Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''எப்படியாவது ஆஸ்கர் வாங்கிடுப்பா!" - கமலிடம் நெகிழ்ந்த கே.பாலசந்தர்

Chennai: 

தன்னுடைய 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் கமலுக்கு இந்தப் பிறந்தநாள் சிறப்பானதாகத்தான் இருந்திருக்கக் கூடும். கமலைவிட கமலை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அவரது பிறந்தநாள் ஒரு கொண்டாட்டம்தான். வழக்கமான கொண்டாட்டமாக மட்டும் கமலுக்கு அன்றைய தினம் இல்லாமல் தனது அரசியல் பயணத்தின் முன்னோட்டமாக நேற்றைய நாளில் இருந்த விழாக்களில் அரசியலுக்கு வருவதற்கான செய்திகளையும் அதற்காக அவர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் சில செயல்களைப் பற்றியும் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் கமல். 

கமல்

கமலின் பிறந்தநாளுக்காக சாலைகளில் அமைந்திருந்த போஸ்டர்கள் மட்டுமன்றி  சமூக வலைதளங்களில் இருந்த போஸ்டர்களும் அவரை அரசியலுக்கு அழைக்குமாறும் அதே நேரத்தில் அவரது கலைப் பயணத்தை புகழ்ந்தும் இருந்ததைக் காண முடிந்தது. தனது சிறு வயதிலிருந்து கமல் சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது நடிப்புப் பசிக்கு ஆரம்பகாலத்தில் பாலம் அமைத்துக் கொடுத்தவர் கமலின் குருநாதர் இயக்குநர் கே.பாலசந்தர். கமலுக்கும், பாலசந்தருக்கும் இருந்த நெருக்கம், அன்பு பற்றி பேசுவதற்காக இயக்குநர் பாலசந்தரின் மேனேஜர் மோகனைத் தொடர்புகொண்டு பேசினோம். 

''பாலசந்தர் சாரிடம் 27 வருடம் பணியாற்றினேன். அவருக்குச் சகலமும் செய்யும் மேனேஜராக அவருடனேதான் இருந்தேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை. வெற்றிவேல் மூவிஸ்னு ஒரு சினிமா கம்பெனி, அக்கம்பெனியைச் சேர்ந்தவர்கள் பாலசந்தர்  படங்களை மட்டும்தான் விநியோகம் செய்வார்கள். அந்தச் சினிமா கம்பெனியில் நான் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பாலசந்தர் சார் மதுரைக்கு அடிக்கடி வருவார். அவருக்கு என்னுடைய தொழில் நேர்மை பிடித்திருந்தது. அதனால் என்னையும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். சாரின் 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தின் போதுதான் அவருடன் சேர்ந்தேன். 

எனக்குத் திருமணம் நடத்தி வைத்ததே கே.பி.சார்தான். என் திருமணத்துக்கு திரையுலகத்தைச் சேர்ந்த எல்லோரும் வந்தார்கள். என் வாழ்க்கையில் எல்லாமுமாக கே.பி.சார்தான் இருந்தார். பாலசந்தர் சாருடனே இருந்ததால், எனக்கு அவருடன் இருந்தவர்கள், பேசுபவர்களைப் பற்றி  நல்லாவே தெரியும்'' என்றவர் பாலசந்தர் மற்றும் கமல் இருவருக்குமான நெருக்கம் பற்றிச் சொல்கிறார். 

கமல்

''கமல் சார் கே.பி.சார் பையன் மாதிரி. மூத்த மகனா இல்லை இளைய மகனா என்பதை எல்லாம் சொல்ல முடியாது. கமல் சார் ஆரம்பக் காலத்தில் பாலசந்தர் சாரை 'சார்' என்றுதான் அழைத்து வந்தார். பிறகு 'ஐயா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். கமல் தன்னுடைய அப்பா இடத்தில்தான் கே.பி.சாரை வைத்திருந்தார். இவர்கள் இரண்டும் பேருக்கும் இடையில் கடிதத் தொடர்பு அதிகமாகயிருந்தது. அடிக்கடி இரண்டு பேரும் கடிதத்தில் பேசிக்கொள்வார்கள். களங்கம் இல்லாத மனிதர் பாலசந்தர் சார். அவருக்குக் கமல் என்றால் ரொம்பப் பிடிக்கும். 

கமல் சார் பாலசந்தர் சாரை கடைசியாகப் பார்த்தது 2014 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி. அன்று கமலின் பிறந்தநாள். கமல் வருகிறார் என்று தெரிந்தாலே பாலசந்தர் சார் மகிழ்ச்சி ஆகிவிடுவார். ''மோகன், வாடா நம்மளே போய் கமலைப் பார்த்துவிட்டு வருவோம்''. என்றுதான் சொல்வார். ஆனால், 2014 நவம்பர் 7-ஆம் நாள் கமல் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை, ரசிகர்களை எல்லாம் பார்த்துவிட்டு பகல் 11.45 மணிக்கு  யாரிடமும் முன்னதாகவே தகவல் சொல்லாமல் பாலசந்தர் சாரைப் பார்க்க வீட்டுக்கு வந்து விட்டார். 

அப்போது பாலசந்தர் சாருக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவருக்குச் சிறுநீரகப் பிரச்னை இருந்தது. அதனால், நான்தான் கே.பி.சாரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அந்தநேரம் கமல், பாலசந்தர் வீட்டுக்கு வந்து சாரை பார்க்கக் காத்துக்கொண்டிருந்தார். அப்போது கமல் வந்திருக்கும் விவரத்தை பாலசந்தர் சாரின் மனைவி ராஜம் அம்மா எனக்கு போனில் தெரிவித்தார். நான் கே.பி.சாரிடம் ''சார் கமல் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வந்திருக்கிறார்'' என்று சொன்னேன். ஆனால், மருத்துவமனையில் கே.பி.சாருக்கு அப்போது மருத்துவப் பரிசோதனை சென்றுகொண்டிருந்ததால் உடனே வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. இரண்டரை மணிநேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகி விட்டது. 

வருவதற்குக் கொஞ்சம் நேரமாகும் என்று கமலுக்கு போனில் தெரிவித்தால். ''பரவாயில்லை நான் காத்திருக்கிறேன்'' என்று கூறி, இரண்டரை  மணிநேரம் பாலசந்தர் சாரைப் பார்க்க அவரது வீட்டிலேயே காத்திருந்தார். கமலுக்கு அவ்வளவு நேரம் காத்திருந்து சாரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காத்திருந்தார். ஒரு வேலை இதுதான் கே.பி.சாரை நாம் கடைசியாகப் பார்க்கப் போகிறோம் என்று அவரது உள்மனது சொல்லியதால் காத்திருந்தாரா... என்று தெரியவில்லை. 

நான் பாலசந்தர் சாரை அழைத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து மதியம் வீட்டினுள் நுழைந்தேன். அப்போது கே.பி சார் கமலைப் பார்த்தவுடன், ''ஸாரிடா கமல்'' என்று சொல்லி கட்டிப்பிடித்தார். கமல், கே.பி. சார் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். இரண்டு பேரும் கட்டிப்பிடித்துக் குழாவிக் கொண்டார்கள். அப்போதுதான் 'உத்தமவில்லன்' படத்தில் கே.பி.சார் நடித்து முடித்திருந்தார். டப்பிங் வேலைகள் போய் கொண்டிருந்தன. அதைப் பற்றியெல்லாம் கமலிடம் விசாரித்தார். 

கமல்

கமல், கே.பி.சாரிடம் ''நான் கிளம்பறேன் சார். அமெரிக்காவில் படம் சம்பந்தமான வேலைகள் எல்லாம் இருக்கு. நான் அமெரிக்கா கிளம்புறேன்''னு கமல் சொல்லிக்  கிளம்பினார். அந்த நிகழ்வைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. அதன்பிறகு கமல் சார் பாலசந்தர் சாரைப் பார்க்கவேயில்லை. அதுதான் அவர்கள் சந்தித்துக்கொண்ட கடைசித் தருணம். அதன்பிறகு பாலசந்தர் சாருக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். அப்போது பாலசந்தர் சாருக்குப் பேச்சு வரவில்லை. அதனால் டாக்டர்கள் சாருக்கு நெருக்கமானவர்களை அழைத்துப் பேசி பார்க்கச் சொன்னார். உடனே, நான் ரஜினி, குஷ்பூ, வஸந்த், வைரமுத்து, சமுத்திரக்கனி என எல்லோருக்கும் போன் போட்டு மருத்துவமனைக்கு வரச் சொன்னேன். அப்போது ரஜினி வந்த போது ''யாருனு தெரிகிறதா சார்''னு கேட்டேன். ''அது ரஜினினு தெரியும்டா'' என பாலசந்தர் சார் சொன்னார். 

ரஜினிக்குப் பேர் வைத்ததே பாலசந்தர் சார்தான். ஹோலி அன்றுதான்அவருக்கு அந்தப் பெயரை வைத்தார். அதனால் ஒவ்வொரு ஹ்ோலின்றும் ரஜினி வீட்டிலிருந்து பாலசந்தர் சாருக்கு அன்புப்பரிசாக வேட்டி சட்டை அவர் மனைவி ராஜம் அம்மாவுக்கும் சேலை, பழங்கள் என எல்லாம் வரும். ரஜினி வீட்டிலிருந்து கிஃப்ட் வந்தாலே அன்று ஹோலி என்று அர்த்தம்னு நான், பாலசந்தர் சார் எல்லோரும் பேசிச் மகிழ்வோம். ரஜினிக்கும் போன் பண்ணி வாழ்த்து தெரிவிப்பார். ரஜினியின் 60-வது பிறந்தநாளில் ரஜினியுடன் சினிமாவில் பயணித்த அனைவரையும் ரஜினி வரவழைத்து விருந்து கொடுத்தார். அதற்கு கே.பி. சார், வாசு, மணிரத்னம் எல்லோரையும் அழைத்திருந்தார். ரஜினி ஹோலி'ப் பண்டிகையை அவரது பிறந்த நாள் போல் எப்போதும் கொண்டாடுவார். 

பாலசந்தர் சார் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கமல் அமெரிக்காவில் இருந்ததால் அவரை நேரில் வந்து பார்க்கமுடியவில்லை. அந்த நேரத்தில் கமல் எனக்கு போன் பண்ணி கே.பி.சார் எப்படி இருக்கிறார் என்று அடிக்கடி விசாரிப்பார். அப்போது கமல் சாருக்கு நான் போன் போட்டு ''சார் கே.பி.சார்கிட்ட பேசுங்க. அவரால் பேச முடியவில்லை. நீங்கள் பேசினால் மிகவும் சந்தோஷப்படுவார்''. என்று சொன்னேன். உடனே, கமல் சார் போனில் பேசினார். 

ஆனால், கே.பி. சார் பேசினது முழுவதும் கமல் சாருக்குப் புரிந்தா என்று தெரியவில்லை. ஏன்னா, கே.பி.சாரால் அப்போது சரியாகப் பேச முடியவில்லை. போனை வைப்பதற்கு முன்னால் கே.பி.சார் கமலிடம் ஒண்ணு சொன்னார். ''எப்படியாவது ஆஸ்கர் வாங்கிவிடுடா''னு. அது கமல் சாருக்குப் புரிந்தா இல்லையானு தெரியவில்லை. 

கமல்

பாலசந்தர் சார் டிசம்பர் 23-ஆம் தேதி இறந்துவிட்டார். அந்த நேரத்தில் கமல் அமெரிக்காவில் இருந்தார். அப்போது கமல் எனக்கு போன் பண்ணினார். ''மோகன், விஷயம் கேள்விப்பட்டேன். நான் உடனே கிளம்பி வர்றேன். நாளைக்கு இரவு பத்து மணிக்கு சென்னையில் இருப்பேன்''னு சொன்னார். கமல் வருவது உறுதியாகிவிட்டது. 

உலகம் முழுக்கக் கொண்டாடுகின்ற பண்டிகை கிறிஸ்துமஸ். அந்நாளில் பலபேர் விமானத்தின் மூலம் ஊருக்குப் போவார்கள். அன்று விமான டிக்கெட் கமலுக்கு உடனே கிடைக்கவில்லை. அதனால்தான் அவர் டிசம்பர் 24-ஆம் தேதி இரவு பத்து மணிக்கு வருகிறேன் என்று சொன்னார். இந்த விஷயம் எனக்கும், பாலசந்தர் சாரின் மகன் பிரசன்னாவுக்கும் தெரியும். அந்த நேரத்தில் டாக்டர்கள் சீக்கிரம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு உடலை எடுத்துவிட்டோம். அதனால்தான் கமல் சாரால் உடனே வரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், பல பேர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். 

எப்போதும் கமல், பாலசந்தர் சார் மீது அளவுகடந்த அன்பில்தான் இருந்தார். பாலசந்தர் 84-வது பிறந்தநாளை அவருக்கு நெருக்கமானவர்கள் பலரை அழைத்துக் கொண்டாட, அவருடன் இருக்கும் சில பேர் முடிவு செய்தோம். அதில் பாலசந்தர்  மகன் பிரசன்னா, மகள் புஷ்பா கந்தசாமி, ராஜம் அம்மா, கீதா அம்மா எல்லோரும் இருந்தார்கள். 

அப்போது அவர் திரையுலகில் அறிமுகப்படுத்திய பலரையும் விழாவுக்கு அழைத்தோம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கமலை அழைத்தோம். அதாவது, பாலசந்தர் சார் கேக் வெட்டும்போது கமல் சார் சர்பிரைஸாக என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்வில் பாலசந்தர் சார் எடுத்த 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தைத் திரையிட்டோம். அந்தப் படத்தை பாலசந்தர் சாருடன் உட்கார்ந்து கமலும் பார்த்தார். அந்த நேரத்தில் வந்த எல்லோருக்கும் ஶ்ரீதர் தன் கைப்பட வரைந்த பாலசந்தர் படத்தை ஃபிரேம் பண்ணி அதில் பாலசந்தர் கையால் 'நினைத்தாலே இனிக்கும்' என்று எழுதி எல்லோருக்கும் பரிசாகக் கொடுத்தார் பாலசந்தர் சார். கமலுக்கும் கொடுத்தார். எப்போதும் பாலசந்தர் சார் ஆன்மா கமல் சாரை வாழ்த்திக் கொண்டிருக்கும். 

கமல்

பாலசந்தர் சார் 84வது வயதில் மறைந்து விட்டார். அதன்பிறகு என்னைத் திரையுலகில் இருக்கும் பலரும் அவர்களுடன் இருக்கும்படி கேட்டார்கள். நான் பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராய் இருந்த சமுத்திரக்கனி சாரிடம் சென்று விட்டேன். சமுத்திரக்கனி வீட்டில் எங்கு பார்த்தாலும் பாலசந்தர் படம்தான் இருக்கும்'' என்று சொல்லி முடித்தார் மோகன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்