''சேதுபதி மாமா, தனுஷ் அங்கிள், ராஜ் கிரண் தாத்தா...இவங்க எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்'..!’’ - மாஸ்டர் ராகவன்

'சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி மகனாக அதகளம் செய்த மாஸ்டர் ராகவன், அடுத்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக மாலா அக்காவிடம் ப்ரொபோஸ் செய்து பாப்புலரானார். இதன் பிறகு, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'தூவன்' போன்ற படங்களில் நடித்துமுடித்துவிட்டு, இப்போது யூனிஃபார்ம் போட்டு ஸ்கூல் போய்க்கொண்டிருப்பரைத் தொடர்பு கொண்டு பேசினோம். 

சேதுபதி

’’நான் இப்போ ஆறாவது படிச்சுட்டு இருக்கேன். அப்பா, அம்மா, நான், தம்பினு எங்க வீட்ல நாலு பேர். சினிமான்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும். நான் வீட்ல ஏதாவது டயலாக்கை படத்தில் பேசியிருக்கிற மாதிரி சொல்லிச் சொல்லி பார்ப்பேன். அப்போ ஒரு முறை, 'காஞ்சனா 2' படத்துல 'நீ கெட்டவன்னா நான் கேடு கெட்டவன்...'னு லாரன்ஸ் அங்கிள் சொல்ற மாதிரி நானும் சொல்லிட்டு இருந்தேன். அதை எங்க அப்பா வீடியோ எடுத்தார். அதைப் பார்த்துட்டுதான் 'சேதுபதி' பட டைரக்டர் அருண் அங்கிள் என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். அந்த ஆடிஷன்ல செலக்ட் ஆகி படத்துல நடிச்சுட்டேன். அவ்வளவுதான்...’’ என மழலை தமிழில் தொடர்ந்தவரிடம், 'விஜய் சேதுபதியோட ரெண்டு படத்தில நடிச்சுட்டீங்க. எப்படி இருந்துச்சு?' என்றதற்கு, ’’முதல் நாள் ஷூட்டிங் போனவுடனே, அருண் அங்கிள் தான் சேதுபதி அங்கிள்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்போ, அவர் உடனே எனக்குக் கைக்கொடுத்து என்னைத் தூக்கி என்கிட்ட ஜாலியா பேசினார். அப்புறம், 'நீ என்னை அங்கிள்னு கூப்பிடாத. மாமானு கூப்பிடு'னு அவர் சொன்னதிலிருந்து இப்போ வரை மாமானுதான் கூப்பிட்டுட்டு இருக்கேன். அவர் ஒரு படத்துல கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்து சொன்னதையே சொல்லிட்டே இருப்பாருல்ல. அந்தப் படம் பார்த்ததிலிருந்து நான் சேதுபதி மாமாவோட ஃபேன் ஆகிட்டேன். 'சேதுபதி' படத்துல கடைசியா துப்பாக்கில சுடுற சீன்தான் நான் அதிகமா டேக் வாங்குனேன். எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா சுடும்போது? ஆனா, நான்தான் சேதுபதி பையனாச்சே, அதுனால மனசுல தைரியம் வரவெச்சுட்டு சுட்டுட்டேன். எனக்கு சேதுபதி மாமா ரிமோட் கன்ட்ரோல் கார் எல்லாம் வாங்கித் தந்தாரே'' எனக் கொஞ்சியபடி சொன்னவர், மீண்டும் தொடர்கிறார். '' 'றெக்க' படத்துல நான் குட்டி சேதுபதி மாமாவா வருவேன்ல, அதனால், அவரை அந்தப் படத்துல பார்க்கவே இல்லை. எல்லாரும் கண்ணம்மா பாட்டு நல்லாயிருந்துச்சுன்னு என்கிட்ட சொல்லுவாங்க. ஆனா, உண்மையைச் சொல்லவா, எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கவே பிடிக்காது. ஏன்னா, நான் அதுல கேர்ள் ட்ரஸ் போட்டிருப்பேன் ப்ச்ச்'...'' என நொந்துகொள்கிறார் ராகவன். 

ராகவன்

'' 'ப.பாண்டி ' படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?' என்று கேட்டதற்கு, ''தனுஷ் அங்கிள் என்கூட விளையாடிட்டே இருப்பார். எனக்கு கணக்குப் பாடம் அவர்தான் சொல்லிக்கொடுப்பார். அவர் சொல்லிக்கொடுத்தா ஈஸியா புரிஞ்சிடும் தெரியுமா? அந்தளவுக்கு சூப்பரா சொல்லித்தருவார். ஷூட்டிங் ஸ்பாட்ல ராஜ் கிரண் தாத்தாதான் என்னைப் பாத்துப்பார். எனக்கு ரஜினி சாரைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. தனுஷ் அங்கிள்கிட்ட சொன்னா, கூட்டிட்டுப் போவார்தான். ஆனா, அது மேனர்ஸ் இல்லைனு தோணுச்சு. அதனால, நான் அவர்கிட்ட சொல்லவே இல்லை. ஆனா, ஒரு நாள் ரஜினி சாரைப் பார்த்துப் பேசணும்'' என்றார். 

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் அரவிந்த்சாமி - அமலா பாலுக்குப் பையனா நடிச்சுருக்கீங்களாமே?' என்று கேட்டதற்கு, ''ஆமா, அரவிந்த்சாமி அங்கிள்தான் எனக்கு மேக்கப் போட்டுவிடுவார். அவர் எனக்கு மேக் அப் போட்டா நான் அழகா இருப்பேன். அமலாபால் ஆன்ட்டி என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. இந்தப் படத்துல நானும் நைனிகாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே’’ என்றவரிடம், 'உங்க சேதுபதி மாமாவை எப்போ பார்த்தீங்க?' என்றதற்கு, ’’அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஆனா, நாங்க அடிக்கடி வாட்ஸ் அப்ல சாட் பண்ணுவோம். அவர் என்கிட்ட 'முதல்ல நல்லா படி; அப்புறம் நல்லா நடி'னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்’’ என்று தனக்கும் விஜய் சேதுபதிக்குமான உரையாடலை உற்சாகமாகக் கூறினார். 'உங்களுக்கு என்ன ஆசை?' என்று கேட்டபொழுது, ’’ 'மெர்சல்' படம் பார்த்ததிலிருந்து விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. நான் பெரியவன் ஆனவுடனே, ரஜினி சார், கமல் சார், சேதுபதி மாமா மாதிரி பெரிய ஹீரோ ஆகணும். இதான் ஆசை’’ என்றபடி விடைப்பெற்றார் ராகவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!