“போலீஸ்கிட்ட இருந்து மக்கள்தான் எங்களைப் பாதுகாக்கணும்!” ‘அறம்’ குழுவிடமிருந்து ஒரு குரல்

அறம்

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நயன்தாரா, முக்கியமான ரோல்களில் வேல.ராமமூர்த்தி, பாண்டியன், ராமதாஸ், 'அது இது எது' பழனி பட்டாளம் ஆகியோரின் நடிப்பில் வரும் நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 'அறம்'. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தின் டீசரும் ட்ரெயிலரும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

அறம்

முதலில் பேசிய பழனி பட்டாளம், “நான் டிவி ஷோவுல காமெடி பண்ணி பாத்திருப்பீங்க. ஆனா, என்னை இந்தப் படத்துல சீரியஸா நடிக்க வெச்சிருக்கார் கோபி சார். சீரியஸ் ரோல் பண்ண முதல்ல தயங்குனேன். அப்புறம் டைரக்டர்தான் 'உங்களால முடியும். கண்டிப்பா பண்ணுவீங்க. நாகேஷ் கூட முதல் படத்துல சீரியஸ் ரோல்லதான் நடிச்சார். அப்புறம்தான் காமெடி கேரக்டர்கள்ல நடிச்சார்'னு என்னை என்கரேஜ் பண்ணி நடிக்க வெச்சார். எட்டுவருஷமா சின்னத்திரையில இருந்தாச்சு. நல்ல படத்துல பெரியதிரையில வரணும்னு சில படங்களைத் தவிர்த்திருக்கேன். நான் நினைச்ச மாதிரி ஒரு நல்ல படத்துல அதுவும் முதன்முதலா வெள்ளித்திரையில அறிமுகமாகி இருக்கேன். பெரிய ஸ்டார்களைப் படம் பிடிச்ச ஓம் பிரகாஷ் சார் கேமரால நான் முதன் முறையா படம்பிடிக்கப்பட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு. 'ஐயா' படத்துல இருந்தே நயன்தாராவின் தீவிர ரசிகன் நான். அவங்களை நேர்ல பார்க்கமாட்டேனானு நினைச்ச எனக்கு அவங்க கூடவே நடிக்கிற பாக்கியம் கிடைச்சது. அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கிட்டேன். எனக்கு கோபி சார் கொடுத்தது வாய்ப்பு இல்லை வாழ்க்கை' என்று உணர்ச்சியுடன் பேசி விடைபெற்றார் பழனி பட்டாளம். 

அறம்

அடுத்ததாகப் பேசிய 'ராஜா ராணி' பாண்டியன், ’’போட்டோகிராஃபரா இருந்த நான் இப்போ நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நயன்தாரா கூட ரெண்டாவது முறையா நடிக்கிறேன். இப்பவும் வெளிய போனா, 'நயன்தாராவைக் காட்டிலும் பெரிய மருமகள் உங்களுக்குக் கிடைச்சுடுவாங்களா?'னு கேக்குறாங்க. நிறைய படங்கள்ல எனக்கு போலீஸ் கேரக்டர்தான் வருது. அதனால, மாறுபட்ட வேடங்கள்ல நடிக்கணும்னு ஆசை. அது மாதிரியே  இந்தப் படத்துல கிராம அதிகாரி ரோல். என்னோட பெஸ்ட்டை கொடுத்திருக்கேன். படத்துல கிராம மக்களோட மக்களா வாழ முடிஞ்சுது. கதையை மட்டும் நம்பி களத்துல இறங்கியிருக்கார் இயக்குநர். 'அறம் என்னைக்கும் தோற்காது'ங்கிறது இதிலும் நிரூபணமாகும் பாருங்க' என்றபடி விடைபெற்றார்.

அறம்

“இந்தப் படம் உண்மையான, உணர்ச்சிகரமான படமா இருக்கும். இப்போ இருக்கும் சூழலில் மக்களுக்குச் சேரவேண்டிய படமா இருக்கும். 'பாகுபலி' படத்துல ரம்யா கிருஷ்ணன் அந்தக் குழந்தையைக் காப்பாத்துன மாதிரி நீங்கள்தான் படத்தைக் காப்பாத்தணும். ஒரு புரட்சிகரமான இயக்குநரா கோபி நயினார் வலம் வருவார். இவர் அடிக்கடி என்கிட்ட, 'படத்துல சொன்னதை நேர்ல நான் சொன்னேன்னா என்னைக் கைது கூட பண்ணிடுவாங்க' னு சொல்லிட்டே இருப்பார். ஆமா, இப்போல்லாம் கார்ட்டூனிஸ்ட் எல்லாம் கைது பண்றாங்களே’’ என்று நடப்புச் சூழல் பற்றி பேசி முடித்தார் ராமதாஸ். 

அறம்

இயக்குநர் கோபி நயினார் பேசும் போது, “இந்தப் படத்துக்கான கதையை நிறைய பேர்கிட்ட சொல்லும்போது ஆவணப்படம் மாதிரி இருக்குனு சொன்னாங்க. இயக்குநர் சற்குணம் சார் ஆபீஸ்ல செளந்தர்கிட்ட கதை சொன்ன பிறகு, தயாரிப்பாளர் ராஜேஷ் அறிமுகம் கிடைச்சது. கதையைக்கேட்ட ராஜேஷ், “இப்போது ஒருத்தர் வருவார் அவரிடம் கதை சொல்லுங்க” என்று சொன்னார். நான், ‘யார் வரப்போறாங்க’னு பார்ப்போம் என்று காத்திருந்தேன். வந்தது, நயன்தாரா. எனக்கு பயங்கர ஆச்சர்யம். அந்த ஆச்சர்யத்துடனேயே நயன்தாராவிடம் கதை சொன்னேன். கதைகேட்டு முடித்தவுடனேயே, ‘இந்த ஸ்க்ரிப்ட் நான் பண்றேன்’ என்று சொன்னார். நயன்தாராவிடம் கதை சொல்லும் போதே, ‘இந்தப் படத்தை எப்படி எடுக்க வேண்டும்’ என்கிற இடத்துக்கு நயன்தாரா போய்விட்டார். அந்தளவுக்கு அவர் இந்த ஸ்க்ரிப்ட்டில் ஒன்றாகிவிட்டார். ‘இந்தப் படத்தை இப்படிப் பண்ணணும். நாம அந்த கிராமத்துக்கே போய் ஷூட் பண்ணுவோம். படத்தில் இருக்கும் வசனங்களை மாத்தாதீங்க’ என்று சொன்னார்.

இந்தப் படத்துக்கு நயன்தாரா மிகச்சரியாக இருப்பார் என்று அவர் என்னிடம் பேசும்போதே முடிவு செஞ்சுட்டேன். படத்துல வொர்க் பண்ண எல்லாரும், 'ஒரு ஊர் பிரச்னைக்காகப் போயிருக்கோம். அந்தப் பிரச்னையை தீர்க்கணும்'ங்கிற மைண்ட் செட்லதான் இருந்தாங்க. முதல்ல படத்துல பாட்டே வேணாம்னுதான் ப்ளான் பண்ணோம். அப்புறம்தான் பாடல் வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம். நயன்தாரா, கேரவன் விட்டு வெளியவந்தாங்கன்னா, மறுபடியும் கேரவனுக்குப் போகமாட்டாங்க. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரா மாறிடுவாங்க. மத்தவங்க நடிக்கிறதையும் உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பாங்க. படம் முடிஞ்சு, 'ஒரு வெற்றிப் பட இயக்குநரா நீங்க வரணும்'னு சொன்னபோது ரொம்ப சந்தோசமா இருந்தது. இயலாமையின் குறியீடா பழனி பட்டாளத்தின் நடிப்பு இருக்கும். படத்துல நடிச்ச எல்லாரும் பாதிக்கப்பட்ட மக்களாகவே வாழ்ந்திருப்பாங்க. இப்போ இருக்கும் அரசியல் சூழல்ல போலீஸும் நீதியும் எங்களைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாக்காது; நீங்கதான் எங்களைப் பாதுகாக்கணும்’’ என்றபடி விடைபெற்றார் இயக்குநர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!