Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரணும்... ரமணா திரும்ப வரணும்..! #15YearsOfRamana

இயக்குநர்கள் சிலருக்கு வணிக ரீதியான வெற்றிப் படமும் எடுக்க வேண்டும் சமூகப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. ஆனால், இரண்டையும் ஒரே படத்தில் நிறைவேற்ற முயலும்போது இயக்குநரின் பணி கடுமையாகிவிடும். திறம்படச் சமாளித்தால் மட்டுமே அதைச் சரிக்கட்ட முடியும். சில இயக்குநர்கள் இப்படியான இரண்டு குதிரைச் சவாரி செய்வதில் திறமைமிக்கவர்களாக இருப்பர். அதில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர்.

ரமணா

கேப்டன் பிரபாகரன் வரிசையில் விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக ரமணா படம் அமைந்தது. ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டிருந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் ரமணா என்ற கல்லூரிப் பேராசிரியராகவும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் பொறுப்பான குடும்பத் தலைவனாகவும் என இரு வேறுபட்ட கேரக்டர்களில் நடித்திருப்பார் விஜயகாந்த். ரமணா சாரை மறந்துவிடாத மாணவர்கள் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அந்தப் படத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.

இந்தப் படத்துக்கு யூகிசேது கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மாதவனைத்தான் அணுகினார் முருகதாஸ். பிறகு, யூகிசேது அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்தார்.

இளையராஜா இந்தப் படத்தின் பின்னணி இசையை மிகப்பிரமாதமாக வடிவமைத்திருப்பார். 'ரமணாவுக்குத் தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறது' என்று வானொலியில் வரும் செய்தியைக் கேட்டு ஒருவர் வானொலியைக் கீழே போட்டுடைப்பார். அங்கு பற்றிக்கொண்டு எரியும் இளையராஜாவின் இசை. மாணவர்களின் எழுச்சியையும் வெறியையும் நமக்குள் கடத்துவார். இந்தக் காட்சிகளிலெல்லாம் ஓர் ஒட்டுமொத்த படத்துக்கும் தேவையான அர்ப்பணிப்பான  இசையை இந்த ஒற்றைக் காட்சியில் நிரப்பியிருப்பார் ராஜா. மத, நிற சார்பில்லாத அன்பை மட்டும் போதிக்கும், `வானவில்லே வானவில்லே' பாடல் படத்தின் உயிர்நாடி என்றுகூட சொல்லலாம். அதே க்ளைமாக்ஸில் விஜயகாந்த் தூக்கு மேடைக்குப் போறதுக்கு முன்னாடி அந்தக் குழந்தைகளைப் பார்க்க வருகிற காட்சியில் பின்னணி இசை கண்ணீரை வரவழைக்கும்.

சிறந்த காட்சிகள் :

ரமணா

* தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வெளிவந்த படங்களில் ஒரு சிலவற்றில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடியதாக அமையும் காட்சிகள் மிகவும் பிரபலமாகிவிடுவது வழக்கம். அதன்படி ரமணா படத்தின் மருத்துவமனைக் காட்சி மிகவும் பிரபலமானது .இந்தக் காட்சியைப் போன்று ஓர் உணர்ச்சிகரமான காட்சி அதற்குப் பிறகு, இன்னும் எந்தப் படத்திலும் வரவில்லை எனலாம். இந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக்கியது முருகதாஸின் திறமைதான். மக்களுக்குப் புரிவது போன்று எடுப்பதற்காக அந்த டாக்டர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விஜயகாந்த், இறந்தவரின் மனைவி ,மகளுக்குச் சொல்வார். அது படம் பார்க்கும் மக்களுக்கும் உணர்ச்சியைத் தூண்டும். தனியார் மருத்துவமனையில் மக்கள் சந்தித்து வந்த பிரச்னையை எடுத்துக் காட்டியதாலோ என்னவோ அதற்கு மக்கள் அனைவரும் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். அந்த ஒரு காட்சி படத்தின் விறுவிறுப்பை ஏகத்துக்குக் கூட்டியது. இந்தக் காட்சி மக்களைப் பல கோணங்களில் சிந்திக்க வைத்தது. மருத்துவத்துறையில் நடக்கும் ஏகப்பட்ட ஊழல்களை இந்த ஒரு காட்சியின் மூலம் தோலுரித்துக் காட்டினார் முருகதாஸ். 

* தன் குழுவில் உள்ள ஒரு மாணவரின் தந்தையைக் கொல்ல வேண்டும் எனும் சூழல் வரும்போது அதை அந்த மாணவர் மறுக்காமல், "வலிக்காம பாத்துக்கோங்க மாஸ்டர். அவர் வேணும்னா கெட்ட அப்பாவா இருக்கலாம். ஆனா நான் நல்லவன் மாஸ்டர்" எனக் கோபி என்ற மாணவப் பாத்திரம் அழும் காட்சி மிக இயல்பாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். 

ரமணா

* ஃப்ளாஷ்பேக்கில் கட்டடம் எல்லாம் இடிந்து விழுந்த பின்பு சிம்ரனை விஜயகாந்த் தொடுவார். அப்படியே உதிர்ந்து காற்றில் கலப்பார் சிம்ரன். மற்றும் க்ளைமாக்ஸில் கடைசியாகத் தன் குழந்தைகளைப் பார்க்க விஜயகாந்த் செல்லும்போது, "இறைவன் எனக்கு 2 தடவை குழந்தைகளைக் கொடுத்தான், ஆனா, ஒரு தடவகூட வாழக்குடுத்து வைக்கல" எனக் கூறுவார். இவ்விரு காட்சிகளுக்கும் கண் கலங்காதவர்களே யாரும் இருக்க முடியாது. 

ரமணா படத்தில் வரும் பல வசனங்கள் இப்போதும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மிகவும் பொருந்திப்போகிறது. படத்தின்

சிறப்பான வசனங்கள் :

"காலேஜ் பசங்கன்னா பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்கனுதான் எல்லாரும் நினைச்சிட்ருக்காங்க. ஆனா, இந்த நாட்டோட தலையெழுத்தயே மாத்துற சக்தி ஸ்டூடன்ட்கிட்ட இருக்கு..."

"ஆளும் கட்சிக்காரனை அடிச்சா, ஆளும் கட்சிக்காரன் திரும்ப அடிப்பான்... எதிர்க் கட்சிக்காரனை அடிச்சா, எதிர்க்கட்சிக்காரன் திரும்ப அடிப்பான். ஸ்டூடன்ட்மேல கை வச்சா ஒட்டு மொத்த தமிழ்நாடே திரும்ப அடிக்கும்..."

"படிப்ப முடிச்சுட்டு வெளிய போற ஸ்டூடண்ஸுக்கு புரொபசருங்க ஃபேர்வெல்டேல விடை கொடுத்து அனுப்புவாங்க. இப்போ முதல் தடவையா எல்லா ஸ்டூடன்ஸும் ஒரு புரொபசருக்கு விடை கொடுக்க வந்து இருக்குறது எனக்குப் பெருமையா இருக்கு..."

"மன்னிப்பு. தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை'"

ரமணா கேரக்டரில் சினிமாத்தனம் இருப்பினும் அதில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. லாஜிக் குறைகள் இருப்பினும் அதையெல்லாம் யோசிக்கவிடாமல் அந்த நம்பகத்தன்மை காப்பாற்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யம் குறையாமல் அதன் திரைக்கதை பார்த்துக்கொண்டது. மேலும், முருகதாஸின் கூர்மையான வசனங்களும் மேக்கிங் ஸ்டைலும் அவரை அடுத்தகட்டத்துக்குத் தூக்கிச் சென்றது.

ரமணா

மவுலிவாக்கம் கட்டட விபத்து நடந்த உடனேயே ரமணா திரைப்படம்தான் அனைவரின் நினைவுக்கும் வந்தது. இதுகுறித்து அப்போது முருகதாஸிடம் கேட்டபோது, "குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் அந்தக் காட்சியை ரமணா படத்தில் வைத்தேன்" என்றார்.

 ரமணா திரைப்படத்தை உருவாக்கும்போது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்தார் விஜயகாந்த். அவர் இறப்பதுபோல ஒரு காட்சியை க்ளைமாக்ஸில் வைக்கவே ஒரு துணிச்சல் வேண்டும். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த விஜயகாந்தை ஒப்புக்கொள்ள வைத்து அப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கினார் முருகதாஸ். 

ரமணா கதாபாத்திரம் தன்னுடைய கல்லூரிப் பேராசிரியர் ஜான்குமார் தந்த பாதிப்பில்தான் உருவானது என ஒரு மேடையில் கூறியுள்ளார் முருகதாஸ். 

ரமணா

விஜயகாந்தின் வெற்றிப் பட வரிசையில் ரமணா திரைப்படம் ஒரு மைல் கல்லாக இன்று வரை பேசப்படுகிறது. அந்தளவுக்குப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது இந்தப் படத்துக்குக் கிடைத்தது. சிறந்த வசனகர்த்தா விருது முருகதாஸ்க்கு கிடைத்தது. இந்தப் திரைப்படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ஊழலுக்கு எதிரான படம் இயக்குபவர்களால் ரமணா சாயல் இல்லாமல் படம் எடுக்க முடியாது. அது தற்போது வெளிவந்த மெர்சல் வரை பொருந்தும்... இப்படிப்பட்ட படம் தந்த இயக்குநர் முருகதாஸையும் அவர் படங்களையும் தமிழ் சினிமா என்றும் மறவாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்