‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..!’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற வித்தியாசமான கதைகளை எடுத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜூ முருகன், தற்போது அடுத்த படத்துக்கான கதையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தனது அண்ணன் சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்குக் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

ராஜூ முருகன்

ராஜூ முருகனின் அண்ணன் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்துக்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. படம் பற்றிய அப்டேட்ஸூக்காக இயக்குநர் சரவணனிடம் பேசினோம். 

''தஞ்சைதான் என் சொந்த ஊர். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது கவிதைகள் எழுதுவேன். அப்போது சினிமா சார்ந்த ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்று தோன்றியது. அதனால் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது வைரமுத்து சாரை நேரில் போய்ப் பார்ப்பேன். அப்போதுதான் சினிமாவில் இருக்கும் சிலரின் நட்புகள் கிடைத்தன. அந்த நேரத்தில்தான் சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இலக்கியத்தில் இருக்கும் விஷயங்களை அப்படியே சினிமாவாக ஆக்க முடியாது என்றொரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். 

அப்போது ராஜூமுருகன் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தார். அவர் சில கவிதைகள் எழுதி எனக்கு அனுப்புவார். அதையெல்லாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பேன். அதன்பிறகு ராஜூமுருகனை சென்னைக்கு அழைத்து வந்தேன். சென்னையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். அப்புறம் அவரும் இயக்குநராக வேண்டுமென்று முயற்சி பண்ணி 'குக்கூ' படத்தை டைரக்‌ஷன் பண்ணினார். எனக்கு இயக்குநராக சில வருடங்கள் எடுத்துவிட்டன. 

ராஜூ முருகன் & டீம்

சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் முதலில் பாலு மகேந்திரா, கமல் போன்றவர்களுடன் உதவி இயக்குநராய் வேலை பார்த்தேன். அதன்பிறகு கன்னட சினிமாவிலும், ராஜூமுருகன் எடுத்த 'ஜோக்கர்' படத்திலும் இணை இயக்குநராய் வேலை பார்த்துவிட்டு, தற்போது என்னுடைய திரைக்கதை மற்றும் இயக்கத்தில் புதிய படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டேன். 

காதல்தான் இந்தப் படத்தின் கரு. ஆனால், 90களில் நடப்பது போலான ஒரு விஷயம். அதையும், சமீபத்தில் நடக்கும் ஒரு விஷயத்தையும் இந்தப் படத்தின் கதை தொடர்பு படுத்தும். படத்தின் ஹீரோ புதுமுகம் ரங்கா. ஹீரோயின் இந்திப் படங்களில் நடித்த ஸ்வேதா திரிபாதி. படத்துக்கு வட இந்தியாவைச் சேர்ந்த லுக்கில் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதனால்தான் ஸ்வேதா திரிபாதியை செலக்ட் செய்தேன். ஸ்லம்டாக் மில்லினியரில் நடித்த அன்பூர் மற்றும் ஸ்மைல் சேட்டை ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

சரவணன்

'மாநகரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த செல்வகுமார் இந்தப் படத்தில் இருக்கார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாடலாசிரியர் யுகபாரதி எழுதுகிறார். எனக்கும் யுகபாரதிக்கும் பல வருட கால நட்பு. தஞ்சைதான் யுகபாரதிக்கும் சொந்த ஊர். நான் காலேஜ் படிக்கும் போது அவர் பாலிடெக்னிக் படித்தார். அப்போது தஞ்சையில் சோழன் சிலை பூங்கா என்றொரு இடத்தில் கவிதை இரவு என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதில் இருவரும் பங்கேற்போம். எங்கள் இருவரின் சிந்தனையும் ஒருமித்திருந்ததால் சென்னைக்குப் போக வேண்டுமென்று இருவரும் பேசியே ஒன்றாகச் சென்னைக்குக் கிளம்பி வந்தோம். அவர் பாடலாசிரியர் ஆகிவிட்டார். நான் இயக்குநருக்கு முயற்சி பண்ணினேன். 

பல வருடங்களுக்குப் பிறகுதான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். இடையில் எத்தனையோ படங்கள் ஓகே ஆகி ஷூட்டிங் வரைக்கும் போகும். ஆனால், இடையிலேயே நின்றுவிடும். இதுமாதிரி ஒரு ஆறு முறை நடந்திருக்கிறது. பாலுமகேந்திரா சாருடனும் படங்களில் வேலை பார்த்ததை விட கதை நேரங்களில் அவருடன் முழுவதுமாக இருந்து வேலை பார்த்ததுதான் அதிகம். 'விருமாண்டி' படத்தின் போதுதான் கமலுடன் வேலை பார்த்தேன். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையின் போது வெளியேறிவிட்டேன். என் படம் எடுத்து முடித்து கமலுக்குப் போட்டு காட்ட வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் சரவணன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!