Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..!” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ்

கோபி நயினார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அறம்'.  கலெக்டர் மதிவதனியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. 'அறம்' படத்தைக் கொண்டாடும் அனைவரும் படத்தின் டெக்னிக்கல் டீமையும் விட்டு வைக்கவில்லை. அறம் படத்தின் ஒளிப்பதிவு அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், 'ஆரம்பம்', 'காஷ்மோரா', 'அறம்' என மூன்று படங்களிலும்  நயன்தாராவுடன் ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்திருக்கும் ஓம் பிரகாஷிடம் பேசினோம். 

அறம்

“என் கெரியல்ல 'ஆரம்பம்' படம்தான் முதல் மாஸ் ஹிட். அப்போதுதான் நயன்தாராவின் அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு இயக்குநர் கோகுல் இயக்கிய 'காஷ்மோரா'. இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பார்த்து நானே பலமுறை பிரமித்திருக்கிறேன். ‘அறம்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது நயன்தாராதான். ஒருநாள் அவரிடமிருந்து போன் வந்தது. ''பிரகாஷ் ஒரு கதை இருக்கு. பண்ணலாமானு கேட்டுட்டு சொல்லுங்க’’னு சொன்னாங்க. இயக்குநர் கோபி நயினாரிடம் கதை கேட்டதும் பிடித்திருந்தது. ஓகே சொல்லிட்டேன். ‘ஆரம்பம்’, ‘காஷ்மோரா’, ‘அறம்’ இந்த மூன்று நயன்தாராவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை. அஜித் எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் அர்ப்பணிப்பாக இருப்பாரோ அப்படிதான் நயன்தாராவும். ஆன் ஸ்க்ரீனில் நயன்தாராவை பார்த்தால் கேரக்டராகவே மாறியிருப்பார். அந்த கேரக்டருக்கான நேர்மை அவர்கிட்ட இருக்கும்.

'அறம்' படத்தில் லைவ்வாக நிறைய ஷூட் பண்ணியிருக்கிறோம். ஏன்னா, நிறையத் துணை நடிகர்கள் நயன்தாராவை சுற்றி பேசிட்டு இருக்கும்போது கேமரா எப்போது நயன்தாராவிடம் வரும், போகும்னு தெரியாது. அதனால் லைவ்வாக நிறையக் காட்சிகள் எடுத்தோம். அதையெல்லாம் தத்ரூபமாக நயன்தாரா செய்தார். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தா மாலை வரை கேரவனுக்கு போக மாட்டார் நயன்தாரா. ஸ்பாட்டில் எவ்வளவு வெயில் அடித்தாலும், அவரோட டேக் முடிந்த பிறகும் மற்றவர்கள் நடிப்பதைப் பார்ப்பார்.”

அறம்

'அறம்' படத்தில் ரொம்ப சவாலாக இருந்த காட்சி எது?

“கண்டிப்பாக குழந்தை தன்ஷிகா காட்சிகள்தான். இந்தப் படத்துக்காக ஒரு கிணறு வெட்டினோம். அது ஒரு இருபது அடி ஆழம் இருக்கும். அதில் உண்மையாகவே குழந்தையை உட்கார வைத்துத்தான் ஷூட் செய்தோம். ஏன்னா, இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால் மக்கள் எல்லோரும் புத்திசாலியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை ஏமாற்றாமல் இருக்கவே நிஜமாக ஒரு குழிக்குள் குழந்தையை உட்கார வைத்தோம். கேமரா அந்தக்குழிக்குள் போகும்போதுதான் குழந்தைக்கு வெளிச்சமே வரும். மீதி நேரம் இருட்டாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தை ரொம்பவே பயந்துவிட்டாள். குழந்தையும் அபாரமாக நடித்தாள். குழந்தை மீது விழும் வெளிச்சம் தத்ரூபமாக ஸ்க்ரீனில் தெரிய வேண்டும். அதற்காக ரொம்ப மெனக்கெட்டோம். 

'காக்கா முட்டை' ரமேஷையும் உண்மையாகவே குழிக்குள் இறக்கினோம். ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் திக் திக் அனுபவமாகதான் இருந்தது. படத்தில் நடித்த எல்லோரும் தத்ரூபமாக நடித்தற்குக் காரணம் அங்கியிருந்த அனைத்தும் லைவ்வாக அப்படியே இருந்தால்தான். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மட்டுமில்லை எல்லோருக்குமான வெற்றி.’’

அறம்

ஆரம்பம் படத்தில் அஜித்துடன் வேலைப் பார்த்த அனுபவம் பற்றி?

“டைரக்டர் ஆர்டிஸ்ட் அஜித்னு சொல்றதைவிட, ஒரு டெக்னிஷியன் ஆர்டிஸ்ட் அப்படினுதான் அஜித் சாரை நான் சொல்வேன். நம்ம என்ன சொல்றோமோ அதை அப்படியே ஃபாலோ பண்ணுவார். நம்ம திருப்தி அடையுற மாதிரி எவ்வளவு டேக் கேட்டாலும் செய்வார். அந்தப் படத்தில் வருகின்ற ஒரு கார் சீக்வென்ஸ் சீன் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவருக்குக் காலில் விபத்து ஏற்பட்டு விட்டது. 

காரில் வேகமாக ஒரு சீன்னை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அவருடைய கால் முட்டிக்குக் கீழ் அடிப்பட்டுத் தொங்குகிறது. டைரக்டர் காருக்கு பின்னாடி இருக்கிறார். நான் காருக்கு முன்னாடி அவர் முகத்துக்கு நேராக கேமராவை வைத்து ஷூட் செய்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் முகத்தில் எந்த வலியும் காட்டாமல் டைரக்டர் கட் சொல்லும் வரைக்கும் அந்த சீன்னை நடித்து முடித்தார். அன்னைக்கு மட்டும்தான் அவர் ஓய்வு எடுத்தார். அடுத்த நாளே கையில் ஸ்டிக் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்கிறார். அவரால் ஷூட்டிங் பாதியில் நிற்கக் கூடாது என்பதில் கவனமாகயிருந்தார். ஏன்னா, 'ஆரம்பம்' படம் மும்பையில் ஷூட் செய்தோம். அதற்காக அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். ஷூட்டிங் நடக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நஷ்டம் என்பதால் அவர் காலை முழுவதும் ஹூட்டிங் முடித்துவிட்டு மாலையில் ஹாஸ்பிட்டல் போயிட்டு வருவார். அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பார்க்க முடியாது.’’

ஓம் பிரகாஷ்

ஓம் பிரகாஷ் எப்படி ஒளிப்பதிவாளராக ஆனார்?

''நான் பிறந்தது கோயம்புத்தூர். அங்கேதான் காலேஜ் வரைக்கும் படித்தேன். என் அப்பா ஒரு ஸ்டில் போட்டோகிராபர். அதனால், சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் எனக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது. கேமராப் பற்றி அனைத்தையும் கற்றுக் கொண்டது அப்பாவின் ஸ்டுடியோவில்தான். அம்மா, அப்பா இரண்டு பேரும் ஓவிய ஆசிரியர்கள். அதனால் என்னை ஒரு ஆர்டிஸ்டாக உருவாக்க வேண்டுமென்று நினைத்தார்கள். படித்தது கூட ஓவியம் பற்றிய படிப்புதான். 

முதலில் நான் விளம்பர படங்களுக்குத்தான் ஒளிப்பதிவு செய்தேன். எனக்கு அதில் ஆர்வம் அதிகம். சினிமாவில் வேலை பார்க்க போகிறேன் என்று சொன்ன போது எனக்கு வீட்டிலிருந்து நிறைய எதிர்ப்புகள் கிளம்பியன. அப்போது அப்பாவுடைய நண்பர் ஸ்டில் ரவி என்னைச் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகுதான் சினிமாவில் முழுநேர ஒளிப்பதிவாளர் ஆனேன். 

அப்பாவும் சினிமாவில் வேலை பார்த்திருக்கிறார். அதனால் இதில் இருக்கும் கஷ்டம் அப்பாவுக்குத் தெரியும். அவர் 'ரஜினிமுருகன்' படத்திலும் ஒரு ரோல் பண்ணியிருப்பார். அதுதான் அவர் கடைசியாக செய்த படம். படத்தில் ராஜ்கிரன் சார் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட உடன் ஒரு வயதானவர் அவருடைய நண்பராக வந்து, ''போயிட்டானா, அவன்'' அப்படினு அழுவார். அந்த கேரக்டரில் நடித்தது என் அப்பாதான். அந்தப் படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் அப்பா இறந்துவிட்டார். ரொம்ப கஷ்டமாகயிருந்தது. தற்போது அப்பா இருந்து இருந்தால் என் வளர்ச்சியை பார்த்து பூரித்து போயிருப்பார்” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் ஓம் பிரகாஷ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!