Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிங்கம் போலீஸ்... தீரன் போலீஸ்... என்ன வித்தியாசம்..? - கலை இயக்குநர் கதிர்

‘சதுரங்க வேட்டை’ படத்துக்கு பிறகு இயக்குநர் வினோத் எடுத்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி காக்கி சட்டை போட்டிருக்கும் இந்தப் படத்தில் அவருடன் ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், மனோ பாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

கலை இயக்குநர் கதிர்

உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தில் வரும் காட்சிகளின் உண்மைச் சம்பவத்துக்காக பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் படத்தின் கலை இயக்குநர் கதிர். படம் பற்றிய தகவல்களுக்காக கதிருடன் பேசினோம். 

“போலீஸ் கேரக்டர் கொண்ட நிறையப் படங்களில் வேலை செய்திருக்கிறேன். ஆனால், 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மற்ற போலீஸ் படங்களை விட வித்தியாசமாக இருந்தது. பத்து வருடத்திற்கு முன்னோக்கி சென்று அதற்கு ஏற்ற மாதிரிதான் படத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்தோம். புதிய அனுபவமாகதான் இந்தப் படம் இருந்தது. வழக்கமான போலீஸ் படமென்றால் பொதுவான ஒரு செட்அப் இருக்கும். போலீஸ் ஸ்டேஷன் ஒரு ஊரில் இருக்கிற மாதிரி. இந்தக்  கதை பார்த்தால் ரொம்ப விரிவான கதை. ஒரு குற்றப்பத்திரிகை, கை ரேகை, கைதிகளின் ரிப்போர்ட் இவை எல்லாம் பதிவு வாரியாக  எப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு விஷயத்தை ரொம்ப நுணுக்கமாக இயக்குநர் வினோத் சொன்னார். சொன்னது மட்டும் இல்லாமல் எப்படி இருக்க வேண்டுமென்று சில உதாரணங்களும் எனக்கு கொடுத்திருந்தார். அதையெல்லாம் பார்த்தப்பிறகு ஒளிப்பதிவாளர் சத்யனுடன் சேர்ந்து படத்தின் முழு கதையும் படித்தோம். அதற்கு அப்புறம் களத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தோம். 

கலை இயக்குநர் கதிர்

இந்தப் படத்துக்காக நிறைய இடங்களுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தோம். அப்போதிருக்கும் வீடுகளை பார்த்து வைத்து கொண்டோம். தொட்டு கூட எங்களால் பார்க்க முடியவில்லை. படத்தின் கதைக்கு ஏற்றவாறு நிறைய செட் போட்டோம். படத்தில் லாரி ஒரு முக்கிய காட்சியாக வரும். அந்த லாரி எப்படி இருக்க வேண்டுமென்று டைரக்‌டர் என்னிடம் சொன்னார். அதற்காக ஒரு லாரி வாங்கி அதை கொஞ்சம் வித்தியாச படுத்தினோம். வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய லாரியைதான் வாங்கினோம். அந்த லாரிகளில் இரண்டு பேருக்கு மேல் இருக்க  சட்டப்படி அனுமதியில்லை. ஆனால், நாலு ஐந்து பேர் லாரிக்குள் பதுங்கி இருப்பது போல் காட்சிகள் இருக்கும். அதற்காக தனியான கதவு வைத்து கதைக்காக சில விஷயங்களை  லாரியில் மாற்றி எடுத்தோம். 

படத்தில் நோக்கியா போனில்தான் எல்லோரும் பேசுவார்கள். அந்த போனை தேடி கண்டிப்பிடிப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது. மூர் மார்க்கெட் எல்லாம் போய் ரொம்ப தேடிதான் அந்த போனை கண்டுபிடித்தோம். அதுவும் தனி தனி பீஸ்காக தான் கிடைத்தது அதை எல்லாம் நாங்கள்தான் ஒன்றாக சேர்த்தோம். இந்தப் படத்தில் ரொம்ப சவாலான ஃபைட் சீன் ஒன்று இருக்கிறது. அதில் கார்த்தி ஒரு ஊருக்குள்ளே வில்லனை அழைத்து வரும் போது ஊரே கார்த்தியுடன் சண்டை போடும். 

கலை இயக்குநர் கதிர்

இந்த காட்சிக்காக ஒரு ஊரையே உருவாக்கினோம். ராஜஸ்தானில் இருக்கும் மற்ற வீடுகள் எப்படி இருக்குமோ அதே போல் வீடுகளை உருவாக்கினோம். அந்த ஊர்களின் குடிசைகள் எல்லாம் வேறுமாதிரியாக இருந்தது. கல்லில் கட்டிருந்தார்கள் சிலர். இன்னும் சிலர் மண்ணில் கட்டியிருந்தார்கள்.  அந்த ஊரில்  கடுகு செடி ஒன்று இருக்கும். அதையெல்லாம் தேடி கொண்டு வந்து நட்டு வைத்தோம். அதே மாதிரி பஸ்ஸில் ஒரு ஃபைட் சீன் வரும். அதற்காக இரண்டு பஸ் வாங்கி, பஸ்ஸின் மேற்கூரையெல்லாம் பிரித்துவிட்டோம்.  அதற்கு அப்புறம் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் பஸ்ஸில் சில விஷயங்களை என்னிடம் செய்ய சொன்னார். அதற்கு ஏற்ற மாதிரி டைரக்டர் கிட்ட பேசிவிட்டு படங்களை வரைந்து காட்டி கேமரா மேனை பக்கத்தில் வைத்து கொண்டு கார்த்தி ஜம்ப் செய்வதற்கு தேவையான எல்லாம் வசதிகளையும் செய்தோம். பஸ்ஸையை முழுவதும் மாற்றியமைத்தோம். அந்த சீனில் டூப் போடமால்தான் கார்த்தி நடித்தார். அதனால் முன்னேற்பாடு வசதிகளுடன் அந்த காட்சிக்காக பக்கவாக அமைத்து கொடுத்தேன். 

ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் ஓவிய கலை மீது விருப்பம் இருக்கின்ற பெண்ணாக நடித்திருந்தார். அவர் கைவினைப் பொருட்கள் எல்லாம் பண்ணுவார். அதனால் பெண்கள் அழகுக்காக என்ன விஷயங்களை வீட்டில் பண்ணுவார்களோ அதை எல்லாம் பண்ணி வைத்தேன்'' என்றவர், சூர்யா மற்றும் கார்த்தி உடன் வேலைப் பார்த்த அனுபவம் சொல்கிறார். 

''இரண்டு பேரும் சிறந்த நடிகர்கள். அவர்கள் இரண்டும் பேரிடமும் வலுவான கேரக்டர் எது கொடுத்தாலும் அதை சூப்பராக செய்வார்கள். டேக்கிற்கு முன்னால் வரைக்கும் நம்முடன் ரொம்ப ஜாலியாக சகஜமாக பேசி கொண்டே இருப்பார்கள். உதவி இயக்குநர் ரெடி சார் டேக் போகலாம்னு கூப்பிட்டால் அண்ணன் சூர்யாவும் சரி, தம்பி கார்த்தியும் சரி கேமரா முன்னால் போய் நின்றால் கேரக்டராக மாறிவிடுவார்கள். சண்டை காட்சிகள் எல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரும் பின்னி எடுத்துவிடுவார்கள். அதிலும் இந்தப் படத்தில் கார்த்தி டூப் இல்லாமல் நிறைய காட்சிகளை ரிஸ்க் எடுத்து பண்ணினார். தீரன் படத்தில் வரும் போலீஸ், ரொம்ப ரியலா இருப்பார். உண்மையான போலீஸுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்குமோ அதையெல்லாம் அப்படியே காட்டியிருப்போம். தன்னுடைய மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமலேயே நிறைய விஷயங்களை செய்வார். சிங்கம் போலிஸும் ரியலிஸ்டிக்காத்தான் இருக்கும். ஆனால், அரசாங்கத்தின் உதவியோடு எல்லா விஷயங்களையும் செய்வார். இரண்டு படத்திலும் கதாபாத்திரங்களின் பெயர்தான் வேற, வேற. ஆனால், அவங்களோட உழைப்பு ஒண்ணுதான்'' என்றவரிடம் மறைந்த ஒளிப்பதிவாளர் ப்ரியன் பற்றி கேட்டோம்.

ஒளிப்பதிவாளர் ப்ரியன்

''என் வாழ்க்கையில் இப்படியொரு மரணத்தை பார்த்தது இல்லை. எனக்கு இந்த மரணம் போல் வேறு எந்தவொரு மரணமும் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நான் ஒரு சென்னை வாசி. எனக்கு ஒரு மரண செய்தியோ இல்லை திருமணம் செய்தியோ புதியது கிடையாது. வாரத்துக்கு மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சினு நடத்தி கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், இந்த மரணம் என்பது அகாலமரணம் என்றெல்லாம் கேள்வி பட்டு இருப்போம் இல்லையா அதை எல்லாம் தாண்டிய ஒரு மரண செய்தி. என் குடும்பமும் ப்ரியன் குடும்பமும் ஒன்றாக பழகியவர்கள். அண்ணன் தம்பி போல் வாழ்ந்தவர்கள். 

ப்ரியன் நான்கு மணிக்கு இறக்கிறார். ஒருமணி வரைக்கும் எங்கள் குடும்பமும் அவருடைய குடும்பமும் பேசி கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ப்ரியன் புது வீடு கட்டுவதற்காக வாசல் கதவுக்கு நிலை வைக்க எங்களை கூப்பிட்டு இருந்தார். அவருடைய வீட்டில் சொந்தகாரர்கள் எல்லோரும் இருந்தார்கள். எல்லோரும் சிரித்து பேசி கொண்டுதான் இருந்தார்கள். அந்தநேரத்தில் தான் நான் கிளம்பினேன். நான்கு மணிக்கு போன் வருது ப்ரியன் இறந்துவிட்டார் என்று.

14 வருடமாக ப்ரியனை எனக்கு தெரியும். இதுவரைக்கு உடம்பு சரியில்லை, காய்சல் என்றெல்லாம் அவர் சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை. பதினொரு படம் ப்ரியனுடன் செய்திருக்கிறேன். எந்த இடத்திலும் அவரைச் சோர்வாககூட பார்த்ததில்லை. உடல்நிலைத்தின் மீது ரொம்ப கவனமாக இருக்ககூடிய ஆள்தான் ப்ரியன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் அவரிடம் இல்லை. சாப்பாடு கூட தேவையில்லாமல் சாப்பிட மாட்டார். அவருடன் இருந்துவிட்டு கிளம்பிய மூன்று மணிநேரம் இடைவெளியில் அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் காதில் வாங்கவே முடியவில்லை. அதன்பிறகு என் மனது ரொம்பவே தவித்தது. ரொம்ப பதறி போய் பார்த்தேன். அதன்பிறகு எல்லாம் முடியுறவரைக்கும் நானும் ஹரியும் ஒன்றாகதான் இருந்தோம். இதுவரைக்கும் ப்ரியன் மரணத்தில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. என் முதல் திரைப்படம் 'சாமி', அந்தப் படத்திலிருந்து என்னுடன் ஒன்றாகாவே வந்தவர் ப்ரியன் எப்படி அவரை மறக்க முடியும்’’ என்று கண் கலங்கியப்படி முடித்தார் கலை இயக்குநர் கதிர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்