‘கொடிவீரன்’ ரைட்ஸ் கொடு... இல்லேன்னா!’ - அசோக்கை மிரட்டிய அன்பு

கந்துவட்டிக் கொடுமையில் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி வந்துள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்து 30ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கொடிவீரன்’ படத்தின் மதுரை ஏரியாவின் விநியோக உரிமையைத் தனக்கு விட்டுத்தரவேண்டும் என்று அன்பு அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அசோக்குமாரை நன்கு அறிந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், “நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான சசிகுமார், தன்  கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில்  ‘சுப்ரமணியபுரம்’, ‘போராளி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘தாரை தப்பட்டை’, ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘கொடீவீரன்’ உள்பட மொத்தம் 10 படங்களை இதுவரை தயாரித்துள்ளார். ‘கொடிவீரன்’ படத்தை வரும் 30ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தார். 

அசோக்குமார்

இந்தப் படங்களின் தயாரிப்புப் பணிகளை சசிக்குமாரின் அத்தை மகனான பி-அசோக்குமார்தான் கவனித்து வந்தார். ஒருகட்டத்தில் சசிகுமார் நடிகராக வரவேற்பைப் பெற்றதும் தயாரிப்புப் பணிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட அசோக்குமார் கவனிக்கத் தொடங்கினார். இவர் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே  படத் தயாரிப்புக்காக மதுரையைச் சேர்ந்த பிரபல சினிமா ஃபைனான்ஸியர் அன்பு என்கிற அன்புச்செழியனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி வந்தார். 

கடனுக்கான வட்டியை மாதாமாதம் முறையாகக் கட்டியும் வந்து இருக்கின்றனர். அந்தச் சமயத்தில் இதற்கு முன் சசிகுமார் தயாரித்த ‘தாரை தப்பட்டை’, ‘பலே வெள்ளையத்தேவா’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறாததால் வட்டி, அசலை திருப்பித் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் கொஞ்சம் தாமதம் இருந்தாலும் வட்டி சென்றுகொண்டுதான் இருந்தது. அன்புவுக்கு இவர்கள் செலுத்தவேண்டிய மொத்த கடன் 32 கோடி ரூபாய் என்கிறார்கள். ஆனால், சரியான தொகை எவ்வளவு என்று தெரியவில்லை. 

இந்தச் சமயத்தில்தான் ‘கொடிவீரன்’ படத்தை முடித்த சசிக்குமார், படம் நவம்பர் 30ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கிறார். அதற்கு முன் இரு தரப்புக்கும் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் இந்தப் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் அது வேகமெடுக்கத் தொடங்குகிறது. ‘வாங்கிய கடனின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில் படத்தின் மதுரை விநியோக உரிமையை எனக்கு விட்டுக்கொடுங்கள்’ என்று அசோக்குமாரிடம் அன்புச்செழியன் நெருக்கடி கொடுத்திருக்கிறார். 

அசோக்குமார்

ஆனால் மதுரை ஏரியாவை சசிகுமார் அவரே ரிலீஸ் பண்ணுவதுதான் வழக்கம். இல்லையென்றால் தன் படங்களை ரெகுலராக வாங்கும் விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பார். இது ‘ராம்’, ‘பருத்திவீரன்’ படங்களில் தொடங்கி இன்றைய அவரின் படங்கள் வரை தொடர்கிறது. ஆனால் ‘மதுரை ரைட்ஸ் எனக்கே’ என்று அன்புச்செழியன் விடாப்பிடியாக நிற்க, ‘‘உங்களிடம் வாங்கிய கடனுக்கு வட்டி ஒழுங்காகக் கட்டி வருகிறோம். போகப்போக அசலையும் அடைக்கப்போகிறோம். அதனால் படத்துக்கு இடையூறு செய்யாதீர்கள்’ என்று அசோக்குமார் தரப்பில் சொல்லியுள்ளனர். 

ஒருகட்டத்தில் அன்பு தரப்பிலிருந்து அசோக்குமாரை மிரட்ட ஆரம்பித்தனர். நேற்று முன்தினம் 20ம் தேதி போன் செய்து, ‘இன்றைக்குள் ஒன்பது கோடி ரூபாய் தரவில்லை என்றால் கொடிவீரன் படத்தை ரிலீஸ் பண்ணவிடமாட்டேன்’ என்று மிரட்டிய அன்பு, மதுரை ஏரியாவில் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தியேட்டர்களுக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறார். 

அவர் பிரபல ஃபைனான்ஸியர் என்பதால் பல மாவட்டங்களில் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிலர் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மதுரை அவரின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகம். அந்தத் தடைக்கு மதுரை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சிலர் அவருக்கு உடந்தையாகவும் இருந்தனர்.

‘படத்துக்குத் தடை’ என்ற செய்தி வெளியில் வந்தால் அது படத்துக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்திவிடுமே என்று அசோக்குமார் பயந்து இருக்கிறார். சசிக்குமார் நடிப்பு, ஸ்கிரிப்ட் என்று பரபரப்பாக இருப்பதால் தயாரிப்பில் ஏற்படும் பல பிரச்னைகளில் சிலவற்றை மட்டுமே சசிகுமாரின் கவனத்துக்கு அசோக்குமார் கொண்டு செல்வார். பெரும்பாலும் பிரச்னைகளை அவரேதான் நேரடியாக டீல் செய்வார்.

ஒருகட்டத்தில் சசிகுமாரையும் அன்பு தரப்பு மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. அப்போதுதான், ‘மாப்பிள்ளையை கடனாளி ஆக்கிட்டோமே’ என்று கடும் மன உளைச்சலில் பலரிடம் சொல்லிப் புலம்பினார். மன உளைச்சல் அதிகமாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த இடத்தில் வட்டிக்குப் பணம் வாங்கியவர்களை அன்பு தரப்பு நடத்தும் விதத்தை சொல்லியே ஆகவேண்டும். கடன்பெற்றவர்களின் தன்மானத்தை சீண்டும் வகையில் நடந்துகொள்வார். வட்டி வரவில்லை என்றால் ஒன்றாம் தேதியிலிருந்து மூன்றாம் தேதிவரை தொடர்ச்சியாக போன் செய்துகொண்டே இருப்பாராம். ‘வந்துடணும் சார், இல்லையினா தப்பாயிடும்’ என்று தொடங்கும் பேச்சு போகப்போகக் கடுமையாகுமாம். 

அசோக்குமார்

இறுதியில், ‘பணம் வரலைனா, வீட்ல உள்ளவங்களைத் தூக்கிடுவோம்’ என்பார்களாம். அப்படி ஏற்கெனவே தூக்கிய முன் உதாரணங்களையும் பட்டியலிடுவார்களாம். இதற்கு முன் இவரால் தற்கொலை செய்துகொண்ட ஜி.வெங்கடேஸ்வரனையும் இப்படித்தான் மிரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் தன் மனைவிக்கு முன்னாலேயே வேட்டியை உருவிவிட்டதால் அந்த இயலாமையில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறுவார்கள். 

அதுபோன்ற ஒரு நிலை தனக்கு வந்துவிடுமோ என்று அஞ்சிய அசோக்குமாரிடம், ‘உன் மனைவியைத் தூக்கிடுவேன்’ என்று மிரட்டவும்தான் அவர் பயந்துபோய் தற்கொலை செய்திருக்க வேண்டும்” என்று வருந்திய தயாரிப்பாளர், “அசோக்குமார், கந்துவட்டி கொடுமைக்குப் பலியாகும் கடைசி உயிராக இருக்கவேண்டும். முதலில் சினிமாக்காரர்கள் தங்களுடைய ஈகோவை கைவிட்டு ஒன்றுகூட வேண்டும். இந்த ஒன்றுகூடல் இப்போதுகூட நடக்கவில்லை என்றால் இனி எப்போதும் நடக்காது என்பதே நிஜம். இதை தயாரிப்பாளர்கள் உணர வேண்டும்” என்கிறார். 

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

 

அசோக்குமாரின் தற்கொலை குறித்து மதுரை அன்புச்செல்வத்தின் தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஃபிலிம்ஸின் மேலாளர் முரளி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்தப் பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் அவர்கள்தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களைக் கடிதத்தில் எழுதிவைத்துள்ளார் என்பது அதிர்ச்சி, ஆச்சர்யம் அளிக்கிறது.

நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கள் மேல் எந்தப் புகாரும் கிடையாது. அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை” என்று குளிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!