“நாடகத்துறையில் 25 வருடம்... கமலுடன் 10 வருடம்... சர்வதேச விருது..!” - மகிழ்ச்சியில் நடிகர் சண்முகராஜன் | Actor shanmugarajan says about his drama experience

வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (19/11/2017)

கடைசி தொடர்பு:10:58 (20/11/2017)

“நாடகத்துறையில் 25 வருடம்... கமலுடன் 10 வருடம்... சர்வதேச விருது..!” - மகிழ்ச்சியில் நடிகர் சண்முகராஜன்

'விருமாண்டி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் சண்முகராஜன். நாடகக் கலைஞரான இவரது 25 வருட பணியைப் பாராட்டி, சர்வதேச நாடக விருதை அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு நாடகத்துறை. நமது வாழ்த்தைக் கூறிவிட்டு சண்முகராஜனிடம்  பேசினோம்.

சண்முகராஜன்

''ராமநாதபுரம் என்னுடைய சொந்த ஊர். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் மதுரையில் படித்தேன். அப்பா டிரைவராக இருந்தார். என் தாத்தாவுக்குக் கலைகள் மீது ஆர்வம். ஆனால், நாடகத்தில் தாத்தா நடித்தது இல்லை. சின்ன வயதில் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் சிலம்பம் மற்றும் சில கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், பெரிதாக எல்லாம் நாடகத்தில் நடித்தது இல்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 1992-ஆம் ஆண்டில்தான் எனக்கு சமகால நாடகம் அறிமுகமானது. அப்போதுதான் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தேன். முதுகலை தமிழ் படித்தேன். அந்தச் சமயத்தில்தான் தொடர்ந்து நாடகத்தில் ஆளுமையுடன் இருக்கின்ற ராமானுஜம், சீனிவாசன் ஆகியோரின் நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் வேலை செய்தேன். 

அப்புறம் 'அலைகள்' அப்படிங்கிற அமைப்பில் நாடக ஒருக்கிணைப்பாளராக வேலை செய்தேன். அதன்பிறகு டெல்லி தேசிய நாடகப் பள்ளில் மூன்று ஆண்டுகள்  படித்தேன். 2002-ஆம் ஆண்டிலிருந்து நிகழ்கால நாடகப் பள்ளி என்ற அமைப்பை மதுரையில் ஆரம்பித்து தொடர்ந்து நாடகத் தயாரிப்புகள், நாடக விழாக்கள்  செய்து கொண்டு வருகின்றேன். இதைப் பாராட்டிதான் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சுவிஸ் என்கிற நிறுவனம் எனக்கு சர்வதேச நாடக விருதை அறிவித்துள்ளது. விருது அறிவித்த நிறுவனத்துக்கும் நாடகத்துறையில் இது 25-வது வருடம். எனக்கும் 25-வது வருடம். 

நான் படித்த தேசிய நாடகப் பள்ளிக்கு படிப்பதற்காக நிறைய மாணவர்களை அனுப்பியிருக்கிறேன். நான் அனுப்புவதைப் பார்த்துவிட்டு நிறைய குழுக்களிலிருந்து அனுப்பிவைக்கிறார்கள். நிகழ்கால நாடக இயக்கத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு கஷ்டப்படுகிற மாணவர்கள் எல்லோரையும் கலை சார்ந்த படிப்புக்காகவே வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். நாடகத்தில் என்னால் முடிந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றேன். அது சந்தோஷமாக இருக்கு. 

சண்முகராஜன்

திராவிட இயக்க நாடகங்களில் இருந்தவர்கள் எல்லோரும் சினிமாவுக்கு வந்தபிறகு, நாடகத்துறை அழிந்து போய்விட்டது என்ற மோலோட்டமான எண்ணம்தான் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது. ஐரோப்பா, டெல்லி, கொல்கத்தாவில் இன்னும் பரவலாக நாடகத் துறை இருக்கு. நம்ம நாட்டில் அப்படி இருக்க அரசு உதவி செய்யணும். உலக நாடுகள் சிலவற்றுக்கு அந்த நாட்டின் அரசாங்கமே என்னை அழைத்து நாடகம் நடத்துகிறது. ஐரோப்பா நாட்டிற்கு நாடகம் நடத்தச் சென்றபோது அங்கே எல்லாம் ஒரு கலை வளர்கிறது என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அரசும் அதற்கு உதவி செய்கிறது. அரசின் உதவி நம் நாட்டில் இல்லை. அதனால் சில குழுக்களே முன்னின்று நாடகத்தை வளர்த்து வருகின்றனர். 

நாசர் சாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். நடிகர் சங்கத்துக்கு சென்னையில் கட்டடம் கட்டும் முயற்சியில் இருக்கிறார்கள். அது மாதிரியே மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கெல்லாம் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான இடங்கள் இருக்கிறதோ அங்கே எல்லாம் நாடகம் நடத்துவதற்கான கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பட்ஜெட் குறைவாகத்தான் வரும். கலை அரங்கத்தில் நடக்கும் நாடகங்கள் மூலமாக நடிகர் சங்கத்துக்கு நிதியும் கிடைக்கும். கலாசார நகரம் மதுரைனு சொல்றோம். ஆனால், இங்கு நாடகம் நடத்துவதற்குத் தனியார் அரங்கம்தான் இருக்கிறது. அதற்கு வாடகை அதிக அளவில் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. 

இதற்கு நடிகர் சங்கம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால், சங்கத்தில் நாடக உறுப்பினர்கள் மட்டுமே 3,000-க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மூன்று, நான்கு வடிவங்களில் நாடகங்களைப் பண்ணிட்டு இருக்காங்க. திருச்சியில் சமூக நாடகக் குழுக்களும், ராமநாதபுரம் இசை நாடகக் குழு காரைக்குடியிலிருந்து ஆரம்பித்து தேனி வரைக்கும் இருக்கிறார்கள். எல்லா நாடகக் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதுபற்றி நாசர் சாரிடம் மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். 'சண்டக்கோழி-2' விஷாலுடன் நடித்து கொண்டிருக்கிறேன். அவருடனும் விரைவில் பேச வேண்டும்'' என்றவரிடம் முதல் பட வாய்ப்பு கமலுடன் எப்படி அமைந்தது என்று கேட்டோம்.

சண்முகம்ராஜன்

''தேசிய நாடகப் பள்ளியில் படித்துவிட்டு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நாசர் பழக்கம். அவர்தான் என்னை 'விருமாண்டி' பேய்க்காமன் கேரக்டருக்கு கமலிடம் சொன்னார். அந்த ரோல் நாசர் செய்ய வேண்டியது. அப்போது அவரால் கால்ஷீட் பிரச்னை காரணமாக பண்ண முடியவில்லை. அதனால், கமலிடம் என்னைப் பற்றி சொல்லியிருந்தார். அப்போது கமல் என்னை வந்து பார்க்கச் சொன்னார். கமலைப் பார்த்து பேசினேன். உடனே, கதையில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டேன். 'விருமாண்டி' படத்தைத் தொடர்ந்து 85 படங்களுக்கு மேல் பண்ணி விட்டேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

கமல் எப்போதும் எனக்கு குருதான். 'விருமாண்டி' படம் பண்ணி 10 வருடங்களுக்குப் பிறகுதான் ' உத்தமவில்லன்' அவருடன் பண்ணினேன். ஆனால், என் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவர் என்னை மட்டுமின்றி எல்லோரையும் உயர்த்திவிட்டு சந்தோஷப்படுவார். அது வெளியிலிருந்து பார்க்கும் நிறைய பேருக்குத் தெரியாது. அந்தப் அடிப்படையில், கமல் எனக்கு பார்த்துப் பார்த்து பண்ணிய படம்தான் 'விருமாண்டி'. கமல் சாரிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பேன். நாடகத்துறையைப் பற்றியும் பேசுவேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு'' என்று சொல்லி முடித்தார் நடிகர் சண்முகராஜன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்