வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (18/11/2017)

கடைசி தொடர்பு:10:02 (18/11/2017)

நடிகர் நயன்தாரா 'தோழர் நயன்தாரா' ஆனது எப்படி..? #HBDNayanthara

"வெளிப்படைத்தன்மை ஒத்த மெய்யறிவு வேறேதுமில்லை" என்பர். நடிகர் நயன்தாரா மீது ரசனையைத் தாண்டிய ஈர்ப்பு தொற்றியதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

நயன்தாரா

நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதால் எவராலும் சிறந்த நடிகர் ஆகமுடியும். ஆனால், மக்கள் நேசிக்கும் கலைஞர் ஆவதற்கு ஆற்றல் மட்டுமே போதுமானது அல்ல. மக்கள் மத்தியில் நட்சத்திர இடத்தைப் பெறுவது கடினம். அதுவும், பெண் நடிகர்களின் ரசிகர்களில் பெரும்பாலானோர் இயல்பிலேயே 'பொசசிவ்' தன்மை மிகுந்தவர்கள். அவர்கள் மனதில் ஆழமாக நீண்ட காலம் தங்குவது அரிது. அதை நடிகர் நயன்தாராவால் சாத்தியப்படுத்த முடிந்திருப்பதற்குப் பின்னால் மலைக்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளது தெளிவு.

நடிகர் நயன்தாரா நட்சத்திர நிலையை அடைவதற்கு அடிப்படையாக இருந்த மூலதனம் என்னவோ வசீகரமும் கவர்ச்சியும்தான். ஆனால், இவற்றுடன் நடிப்பாற்றலும் அணுகுமுறையும்தான் அந்த நட்சத்திர உச்ச நிலையைத் தக்கவைத்துக்கொள்ள துணைபுரிந்திருகிறது. 

முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் வரிசையாக வாய்ப்பு வந்தபோது, அவற்றில் தனக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பொழுதுபோக்கவோ அல்லது ரசிக்கவோ வாய்ப்புள்ளது என்றுதான் கணித்த படங்களில், தன் பங்களிப்பு குறைவாக இருந்தபோதும் ஒப்புக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுதான் திரைத்துறையின் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இவர் மீதான மதிப்பை வெகுவாகக் கூட்டியது.

நயன்தாரா

வணிக நோக்கம் கொண்ட பொழுதுபோக்குப் படங்களுக்கு நடுவே அசல் சினிமாவிலும் அவ்வப்போது முத்திரைப் பதிப்பதில் ஈடுபாடு கொண்டதை 'ஈ', 'மாயா' முதலானவற்றைச் சுட்டிக்காட்டலாம்.

தற்போதையச் சூழலில், தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியில் நோக்கும்போது, ஒரு பெண் நடிகர் இடம்பெற்றுள்ளார் என்பதற்காகவே தயாரிப்பு, வெளியீடு, விநியோகம் ஆகியவற்றில் நம்பி முதலீடு செய்ய முன்வருகிறார்கள் என்றால், அது நடிகர் நயன்தாரா என்ற பெயருக்காகத்தான் இருக்கும். நட்சத்திர ஆண் நடிகர்களுக்கு மட்டுமே இதுபோன்ற நம்பகத்தன்மை மிகுதியாக உள்ள சூழலில், பெண் நடிகருக்கும் ரசிகர்களின் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டை நிர்ணயிக்கும் இடத்தை எட்டிவிட்டார் என்பதை 'மாயா' மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

'தனி ஒருவன்', 'இருமுகன்', 'நானும் ரெளடிதான்', 'காஷ்மோரா' போன்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களுக்கு நடுவே மலையாளத்தில் 'புதிய நியமம்' என்ற படைப்பை தேர்ந்தெடுத்து நடித்தது நயன்தாரா எனும் நடிகர் மீதான மதிப்பை பயங்கரமாகக் கூட்டியது. அந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு வியக்கத்தக்கது. தமிழ் சினிமா 13 ஆண்டு காலமாக நயன்தாரா எனும் மகத்தான நடிகரை கச்சிதமாகப் பயன்படுத்தாமல் போய்விட்டதே என்ற கோபம் கொப்பளித்தது. 'மாயா'வுக்குப் பின் 'அறம்' மூலம் அவரின் நடிப்புத் தரத்தை தமிழ் சினிமா கண்டுணரும் வாய்ப்பு ஏற்பட்டதில் அந்தக் கோபம் தணிந்தது.

நயன்தாரா

நிழலில் நயன்தாரா மீதான ஈர்ப்பு நிரம்பி வழிந்த சூழலில், நிஜத்தை நோக்கி நகர ஆரம்பித்தபோதுதான் அவரது தோழமை மனப்பான்மையை முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆம், தோழர் நயன்தாரா மீதான ஈடுபாடு உயர்ந்தது. தன் துறைசார்ந்த பணிகளில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அர்ப்பணிப்பு நிறைந்தது. இயக்குநர் 'ப்ரேக்' சொன்னால் மட்டுமே கேரவனுக்குள் நுழையும் பழக்கம் உள்ளவர். அதுவரை தனக்கான காட்சி இல்லாதபோதும், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் பார்வைக்கு முன்தான் இருப்பார். இயக்குநர் நினைத்த மாத்திரத்தில் கேமரா முன்பு தன்னை நிறுத்திக்கொள்ளலாம் என்ற ஆர்வம் அது. காலதாமதம் என்பது நயன்தாராவின் அகராதியில் கால் நுழைக்காத ஒன்று. ஒருநாள் சென்னையில் இரவு 10 மணி வரை படப்பிடிப்பு. அடுத்த நாள் காலையில் கும்பகோணத்தில் வேறொரு படப்படிப்பு. அந்த இரவில் காரில் விரைந்தவர், அதிகாலை 7 மணிக்கு முதல் ஆளாகப் படப்பிடிப்பில் தயாராக இருந்தார். வேறென்ன சொல்ல!

தன்னால் துடைக்கத்தக்க துயர்பற்றி கேட்டறிந்தால் சத்தமின்றி செய்துவிடுவதிலும் பேரன்புத் தோழமை மிக்கவர். நட்சத்திர கலைஞர்களாக இருப்பவர்கள் பொருளுதவிகள் சார்ந்த சேவையை அளிப்பதும், அதுதொடர்பான செய்திகள் வெளியாவதும் 'க்ளிஷே' ஆகிவிட்டதுதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் பிரைவசி கருதி, தன்னால் உதவி பெறுபவர்களின் விவரம் வெளியில் தெரியக் கூடாது என்பதில் கவனத்துடன் இருப்பவர் என்பதால், அவரது உதவிப் பட்டியலையும் இங்கே வெளியிடாமல் விட்டுவிடுகிறேன். ஆனால், அன்போடு கூடிய தோழமை உள்ளம் நிறைந்தவரின் நற்பணிகளைப் பொதுவாகவேனும் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை என்பதால்தான் இந்த பாரா.

இயக்குநர் கோபி நயினார் கதை சொன்னது தொடங்கி 'அறம்' ப்ரொமோஷன்களில் நயன்தாரா தீவிரம் காட்டியது வரை நம்மில் பலரும் அறிந்ததே. மக்கள்மீது அக்கறை கொண்ட தோழமைக்காக தன் கொள்கைகளுக்கு ஓய்வளிக்கத் தயக்கம் காட்டுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவு கிடைக்கிறது. இயக்குநர் கோபி நயினார் கடந்து வந்த பாதையை அறிந்துகொண்ட நயன்தாரா, தமிழ் சினிமா படைப்புத்தளத்தில் அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருவது தனது விருப்பம் என்று தாமே முன்வந்து 'அறம்' மக்களைச் சென்றடையவும், வெற்றி பெறவும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறார்.

நயன்தாரா

'டோரா' குறிப்பிடத்தக்க வர்த்தக வெற்றி பெறாத காரணத்தால், 'அறம்' படத்துக்கு மறைமுக நெருக்குதல்கள் தோன்றின. ஆனால், இயக்குநர் கோபி நினைத்தபடி 'அறம்' வெளிவர வேண்டும். அப்படத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று தெளிவுடனும் உறுதியுடனும் இருந்தார். சரியான தருணம் அமையும் வரை நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

'அறம்' பட டைட்டில் கார்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதைக் கவனத்திருப்பீர்கள். 'அறம்' நேர்த்தியாக வெளிவருவதற்கு தன் உறுதுணைத் தோழரிடமும் உறுதுணைப் பெறத் தயங்கவில்லை தோழர் நயன்தாரா. அதேபோல், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரெளடிதான்' படம் எவ்வித நெருக்கடியுமின்றி வெளிவருவதற்கு நயன்தாரா உறுதுணையாக இருந்திருக்கிறார் என்ற தகவலையும் கேட்டறிந்ததுண்டு.

தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மீது எல்லையற்றை நேசத்தைக் கொட்டுவதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிகர் அவர்களே. 12 ஆண்டு காலமாக ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதற்கு நயன்தாராவின் தோழமை மிக்க வெளிப்படையானதும் உண்மையானதுமான அணுகுமுறைதான் என்பதில் துளியும் ஐயமில்லை. தனி வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தங்கள்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று நம்புகிறேன். திரைத்துறையில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் தன்னளவில் நூறு சதவீத உண்மையான பேரன்புடன் இருப்பதை ரசிகர்கள் கவனிக்காமல் இல்லை. அந்தப் பேரன்புதான் ரசிகர்களை 'தோழர்' என நடிகர் நயன்தாராவை நேசத்துடன் விளிக்கவைக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்