‘நீயெல்லாம் சினிமா எடுக்கலைனு எவன் அழுதான்?’ - மதுரை அன்புவின் ஃபைனான்ஸ் பாலிஸி #VikatanExclusive

ஃபைனான்ஸியர் மதுரை அன்புச்செழியன் என்பவர் யார். அவரிடம் மட்டும் ஏது இவ்வளவு பணம். அவர் யார்யாருக்கெல்லாம் பணம் கொடுப்பார். யாருக்கெல்லாம் கொடுக்கவே மாட்டார். அவரின் கொடுக்கல் வாங்கல் நடைமுறை என்ன. அவரிடம் பணம் வாங்கி திருப்பிச் செலுத்தமுடியாமல் சிரமப்படும் சினிமா பிரபலங்களை அவர் எப்படி நடத்துவார்.... ஃபைனான்ஸியர் மதுரை அன்புச்செழியன் பற்றி இப்படிப் பல கேள்விகளைக் கிளறிவிட்டுள்ளது அசோக்குமாரின் தற்கொலை. இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிய அன்புவிடம் ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த ஒரு தயாரிப்பாளரிடம் பேசினோம்.

அன்புசெழியன் - அசோக்குமார்

அன்புவிடம் ஏது இவ்வளவு பணம்?

“தயாரிப்பில் உள்ள தமிழ் சினிமாக்களில் 50 சதவிகித படங்களுக்குமேல் அன்புதான் ஃபைனான்ஸ் செய்கிறார் என்பது சினிமா உலகில் பலரும் அறிந்ததே. அவ்வளவு பேருக்கும் பணம் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் ஏது இவ்வளவு பணம். அவரிடம் உள்ள பணம் அனைத்தும் அவருடையது இல்லை என்பதே உண்மை. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தும் ஒரு மனிதர்தான் அன்பு. அவர்களிடம் ஒன்றரை வட்டிக்கு வாங்கி சினிமாக்காரர்களுக்கு அந்தப் பணத்தை வட்டிக்குத் தந்து வெள்ளையாக்குவதுதான் அன்புவின் அடிப்படை தொழில் உத்தி. 

எந்த பேதமுமின்றி பல கட்சிப் பிரமுகர்கள் அவரிடம் பணம் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கல், வழக்குளைச் சமாளிப்பதற்காக எது ஆளுங்கட்சியோ அதில் இருப்பது அவரின் பாலிஸி. அப்படிக் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் திமுகவில் இருந்தார். பிறகு ஜெயலலிதா முதல்வரானதும் அதிமுகவில் சேர்ந்துகொண்டார். இப்படி இரண்டு முக்கிய திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமும் நல்ல நட்பு இவருக்கு உண்டு. இந்த இரு கட்சிப் பிரமுகர்களின் பணம்தான் இவரிடம் புழங்கி வருகிறது என்கிறார்கள். இதனால் இவர்மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பது இல்லை. மேலும், பிரச்னை ஏற்படும்போதுதான், தான் சார்ந்த சாதியையும் துணைக்கு அழைத்துக்கொள்வது அன்புவின் வாடிக்கை” என்கிற அவர் அன்புவின் ஃபைனான்ஸ் பாலிசி பற்றி சொல்கிறார். 

அன்புவின் ஃபைனான்ஸ் பாலிஸி!

வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுக்கும் சக்தி யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எத்தனை கோடி கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார். ஆனால், திருப்பிக்கொடுக்கும் திறன் இல்லை என்று தெரிந்தால் ஒத்தை ரூபாய்க்கூட இவரிடம் இருந்து நகராது. பெரும்பாலும் மூணு வட்டிக்குக் கடன் கொடுப்பார். உதாரணமாக 5 கோடி ரூபாய் வாங்கினால் ஒரு கோடிக்கு மூணு லட்சம் வட்டி என்று கணக்கிட்டு ஐந்து கோடிக்கு 15 லட்சம் வட்டியைப் பிடித்துக்கொண்டு  மீதி 4 கோடியே 85 லட்ச ரூபாயை கொடுப்பார். இது நேரடிப் பழக்கத்தில் அணுகும் தயாரிப்பாளருக்கு. ஆனால் மீடியேட்டர்கள் மூலம் வந்தால் அந்த முதல் மாத வட்டி அந்த மீடியேட்டர்களுக்கு கமிஷனாகப் போய்விடுமாம். இதுதவிர பத்திரச் செலவு தனி.

மேலும், ‘இவ்வளவு பணம் கொடுத்துள்ளேன். அதற்கு இவ்வளவு வட்டி. மாதம் முதல் மூன்று தேதிகளுக்குள் வட்டி வந்துவிடவேண்டும்’ என்ற ரீதியில் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எழுதப்பட்ட பாண்ட் பேப்பரில் கடன் பெறுபவரிடம் எழுதி கையெழுத்து வாங்கிக்கொள்வார். தவிர தயாரிப்பு கம்பெனியின் வெற்று லெட்டர் பேட், வெற்று பாண்ட் பத்திரங்களில் கடன் பெறுபவர் கையெழுத்து இட்டு தரவேண்டும். சாட்சிகளும் கையெழுத்திடவேண்டும். அப்போது, ..‘நாம என்னங்க பண்ணப்போறோம். சரியா கொடுத்தீட்டிங்கன்னா ஒண்ணும் பிரச்னை இல்லை...’ என்று சிரித்தபடிதான் அவற்றை வாங்கிக்கொள்வார்.

அந்த பாண்ட் பேப்பர்களைக் கொண்டுபோய் மிளகாய்க்குக் கீழே வைத்துவிடுவது அன்புவின் சென்டிமென்ட் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். வழக்கமாக சாபம் கொடுக்க, திருஷ்டி கழிக்க கிராமங்களில் உப்பு, மிளகாயைப் பயன்படுத்துவார்கள். மிளகாய்க்குகீழே கதகதப்புடன் இருக்கும் பாண்ட் பேப்பர் எப்போதும் முடிக்கப்பெறாமல், திரும்ப வாங்கப்படாமல் உயிரோடு இருக்கும் என்பது அன்புவின் சென்டிமென்ட். 

அன்புசெழியன்

கடனை வசூலிக்கும் முறை!

வட்டி கட்ட முடியாதவர்கள் அதற்காக இவரிடம் மீண்டும் கடன் பெறுவார்கள். மாதத்தின் முதல் தேதியில் அன்புவிடமிருந்து அழைப்புகள் வரத்தொடங்கிவிடும். ஓரிரு நாள்கள் சாஃப்ட்டாக தொடரும் இந்த உரையாடல் போகப்போக உக்கிரமாகும். இப்போதைக்கு வட்டி வராது, கொடுப்பதற்கு எதிர்தரப்பினரிடம் எதுவும் இல்லை என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் அன்புவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் ஆகிவிடும். அவருக்கு எப்போது போர் அடித்தாலும் போன் பண்ண ஆரம்பித்துவிடுவார்.  ‘உன்னையெல்லாம் படம் பண்ண வரலைனு யார் அழுதது. நீயெல்லாம் என்ன ....போற’ என்று கடன் பெற்றவரின் இயலாமையைப் பயன்படுத்தி நக்கலும் நய்யாண்டியுமாக நாறடிப்பார். இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர், தயாரிப்பாளர்கள் அந்தஸ்தில் உள்ள பலரும் இப்படி அன்புவின் டார்ச்சரை அனுபவித்து இருக்கிறார்கள். 

இப்படி ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஒருவரின் படம் இவரின் கடனில் சிக்கியது. படத்தை ரிலீஸ் பண்ண முடியாத சூழல். அந்தக் கடனுக்காக நடிகரும் இயக்குநரும் தங்களின் சம்பளங்களிலிருந்து பெரும் தொகையை விட்டுக்கொடுத்தனர். அந்தப் படத்தின் பல ஏரியா உரிமைகளையும் அன்புவே பெற்றார். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக வந்த அந்தப் படத்தின் இயக்குநரை, ‘நீயெல்லாம் உள்ள வந்து ...போற... போடா’ என்று ஒருமையில் பேசி விரட்டியிருக்கிறார். அதனால் அந்த இயக்குநர் அழுதுகொண்டே வெளியேறினார். இப்படி, ‘நீயெல்லாம் ஒரு ஆளே கிடையாது. இங்க எல்லாமே நான்தான்’ என்ற ஒரு சூழலை கிரியேட் செய்து அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார். இவரால் தன்மானம், அதிக மரியாதையை எதிர்பார்க்கும் பல கிரியேட்டர்கள் மனம் நொந்துபோய் கிடக்கிறார்கள். 

ரைட்ஸ் எழுதி வாங்குவது!

ஆரம்பத்தில் கடன் பெறும்போது, ‘படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு செட்டில் செய்து விடுவேன்’ என்று எழுதிக்கொடுத்து இருப்பார்கள் கடன் பெற்றவர்கள். ஆனால், பட்ஜெட்டை மீறிய செலவு, ரிலீஸுக்குச் சரியான தேதி கிடைக்காதது போன்ற சிக்கலால் கடனை கட்ட முடியாத சூழல் ஏற்படும். அதை அன்பு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார். ஏற்கெனவே  கொடுத்த வெற்றுக் காகிதங்களில் வெவ்வேறு ஏரியாக்களில் திரையிடும் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ்... என்று கடனுக்கு ஈடான உரிமைகளை எழுதிக்கொள்வார். 

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

 

 

 

அப்படி ஏரியா ரைட்ஸை எடுத்துக்கொள்பவர், ‘மினிமம் கியாரன்டி’ எனப்படும் எம்ஜி போடுவது கிடையாது. டிஸ்ட்ரிப்யூஷன் முறையில் திரையிடுவார். உதாரணத்துக்கு ஒரு படத்தின் மதுரை விநியோக உரிமை 1 கோடிக்குப் போகிறது என்றால் இவர் அதை குறைத்து, ‘60 லட்சம்தான் போகும், அவ்வளவுதான் ஒர்த்’ என்று கட்டாயப்படுத்தி குறைத்து வாங்குவார். இப்படி டிஸ்ட்ரிபூஷனுக்கு 15 சதவிகிதம் கமிஷன். அந்தப்படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அந்த 15 சதவிகிதத்தை பிடித்துக்கொண்டுதான் மீதி கொடுப்பார். அதிலும் சாப்பாட்டுச் செலவு, அந்தச்செலவு, இந்தச்செலவு என்று பல லட்சம் கணக்குக் காட்டுவார். 

அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் படத்தை திரையிட முடியாத வகையில் ரெட் போடுவார். அப்படித்தான் ‘கொடிவீரன்’ படத்துக்கும் அவர் ரெட் போட்டிருக்கிறார். இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்று தெரிந்தும் ஏன் அவரிடம் கடன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ரிலீஸுக்குள் கடனை அடைத்துவிடலாம் என்ற சினிமா மீதான நம்பிக்கைதான், வேறென்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!