Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘லட்சுமி’ அளவுக்கு உங்க குறும்படம் ஹிட் ஆகணுமா... இதான் வழி!

Chennai: 

`நாளைய இயக்குநர்' சமயங்களில் சமூகத்தில் பாதிப்பேர் கேமராவைத் தூக்கிக்கொண்டு குறும்படம் எடுக்கக் கிளம்பினர். பல படங்கள் போஸ்டரோடு படுத்துவிட்டன, சில படங்கள் மட்டுமே படமாக முழுமை பெற்றன. அதிலும் சில படங்கள்தான் பரவலான வரவேற்பை பெற்று, அந்த இயக்குநர்களுக்கு வாழ்வளித்தது. இடையில் குறும்படம் கலாசாரம் கொஞ்சம்கொஞ்சமாய் கரைந்துபோய்  போட்டோகிராஃபியும் மீம்ஸும் இளைஞர்களின் ஆதர்சம் ஆகின. இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு மறுபடியும் குறும்பட குரூப்பைச் சேர்ந்தவர்கள் தலை தூக்க ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு படத்தையும் எப்படியாவது வைரலாக்கிவிட வேண்டுமென நெருப்பாய் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். உண்மையில், ஒரு குறும்படத்தை வைரலாக்குவது ரொம்பவே எளிது! எப்படின்னா, இதோ இப்படித்தான்...

குறும்படம்

முன்னொரு காலத்தில், அரை டவுசர் போட்ட ஐந்து வயதுச் சிறுவன், அழுக்கு வேட்டி கட்டிய 80 வயது தாத்தா போன்ற பாவப்பட்ட கேரக்டர்களை பிரதான பாத்திரமாக வைத்து படமெடுப்பார்கள். எந்த மூலையிலிருந்தாவது விருதுகள் வந்துகொண்டேயிருக்கும். யூ-ட்யூபிலும் `அவார்டு வின்னிங் ஷார்ட் ஃபிலிம்' என கெத்தாகப் பதிவேற்றினார்கள். அப்படி விருது எதுவும் கிடைக்காதவர்கள், அவர்களுக்கு அவர்களே காசியப்பன் பாத்திரக் கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கி `அவார்டு வின்னிங் ஷார்ட் ஃபிலிம்' எனும் அடைமொழியோடு ரிலீஸ் செய்தார்கள். இந்தக் காலத்தில் எத்தனை விசில் விட்டாலும் இந்த பப்பு வேகாது என்பதை முதலில் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும். 

`எது சொன்னாலும் சோஷியல் மெசேஜ் கலந்துதான் சொல்வேன். ஆனாலும் என் படம் வைரல் ஆகணும்' என நினைப்பவர்களுக்குப் பெண்ணியம்தான் ஒரே சாய்ஸ். அதையும் எல்லோருக்கும் புரிவதுபோல் தெளிவாய் பேசிவிடக் கூடாது, பேசவும் முடியாது. படம் எப்படியும் ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும்தான் வரும். அதுதான் நமக்குத் தேவை. `ஈயம்தான் பூசியிருக்கே' என ஒரு குரூப்பும் `ஈயம்தான் பூசலையே'னு ஒரு குரூப்பும் உங்கள் படத்தை சாக்காக வைத்துக்கொண்டு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அடித்து விளையாடும், படமும் வைரல் ஆகிடும். அப்படியே அப்துல்கலாம், பாரதியார் என கூடவே யாரையாவது டேக் செய்தால் ஷ்யூர் ஷாட். சாதி, சுற்றுச்சூழல், கல்வி, அரசியல் என வேறெந்த பிரச்னையைப் பற்றி உங்கள் படம் பேசினாலும், படத்தை பற்றி மக்கள் பேசமாட்டார்கள். ஏன்னா டிசைன் அப்படி...

`இதெல்லாம் வேண்டாம் ரிஸ்க்' என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது `ரோம்-காம்'. ரொமான்டிக் காமெடி குறும்படங்களெல்லாம் விமல் படங்களைப் போன்றது. பி,சி சென்டர்களில் பயங்கரமாகப் பேசப்படும். இந்தப் படங்களின் அடிப்படை தகுதிகள் என்னென்னனு சொல்றேன், குறிச்சு வெச்சுக்கோங்க.

படத்தின் டைட்டில் கண்டிப்பாக ஹிட்டான பாடல் ஒன்றின் முதல் வரியாகத்தான் இருக்கணும். அதற்காக `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா', `சுப்பம்மா சுப்பம்மா சூளூரு சுப்பம்மா' என கப்பித்தனமாக டைட்டில் வைக்கக் கூடாது. `நீதானே என் பொன்வசந்தம்', `விண்ணைத்தாண்டி வருவாயா' என கௌதம் மேனனே பாடலின் வரிகளைத்தான் தலைப்பாக வைப்பார் இல்லையா. நீங்கள் அவர் படத்தின் பாடல் வரிகளையே சுட்டு டைட்டிலாக வைத்துவிடுங்கள், மேட்டர் ஓவர். ஏனோ வானிலை மாறுதே, மறுவார்த்தை பேசாதே... நல்லாருக்குல்ல..!

குறும்படம்

படத்தை செல்போனிலேயே ஒளிப்பதிவு செய்தாலும் பரவாயில்லை. ஆனால், கடனை உடனை வாங்கியாவது ஹெலிகேமை ஒருநாள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுக்க பல்லாவரத்தில் ஆரம்பித்து பட்டாபிராம் வரைக்கும் குறுக்க மறுக்க பறக்கவிட்டு, அதைப் படம் முழுக்க இடையிடையே சேர்த்துவிடுங்கள். `தல கேமரா அள்ளுது' என கமென்ட் போடுவார்கள் ரசிகப்பெருமக்கள். நடிகர்களை விட ஹெலிகேம்தான் படத்துக்கு ரொம்ப முக்கியம். தெரிஞ்சுக்கிடுங்க... 

வசனங்களை எக்காரணத்தைக் கொண்டும் சொந்தமாக யோசித்து எழுதிவிடாதீர்கள். `ஹே ஃப்ராடு ஐ லவ் யூ டா', `ஹே லூஸு ஐ லவ் யூ டி' போன்ற முகநூல் பக்கத்துக்குள் மூக்கைப் பிடித்து முங்கியெழுந்தால் அத்தனை வசனங்கள் கிடைக்கும். படிக்கப் படிக்க கண்கள் வியர்க்கும், மூக்கு அழுவும். அதேபோல், நான்கு நிமிட படமாகவே இருந்தாலும் மூன்றரை நிமிட பாடல் ஒன்றை வைத்துவிட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு.

படத்தின் கலரிஸ்ட்டுக்கு கருங்காப்பி போட்டுக்கொடுத்து எக்ஸ்ட்ரா டைம் வேலை வாங்கவேண்டும். பார்ப்பவர்கள் `சேப்புனா சேப்பு... அப்படி ஒரு சேப்புணே...' என செந்திலைப் போல் ஆச்சர்யமாக வேண்டும். ஃபேக் ஐடிகள் எதையெல்லாம் புரொஃபைல் பிக்சராக வைப்பார்கள். பூ, குழந்தைகள், நாய்க்குட்டி, பூனைக்குட்டி, பட்டாம்பூச்சி இதுதானே. அவை எல்லாமே படத்திலும் இருக்க வேண்டும். சீரியல் நடிகைகள், ஜூனியர் நடிகைகளை மட்டும் நடிக்கவைத்து விட்டால் படம் ஹிட்டோ ஹிட்டு, வைரலோ வைரல், டிரெண்டிங்கோ டிரெண்டிங்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்