Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..!’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் விரைவில் வெளிவர இருக்கிறது 'டிக் டிக் டிக்'. இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான ஒரு ரோலில் ஜெயம் ரவியின் பையனும் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் ஆர்ட் டைரக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக் களத்தில் வேலை செய்திருக்கும் அனுபவம் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் கலை இயக்குநர் மூர்த்தியிடம் பேசினேன். 

டிக் டிக் டிக்

''என்னுடைய ஊர் உளுந்தூர்பேட்டை பக்கத்தில் ஒரு கிராமம். என் அண்ணன் நன்றாக ஓவியம் வரைவார். அவரைப் பார்த்து சின்ன வயதில் நான் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அதற்கு பிறகு காலேஜ் படித்தேன். காலேஜில் மார்க் கொஞ்சம் குறைவுதான். அந்த நேரத்தில் என் அண்ணன் என்னை சென்னைக்கு அழைத்து, ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். 

அதற்குப் பிறகு காலேஜ் முடித்தவுடன் இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராய் சேரலாம் என்று முயற்சி பண்ணினேன். பட், என்னால் சேர முடியவில்லை. சரண் சாரும் என் காலேஜில் படித்தவர்தான். அந்த நேரத்தில் சரணிடம் கலை இயக்குநராய் மோகன் மகேந்திரன் சார் இருந்தார். நமக்குத் தெரிந்த வழியிலேயே சினிமாக்குள் போய்விடுவோம் என்று உதவி கலை இயக்குநராய் அவரிடம் சேர்ந்தேன். அப்புறம் உதவி இயக்குநர் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். 

சரண் சாரின் எல்லாப் படங்களுக்கும் மோகன் சார்தான் கலை இயக்குநராய் வேலைப் பார்ப்பார். சரண் சாரும், மோகன் சாரும் காலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். மோகன் மகேந்திரன் சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு கலை இயக்குநர் வேலை பிடித்து விட்டது. அதனால் அவருடனே இருந்துவிட்டேன். ''வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்', 'அட்டகாசம்' எனப் பதினெட்டு படங்கள் வேலை பார்த்தேன். 

அதற்குப் பிறகு வீரசம்பா என்கிற கலை இயக்குநர் கூடவும் வேலை பார்த்தேன். 'பூ' படத்தோடு உதவி கலை இயக்குநராய் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு, கலை இயக்குநருக்கு முயற்சி பண்ணினேன். அப்போதுதான் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் வாய்ப்பு வந்தது. 'பூ' படத்தின் தயாரிப்பாளரும், 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் மீரா கதிரவன் சார்தான். அவர் எனக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார். 

டிக் டிக் டிக்

அதற்கு பிறகு நிறைய படங்களுக்கு கலை இயக்குநராய் வேலை பார்த்து வருகிறேன். ''தெகிடி', 'ஆண்டவன் கட்டளை' , 'கிருமி', 'விழித்திரு', 'செம போத ஆகாதே' 'மிருதன்' உள்ளிட்ட  பல படங்களுக்கு வேலை பார்த்து இருக்கிறேன். இயக்குநர் சக்தி சாரின் 'மிருதன்' படத்தில் நான் வேலை பார்த்ததால் 'டிக் டிக் டிக்' படத்துக்கும் என்னையே ஒப்பந்தம் செய்தார்

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் சக்தி என்னிடம் கொடுத்துவிட்டு படித்துப் பார்க்கச் சொன்னார். எப்பவும் சக்தி சாரின் ஸ்க்ரிப்ட் ஸ்பெஷலாக இருக்கும். அதே ஆர்வத்தோடு இந்த ஸ்க்ரிப்டில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தவுடன் பிரம்மிப்பாக இருந்தது. ஸ்க்ரிப்ட் பெரியதாக இருந்தது. இதுவரை நம்ம பார்க்காத, படிக்காத ஒன்றாக இருந்தது. அதனால் என் தேடல் வேற மாதிரி இருந்தது. 

எப்போதும் ஒரு ஆர்ட் டைரக்டருக்கு இந்த மாதிரி வித்தியாசமான படங்கள் அமைந்தால்தான் அவர்களின் திறமை வெளி உலகுக்குத் தெரியும். டைரக்டர் எழுதுகின்ற ஸ்க்ரிப்ட் பொருத்துதான் ஆர்ட் டைரக்டர் வாழ்க்கையே இருக்கு. ஸ்க்ரிப்ட் படித்துப் பார்த்தவுடன் அது சம்பந்தமாக தேட ஆரம்பித்துவிட்டேன். ஏன்னா, டைரக்டரை பார்க்கப் போகும் போதே நிறைய ஆதாரங்களுடன் போகணும்னு எட்டு மாதங்களாக நெட்டில் தேடி, ஸ்க்ரிப்ட் சம்பந்தமாக மொத்த எவிடென்ஸையும் எடுத்தேன். என் ஆர்வத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்ணினார் இயக்குநர். அதற்கப்பறம் செட் போடும் போதும் எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தார்.

முதலில் பெரிய செட்டாக இல்லாமல் விண்வெளி, கோள்கள் என எல்லாவற்றையும் சின்னதாகப் போட்டுப் பார்த்தோம். கேமரா வைத்து டெஸ்ட் பண்ணி பார்த்தோம். டெஸ்ட் ஷூட் ஓகே ஆனதும் ஒரிஜினல் செட்டை ஏ.வி.எம் ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோவில் போட ஆரம்பித்தோம்.

டிக் டிக் டிக்

நெட்டில் பார்த்து விண்வெளி சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்துகொண்டாலும் அதை செட்டாகப் போடுவதற்கு மெட்டீரியல்கள்தான் சவாலாக இருந்தது. அலைந்துதிரிந்து பல மெட்டீரியல்களை வாங்கி செட் போட்டோம். இந்திய விண்வெளி நிலையம் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படம் பார்த்து தெரிஞ்சிக்கலாம். விண்வெளி வீரர்களின் ஹெல்மெட், வாட்டர் பாட்டில், மானிட்டர், ஒயர் என அங்கு என்னெல்லாம் இருக்குமோ அதை படத்திலும் யூஸ் பண்ணினோம். ஒரிஜினல் ஸ்கேல் அளவுக்குதான் செட் எல்லாம் போட்டோம். 

செட் வொர்க் முடித்தவுடன் அதைப் பார்த்த எல்லோரும் ஆச்சர்யம் ஆகிவிட்டார்கள். செட்டைப் பார்க்க தினமும் விசிட் அடித்துவிடுவார் சக்தி சார். எந்தக் குறையும் அதிகமாகச் சொன்னதில்லை. ’நல்லாயிருக்கு சார்’னு பாராட்டினார். ரவி சார் செட் போட்டு முடித்து ஒரு மாதம் கழித்துதான் உள்ளே வந்தார். அவருடைய நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வந்தார். எல்லோரிடமும் 'நான்தான் செட் போட்டேன்’னு விளையாட்டாக சொன்னார். அவருடைய நண்பர்களுக்கும் செட்டைப் பார்த்து ஆச்சர்யம். ரவி சாரும் செம ஹாப்பி. 

டிக் டிக் டிக்படத்தோட தயாரிப்பாளர் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, 'மூர்த்தி நான் தயாரித்த எந்தப் படத்தின் செட்டிற்குள்ளேயும் நான் போனதில்லை. இந்த செட்டுக்குள்ளே வந்து இருக்கணும்னு தோணுது''னு சொன்னார். செட் போட எனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் பட்ஜெட் பார்க்காமல் கொடுப்பார். 

கேமரா மேன் வெங்கடேஷ் 'மிருதன்' படத்திலும் வேலை பார்த்தார். நான் போட்ட செட்டை தத்ரூபமா காட்சிப்படுத்தியிருக்கார். ஜெயம் ரவி சார் பையன் இந்தப் படத்தில் செமையா நடித்து இருக்கார். ஒரு டேக் கூட ரீடேக் போனதில்லை. 

இந்தப் படத்தில் இந்திய விண்வெளி வீரர்களுக்கும், சீன விண்வெளி வீரர்களுக்கும் சண்டை நடக்கும். சீன விண்வெளி நிலையத்தின் செட் போடும் போது அவர்களுடைய மொழிகளில் சில வாக்கியங்கள் தேவைப்பட்டன. அதற்காக ஒருத்தரைப் பிடித்து சில வாக்கியங்களை எழுதி வாங்கினோம். படத்தில் வில்லனாக சீனா சினிமாவைச் சேர்ந்த ஒருவர் நடித்திருக்கார். அவர் நம்ம தமிழ் சினிமாவைப் பார்த்து ரொம்ப பிரம்மித்தார். இந்திய சினிமாவுக்கு இந்தப் படம் பெரிய பெருமையாகத்தான் இருக்கும். 

இந்தப் படத்தில் என்னுடைய உதவியாளராக மட்டும் 25 நபர்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்த வேலையை முடித்து இருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவி லட்சுமி மற்றும் என் செல்லக் குழந்தைகள் ஓவியா, இனியா'' என்று, தான் ஒரு நல்ல கலை இயக்குநர் மட்டுமல்ல ஒரு நல்ல குடும்ப தலைவன் என்பதையும் நிரூபிக்கிறார் மூர்த்தி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்