிய நண்பர் வடிவேலு. தன் சோகங்களை தன்னுள்ளேயே புதைத்துக் கொள்ளும் முரளி, எப்படியாவது தன் தங்கைக்கு நல்ல பையனைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடனே வாழ்க்கையை நகர்த்துகிறார். முரளி பார்க்கும் மாப்பிள்ளைகள் ராஜேஸ்வரி வாய் பேச முடியாதவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றனர். கடைசியில் ஒருவர் ராஜேஸ்வரியை மணக்க முன்வருகிறார். அதாவது வரதட்சணைப் பணம் கொடுத்தால் ராஜேஸ்வரியை மணந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். தங்கைக்கு திருமணம் நடந்தால் போதும் என்று அந்த மாப்பிள்ளை கேட்ட வரதட்சணையைத் தரச் சம்மதிக்கிறார் முரளி. இதற்காகப் பணத்தைத் தயார் செய்ய தன் உடமைகள் பலவற்றையும் விற்றுவிடுகிறார்.

தங்கை திருமணத்துக்காக முரளி வைத்திருந்த இந்தப் பணத்தையும் மணிவண்ணன் எடுத்துச் சென்றுவிடுகிறார். இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. நண்பனின் சோகத்தைப் பார்த்த வடிவேலு, வரதட்சணையே இல்லாமல் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். முரளியும் மகிழ்ச்சியுடன் வடிவேலுவை அழைத்துக்கொண்டு இந்த சந்தோஷமான விஷயத்தை தன் தங்கையிடம் சொல்ல வருகிறார். ஆனால் அண்ணனுக்கு இதற்கு மேலும் பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், புதிதாக செய்யப்பட்ட பானைகளை சுட வைக்கும் சூளையில் படுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ராஜேஸ்வரி. இறுதியில் முரளி, மீனாவின் மீதான காதலைத் துறந்து, தன் தங்கையைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஹீரோயிசம் இல்லாத மிக உண்மையாக உழைப்பவனும் ஒரு மாற்று திறனாளி பெண்ணின் அண்ணனுமாக முரளி "மாணிக்கம்" என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். “இந்த ஊமைப்பொண்ணை யாருப்பா கல்யாணம் செஞ்சிக்குவாங்க?” எனக் கேட்கும் ஊர்மக்களிடம் இவர் பேசும் வசனம் இன்றும் மாற்றுத்திறனாளிகளை தவறாக பேசுபவர்களுக்கு நெத்தியடி. 

பொற்காலம்முரளியின் காதலை அவரின் கொள்கைக்காக தியாகம் செய்யும் 'மரகதம்' கதாபாத்திரத்தில் மீனா. முரளியை ஒருதலையாக காதலிக்கும் சங்கவி என இருவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தை அறிந்து அவ்வளவு இயல்பாக செய்திருப்பார்கள். அதுவும் முரளியுடன் சங்கவி செய்யும் குறும்புகள் மிக யதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். 

வடிவேலுவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. படத்தின் ஒரு காட்சியில் அவர் முரளியிடம் “நான் கருப்பா இருக்கேன்னுதானே என்னிடம் கல்யாணம் செஞ்சுக்கிறியா?ன்னு கேட்கலை?” என்று கேட்கும் இடத்தில் தான் நகைச்சுவைக்கு மட்டும் அல்ல, ஆல் ஏரியாவிலும் கில்லி என சொல்லி அடித்திருப்பார். மேலும், வடிவேலுவை வேற மாதிரி திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் சேரன்.

இந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளின் துயரம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்து மிகச்சரியாக பதிவு செய்திருப்பார் இயக்குநர் சேரன். மாற்றுத்திறனாளிகள்  நகைச்சுவைக்காகவே  பயன்படுத்தப்பட்டுவந்த தமிழ்த்திரையில் அவர்களின் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு அணுகியது இந்த பொற்காலம். அதிலும் குறிப்பாக, அந்த திரையரங்க காட்சியை சொல்லலாம். திரையரங்கில் சிவாஜி நடித்த "சரஸ்வதி சபதம் " திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு காட்சியில் அதுவரை வாய் பேச முடியாதவராக இருந்த சிவாஜிக்கு பேசும் வரம் கிடைத்து விடும். சிவாஜி பேச ஆரம்பித்து விடுவார். இந்த காட்சியை  அனைவரும் அமைதியாக பார்க்கையில் முரளியின் தங்கை மட்டும் கைத்தட்டிக் கொண்டே இருப்பார். உடனே அங்கிருப்பவர்கள் "படத்துல ஊமை பேசினவுடனே சந்தோஷத்தைப் பாரு"  என்று கரிசனத்தோடு சொல்வார்கள். இந்த ஒரு காட்சியிலே மனித உணர்வுகளை அவ்வளவு நேர்த்தியாக படம் பிடித்திருப்பார் இயக்குநர் சேரன்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "தஞ்சாவூரு மண்ணுயெடுத்து" என்ற பாடல் அந்த காலத்தில் பயங்கர ஹிட்.  இந்த பாடல்  சிங்கப்பூரில் நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்த தமிழரான எஸ்.ஆர். நாதன்  அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். அவர் மறைந்த பொழுது கூட அவருக்கு பிடித்த இந்த பாடலை இசைத்தனர். 

தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது "பொற்காலம்' படத்துக்காக சேரனுக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்த மீனாவுக்கும் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இருபது திரையரங்குகளில் நூற்றி எழுபத்தைந்து நாள்கள் ஓடி மிகப்பெரிய வெள்ளி விழா கண்டது இந்த திரைப்படம். மேலும், இந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பல மொழிகளிலும் 'ரீமேக்' செய்யப்பட்டது. 

பாரதிராஜாவுக்குப் பின் கிராமங்களை இயல்பு கெடாமல் காட்டும் திறமை சேரனுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாகவும் பொற்காலம் ஒலித்தது. ஹீரோ துதி, பன்ச் டயலாக் போன்று  எதுவும் இல்லாமல் யதார்த்தமான காட்சிகளால் அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த மாதிரியான ஒரு படத்தை கொடுத்ததற்காக சேரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!