வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (27/11/2017)

கடைசி தொடர்பு:21:46 (27/11/2017)

‘’ ‘புலி’ படத்தின் புரோமோஷனில் தவறு நடந்திருச்சு..!’’ - நட்டி

'சதுரங்க வேட்டை' படத்தைப் பார்த்தவர்களால் 'காந்தி பாபுவை' மறக்க முடியாது. காந்தி பாபு கேரக்டரில் நடித்து எல்லோரது மனதிலும் நச்சென்று பதிந்தவர் நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம். நிவின் பாலியின் 'ரிச்சி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டியிடம் பேசினோம். 

நட்டி

''நான் பிறந்தது பரமக்குடி, வளர்ந்தது காரைக்குடி. மூணாவது படிக்கும் போது படிப்புக்காகவே அப்பா சென்னை கூப்பிட்டு வந்துவிட்டார். அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் சென்னைவாசிதான். நடிகனாய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே ஒளிப்பதிவாளராய்தான் என்னுடைய கெரியரை தொடங்கினேன்’’ என்று தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் நட்டி. 

''சின்ன வயதில் எனக்குப் பிடித்த இரண்டு விஷயம் சினிமா, கிரிக்கெட். பிறகு என் கெரியரை சினிமாவாக அமைத்துக் கொண்டேன். பத்தாவது படிக்கும் போது என் கூட படித்த ஃப்ரெண்ட் ஒருத்தன் கிளாஸூக்கு கேமரா எல்லாம் கொண்டு வருவான். அந்த கேமராவை அவன் தொடவே விடமாட்டான். ரொம்ப அலட்டிக் கொள்வான். அதனால் கேமராமீது எனக்கு ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. அதில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு. அப்போதுதான் கேமரா பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது வந்த தமிழ் சினிமாவில் பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ் சிவன் சார் எல்லோரும் வேறு மாதிரி சினிமாவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் ஈர்க்கப்பட்டு ஒளிப்பதிவாளராக ஆகிவிட்டேன். முதலில் கேமரா மேன் ரங்கா சாரிடமும் அடுத்து விஜயலட்சுமி மேமிடமும் வேலை பார்த்தேன். அப்புறம் என் நண்பர்கள் பல பேர் சினிமாவில் இயக்குநராக இருந்தார்கள். அவர்கள் படத்திலும் கொஞ்சம் வேலை பார்த்தேன். 

என்னுடைய முதல் பட வாய்ப்பு இந்தியில்தான் அமைந்தது. அதுவும் அனுராக் காஷ்யப் படத்தில். ரொம்ப கிரியேட்டிவான டைரக்டர். அவருடைய எழுத்துகள் ரொம்ப பிரமாதமாக இருக்கும். வார்த்தை கோப்பதை அழகாகச் செய்வார். என்னுடைய ஃப்ரெண்ட் அனுராக் காஷ்யப்பை வாடா போடானுதான் பேசுவேன். இந்திப் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பாகவே விளம்பர படங்கள், வீடியோஸ் நிறையப் பண்ணிட்டு இருந்தேன். நான் பண்ணிய மியூசிக் ஆல்பம் எல்லாம் ஹிட் ஆச்சு. அந்த நேரத்தில் அனுராக் காஷ்யப், ராம்கோபால் வர்மாவின் 'சத்யா' படத்தில் ரைட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் அனுராக் தனியாக படம் இயக்கத் தொடங்கினார்.

அப்போது என் நண்பர் ஒருத்தர் அனுராக் காஷ்யபிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அனுராக் என் மியூசிக் ஆல்பம் பார்த்துவிட்டு இந்த மாதிரியான ஒரு கேமரா மேன் என் படத்துக்கு வேணும்னு கேட்டிருக்கார். அப்போது என் நண்பர் '' இந்த கேமரா மேன் வேணும்னா சொல்லுங்க, என் நண்பனை வரச் சொல்றேன்'னு சொல்லியிருக்கார். அப்போது நான் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என் ஃப்ரெண்ட் போன் பண்ணினான். விஷயத்தை சொன்ன உடனே கிளம்பி மும்பை வந்து பார்த்தேன்.

நட்டி

அனுராக் காஷ்யப் 'சத்யா' மாதிரியான ஒரு படத்தை எழுதுறார். அதனால் வயசானாவரா இருப்பாருனு நான் நினைத்தேன். அவரும் என்னை ''இந்த மாதிரி ஒளிப்பதிவு செய்றாருனா, அனுபவம் மிக்க வயசான ஒருத்தராகத்தான் இருப்பார்''னு நினைத்திருக்கிறார். எங்க இரண்டு பேருக்கும் ஆச்சர்யம். முதல் சந்திப்பிலேயே கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு பேசினோம். என்னைப் பார்த்து, ''ஆர் யூ  நட்டி''னு கேட்டார். 'ஐ எம் நட்டி.  ஆர் யூ அனுராக் காஷ்யப்''னு கேட்க, அவர் '' ஐ எம் அனுராக்''னு சொல்ல அப்பவே இரண்டு பேரும் நல்ல க்ளோஸாக பேச ஆரம்பித்துவிட்டோம். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருக்கோம். அனுராக் காஷ்யப் முதல் படத்தில் நான் ஒளிப்பதிவாளர். அதன்பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் அவருடன் வேலை பார்த்தேன். 

அனுராக் காஷ்யப்பிற்கு தமிழ் சினிமா தாக்கத்தை நான்தான் உருவாக்கி வைத்தேன். ஏன்னா, தமிழ் சினிமாவைப் பாக்குற வாய்ப்பு அனுராக்கிற்கு அப்போது கிடைக்கவில்லை. 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஒளவையார்', 'புதிய பறவை' பார்க்க சொல்லிக்கொடுத்தேன். ’’பழைய படமெல்லாம் பார். எப்படி வேலை பார்த்து இருக்காங்கனு பார்''னு சொல்வேன். அவன் அந்தப் படமெல்லாம் பார்த்துவிட்டு, 'இது எல்லாம் எந்த வருஷம் படம்''னு கேட்பான். வருஷத்தை சொன்னால், ’வாய்ப்பே இல்லை சூப்பர்’னு சொல்வான். அப்படிதான் தமிழ் சினிமா அவனுக்கு அறிமுகம் ஆச்சு. அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்குத் தமிழில், 'சுப்ரமணியபுரம்', 'பருத்திவீரன்'' படம் எல்லாம் பிடிக்கும். என்னைவிட தமிழ் சினிமாவை இப்போது அவன் அதிகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். அனுராக் காஷ்யப்பிற்கு தமிழில் ரசிகர்களும் அதிகம். 

தமிழில் என்னுடைய முதல் படம் 'யூத்'. விஜய், அப்போதே நல்ல ஃபேமஸான ஆக்டர். படத்தோட டைரக்‌டர் வின்செட் செல்வா, என் நண்பனின் நண்பன். என்னுடைய இந்திப் படம், விளம்பரப் படம் எல்லாம் பார்த்துவிட்டுதான் எனக்கு 'யூத்' பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்திலிருந்துதான் விஜய்யின் நட்பு தொடர்ந்தது. அதற்கு அப்புறம் விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தேன். 'புலி' படத்தில் ஃபுல்லாகவே வேலை பார்த்தேன். 

'புலி' படத்தில் விஜய் நடிக்க காரணம் குழந்தை ரசிகர்களுக்காக மட்டும்தான். அந்தப் படத்தில் பேசுற தவளை, ஆமை, பறவை எல்லாம் வரும். குழந்தைகள் என்றால் விஜய் சாருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்தப் படத்தையே விஜய் பண்ணினார். ஆனால், படத்தின் ப்ரோமோஷனின் போது 'புலி' படத்தை ஒரு ஆக்‌ஷன் படமாகக் காட்டிவிட்டார்கள்'’ என்றவரிடம் ஒளிப்பதிவாளர் எப்படி நடிகனாக மாறினீர்கள் என்று கேட்டோம். 

நட்டி

''எனக்கு நடிக்கணும்னு ஆசை வந்ததே இல்லை. அந்த நேரத்தில் நானும், என் நண்பர்களும் சேர்ந்து 'நாளை'னு ஒரு படம் தயாரித்தோம். படத்தோட டைரக்டரும் எங்கள் ஃப்ரெண்ட்தான். அந்தப் படத்தில் பிரஷாந்த் நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அவருக்குச் சென்னைத் தமிழ் நான்தான் சொல்லிக்கொடுத்தேன். ஃப்ரெண்ட்ஸ் நாங்க எல்லோரும் சேர்ந்து படத்தை தயாரிக்க வேண்டிய சூழலில் பணம் எங்களுக்குக் கிடைக்க நேரம் ஆச்சு. அதனால், அவருடைய கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், என் ஃப்ரெண்ட் என்னையே அவருடைய கேரக்டர் பண்ணச் சொன்னான். 'நீதான் அந்த கேரக்டருக்கு கரெக்டா இருப்ப'னு சொன்னான். ''டேய் சொல்லி கொடுக்குறது வேற, நடிக்குறது வேற டா''னு நான் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. கடைசியில் நானே நடித்துவிட்டேன். அதற்கு அப்புறம் சில படங்களில் நடித்தேன். நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ஒளிப்பதிவாளராக இருக்கும் போது கிடைத்த கேப்பில்தான் படத்தில் நடித்தேன். அப்போது அஜித், விஜய் இரண்டு பேரும் சொன்னார்கள். 'நட்டி, உங்களுக்கு நடிப்பு நல்லா வருது. அதைப் பண்ணுங்க. ஏன், சில நல்ல படமெல்லாம் பண்ணவில்லை'னு கேட்டார்கள். எனக்கு நடிக்க சில நல்ல படங்கள் வந்து நடிக்காமல் விட்டுவிட்டேன். அதற்கு அப்புறம் கவனமாக நடிக்க ஆரம்பித்தேன். அதில் வந்த படம்தான் 'சதுரங்க வேட்டை'. 

'சதுரங்க வேட்டை' படத்தின் கதை கேட்கும் போது ஹிட் அடிக்கும்னு எனக்குத் தெரியும். டைரக்டர் வினோத்திடமே கேட்டேன், 'இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க வினோத்'னு . அவ்வளவு நல்ல ஸ்க்ரிப்ட். ஆனால், படம் இப்படி ப்ளாக் பஸ்டர் அடிக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை'' என்றவரிடம் 'ரிச்சி ' படத்தைப் பற்றி கேட்டோம். 

''ரிச்சி கதையை டைரக்டர் கெளதம் என்னிடம் சொன்னபோது என் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்தது. ஒரு மனுஷன் அவன் வாழ்க்கையில் ஒரு பிரச்னை நடந்து இருக்கும். அவனுடைய நண்பன் இறந்து போயிருப்பான். அந்த சோகத்திலிருந்து விடுபட ஒரு இடத்துக்குப் போவான். அப்போ ஒரு பொண்னைப் பார்ப்பான். அந்தப் பொண்ணை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணுடைய அண்ணன் இவனுக்கு ப்ரெண்ட். ரொம்ப அழகான கதை. 

நிவின் பாலிக்கும் எனக்கும் நிறைய சீக்வென்ஸ் படத்தில் இல்லாமல் இருந்தாலும், படத்தில் எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் இருக்கு. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். இந்தப் படத்தில் எனக்கு ரொமான்ஸ் பாடல் வேற இருக்கு. டைரக்டரிடம் கேட்டேன், ''பெண்கள் கிரேஸ் நிவினுக்கு அதிகமாக இருக்கும். அடிதடிதான் எனக்கு இருக்கும். நீங்க படத்தில் அப்படியே மாத்தி அவருக்கு அடிதடியும், எனக்கு ரொமான்ஸூம் கொடுத்தீங்களே''னு. இதுதான் படத்தில் ஒர்க் அவுட் ஆகும்''னு சொன்னார். 'சதுரங்க வேட்டை' காந்தி பாபுக்குப் பிறகு செல்வா கேரக்டர் நல்லா ரீச் ஆகும். நிவின் பாலி நல்லா தமிழ் பேசுவார். நிறைய தமிழ்ப் படங்கள் பார்க்கிறார். கேஷூவலான ஒரு மனிதர். நல்ல நண்பர். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்குறாங்க. 'பிரேமம்' படம் அவருக்கு நல்ல மரியாதையைக் கொடுத்திருக்கு'' என்றவரிடம் வில்லனாக நடிக்க ஆசை இருக்கா என்றால், ''இதுவரைக்கும் எந்த ஆசையும் இருந்ததில்லை. நல்ல ஸ்க்ரிப்ட் இருந்து வில்லன் ரோல் கேட்டால், ரொம்பப் பிரமாதமாக செய்திருவேன்'' என்று வில்லன் சிரிப்பு சிரிக்கிறார் நடிகர் நட்டி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்