``இயக்குநர்களும் நடிகர்களும் தயாரிப்பாளரை அடிமைபோல் நடத்துகிறார்கள்!” நடிகர் செல்வா ஆதங்கம்

‘படம் பார்க்க பரோலில் வருகிறார்!’ என்று கடந்த சில நாள்களாக சென்னை முழுவதும் சுவரொட்டிகள். ‘இது ஏதோ ஒரு பிராண்டுக்கான மார்க்கெட்டிங்’ என்று புரிந்தது. ஆனால், எந்த பிராண்டுக்கான விளம்பரம் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது. இந்த நிலையில் அது, பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் சகோதரரும் நடிகருமான கபாலி செல்வா இயக்கி நடித்துள்ள '12-12-1950' என்ற படத்துக்கான விளம்பரம் என்று தெரிந்தது. 

செல்வா

ரஜினிகாந்தின் பிறந்தநாளை தலைப்பாகக் கொண்ட இந்தப்படம், இந்த மாதம் 8ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநரும் நடிகருமான கபாலி செல்வா பேசுகையில், "இது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படத்தைப் பார்க்க சிறையிலிருந்து பரோல் பெற்று வரும் ஒரு ரசிகனை பற்றிய படம். நான் கடந்த 40 வருடங்களாக ரஜினியின் தீவிர ரசிகன். 27 வருடங்களுக்குமுன் சென்னை கேசினோ தியேட்டர் வாசலிலிருந்த ரஜினி போஸ்டரை ஒருவர் கிழித்துக்கொண்டிருக்கும்பொழுது எனக்கும் அவருக்கும் சிறு கைகலப்பு நடந்தது. இதை மையமாகவைத்து ஒரு கதை செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது இப்போதுதான் நிறைவேறியுள்ளது. 

செல்வா

என்னுடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜான் விஜய், ரமேஷ் திலக் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். எனது மகனும் ஒரு சிறிய கேரக்டர் மூலம் இதில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தை என் சொந்தப் படம் போலத்தான் எடுத்தேன். சொன்ன பட்ஜெட்டைவிட 15 சதவிகிதம் கம்மியாகத்தான் செலவு செய்தேன். இன்றைய சினிமா சூழலில் பெரிய ஹீரோவின் பெயர் இல்லாமல் படம் ரிலீஸ் ஆவது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை அறிவேன். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு சென்றதால்தான் இது சத்தியம் ஆனது.

இன்றைய சில இயக்குநர்களும் நடிகர்களும் தயாரிப்பாளரை அடிமைபோல் நடத்துகிறார்கள். ‘காசு போட்டவர் பாதியில் நிறுத்த மாட்டார்’ என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளரை அலைக்கழிப்பது, சொன்னதைவிட அதிக பட்ஜெட்டில் படத்தைக் கொண்டுபோவது, ஷூட்டிங்குக்குத் தாமதமாக வருவது... என்று தயாரிப்பாளரைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நல்லதுசெய்வதுபோல், குறைந்தபட்சம் சொன்ன பட்ஜெட்டுக்குள்ளாவது படத்தை முடிக்க வேண்டும் என்று இதை முடித்தேன்.

செல்வா

90களில் முதன்முதலில் ரஜினி சாரைப் பார்த்தவுடன் எனக்கு வார்த்தைகள் வராமல் கதறி அழுதேன். ரஜினி சார் என்னை அப்படி கவனிச்சுகிட்டார். இப்போது பல வருடங்கள் கழித்து இந்தப்படத்தைப் பற்றி கூறுவதற்காக சென்றிருந்தேன். ‘என்ன செல்வா வெள்ளதாடிலாம் சூப்பரா இருக்கு’ என்று என்னை வரவேற்றுப் பேசினார். இப்படி எப்போதும் ஒரேமனநிலையில் இருப்பதால்தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு நபரின் மனதையும் ரஜினி சார் காயப்படுத்த மாட்டார். அதையே நானும் பின்பற்றுபவன். காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தம்பி ராமையா கதைப்படி அவர் ஒரு கமல் சார் ரசிகர். ஆனால், படத்தில் கமல் சாரைக் காயப்படுத்துவதுபோல் எதுவும் இருக்காது.

செல்வா

‘பாட்ஷா’ படத்தில் ரஜினி சாருக்குத் தம்பி கேரக்டரில் நடிக்க முதலில் என்னை அணுகினார்கள். கிட்டத்தட்ட ரஜினி சாரை எதிர்த்துப் பேச வேண்டும் என்று கூறியவுடன் நான் பண்ண வேண்டுமா என்று தயங்கினேன். பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை மறுபடியும் அவர்கள் என்னை அழைக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்றார் ‘கபாலி’ செல்வா என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட நடிகரும் இயக்குநருமான செல்வா.

செல்வா

....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!