சிவாஜி முதல் விஜய் சேதுபதி வரை... தமிழ் சினிமா கண்ட அப்பா - மகன் படங்களின் பட்டியல் | list of father and son films in kollywood

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (06/12/2017)

கடைசி தொடர்பு:15:14 (07/12/2017)

சிவாஜி முதல் விஜய் சேதுபதி வரை... தமிழ் சினிமா கண்ட அப்பா - மகன் படங்களின் பட்டியல்

தமிழ் சினிமாவுக்கு நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்... என ஒவ்வொருநாளும் புதுப்புது நபர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அதில்  சாதாரண நபராய் உள்ளேவந்து திறமை, உழைப்பினால் சாதனை நாயகர்களாய் உருமாறியவர்கள் பலர். ஆனால் தந்தை முதலில் திரைக்கு வந்து அதன் பின் அவர்கள் தன் மகனையும் அழைத்து வந்து வாரிசையும் வெற்றி நாயகர்களாக உயர்த்திய உதாரணங்கள் இங்கு ஏராளம். அதேசமயம் இப்படியான அப்பா-மகன் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் மிகச் சொற்பமே. அப்படி தமிழில் வந்த அப்பா-மகன் காம்போ பேக் சினிமாக்கள் சிலவற்றை  பார்ப்போம்.

சிவாஜி கணேசன் - பிரபு :

சிவாஜி - பிரபு

தன் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவை உச்சம் தொட வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் 'சங்கிலி' என்னும் திரைப்படத்தின் மூலம்தான் அவரது மகன் பிரபு சினிமாவுக்கு அறிமுகமானார். ‘மிகப்பெரிய நடிகரின் மகன்’ என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் பிரபு வெற்றிபெற்றார் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து, 'சாதனை', 'வெள்ளை ரோஜா', 'நீதிபதி', 'மிருதங்க சக்ரவர்த்தி', 'பசும்பொன்' உள்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஸ்.ஏ.சந்திரசேகரன் - விஜய்:

சந்திரசேகர் - விஜய்

'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கியவர், 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் தன் மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, 'ரசிகன்', 'தேவா', 'ஒன்ஸ்மோர்' உள்ளிட்ட பல படங்களை தன் மகனை வைத்து இயக்கியவர், 'ப்ரியமுடன்', 'செந்தூரப்பாண்டி', 'சுக்ரன்' ஆகிய படங்களில்  ஓரிரு காட்சிகளில் தன் மகனுடன் சேர்ந்து நடித்தார். 

சிவகுமார் - சூர்யா:

சிவகுமார் - சூர்யா

‘தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்’ என்று அழைக்கப்படும் சிவகுமார், 'பாசப்பறவைகள்', 'சிந்து பைரவி' போன்ற பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சத்திர நடிகராகவும் நடித்து புகழ்பெற்றார். இவரது மகன் சூர்யா, 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இருவரும், 'உயிரிலே கலந்தது' ஒரு படத்தில் மட்டும் அப்பா-மகனாக நடித்துள்ளனர். நல்ல கதை கிடைத்தால், சிவகுமார்-சூர்யா-கார்த்தி மூவரும் சேர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜன் - பிரசாந்த்:

தியாகராஜன் - பிரஷாந்த்

பாரதிராஜவின் 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக தன் பயணத்தை தொடங்கிய தியாகராஜன், பிறகு இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர்... இப்படி ஆல்ரவுண்டராக வலம்வந்தார். இவர் தன் மகன் பிரஷாந்தை வைத்து 'ஆணழகன்', 'மம்பட்டியான்', 'பொன்னர் சங்கர்' ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். 'ஜெய்', 'ஷாக்', 'அடைக்கலம்' ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். 

விஜயகுமார் - அருண் விஜய்:

விஜயகுமார் - அருண் விஜய்

‘ஸ்ரீவள்ளி' எனும் கருப்பு வெள்ளை படத்தில் அறிமுகமாகி பின், ஹீரோ, வில்லன், குணசத்திர நடிகர் என பல கதாப்பாத்திரங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்றவர் விஜயகுமார். அவரின் மகனான அருண் விஜய் 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தன் அப்பாவுடன் சேர்ந்து 'பாண்டவர் பூமி', 'மலை மலை', 'மாஞ்சா வேலு', 'குற்றம் 23' ஆகிய படங்களில் ஒரே ஃப்ரேமில் தோன்றியுள்ளனர்.

சத்யராஜ் -  சிபிராஜ்:

சத்யராஜ் - சிபிராஜ்

ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில் மிரட்டிய சத்யராஜை, காலப்போக்கில் கதாநாயகனாகவும் தமிழ் சினிமா தத்தெடுத்துக்கொண்டது. தற்போது, குணசத்திர நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம்... என பல மொழிகளில் இவர் பரபரப்பாக நடித்து வருகிறார். இவர் தன் மகன் சிபிராஜுடன் சேர்ந்து அதிகப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜோர்', 'வெற்றிவேல் சக்திவேல்', 'கோவை பிரதர்ஸ்', சமீபத்தில் வந்த 'ஜாக்சன் துரை'... என இவர்களின் காம்போ படங்கள் நீள்கின்றன.

டி.ராஜேந்தர் - சிம்பு:

டி.ஆர் - சிம்பு

நடிகர், இயக்குநர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என ஆல்ரவுண்ட் அவதார் நம் டி.ஆர். இவர் தன் 'உறவைக் காத்த கிளி' படத்தில் தன் மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, 'மைதிலி என்னை காதலி', 'என் தங்கை கல்யாணி', 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்த்திரமான தன் மகனுடன் இணைந்து நடித்தார். தற்போது அப்படி சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் சிம்பு நடிக்கும் படங்களில் பாடல் காட்சியிலாவது தோன்றி விடுவார். 

பாக்யராஜ் - சாந்தனு:

பாக்யராஜ் - சாந்தனு

இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்து, 'அந்த ஏழு நாட்கள்', 'மெளன கீதங்கள்', 'முந்தானை முடிச்சு' போன்ற ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் இயக்குநர் பாக்யராஜ். இவரது மகனான சாந்தனுவை 'வேட்டியை மடிச்சு கட்டு' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர், பின்னாளில் தன் மகனுடன் சேர்ந்து 'சித்து +2', 'வாய்மை' ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

விஜயகாந்த் - சண்முகபாண்டியன் :

விஜயகாந்த் - சண்முகபாண்டியன்

‘தூரத்து இடி முழக்கம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், பல வெற்றிப்படங்களில் நடித்தார். பிறகு. நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பின்னாளில் அரசியல் கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், தன் மகன் சண்முகபாண்டியனை 'சகாப்தம்' என்ற படத்தில் அறிமுகப்படுத்தி அதில் சில காட்சிகளில் தன் மகனுடன் சேர்ந்து நடித்து இருந்தார். 

முரளி - அதர்வா: 

முரளி - அதர்வா

‘பூவிலங்கு’ என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான முரளி, பிறகு 'பகல் நிலவு', 'புது வசந்தம்' போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். இவரின் மகன் அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்தில் 'இதயம் ராஜா' என்ற கதாப்பாத்திரத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்தார். அதர்வாவுக்கு முதல் படமாக அமைந்த ‘பாணா காத்தாடி’தான் முரளிக்கு கடைசிப்படமாகவும் அமைந்தது வருத்தமான ஒன்ற.

கார்த்திக் - கெளதம் கார்த்திக்:

கார்த்திக் - கெளதம் கார்த்திக்

'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகமாகி தன் துறுதுறு நடிப்பின் மூலம் 'நவரச நாயகன்' என்று அழைக்கப்படுபவர் கார்த்திக். இவர் தற்போது, குணசத்திரம், வில்லன் நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் மகன் கௌதம், மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது கார்த்திக்கும் கௌதம் கார்த்திக்கும் சேர்ந்து திரு இயக்கத்தில் 'மிஸ்டர் சந்திரமெளலி' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் - சஞ்சய்:

விஜய் - சஞ்சய்

‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமான விஜய் இன்று மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். இவரின் 49வது படமான 'வேட்டைக்காரன்' படத்தில் 'நான் அடிச்சா தாங்கமாட்ட...' என்னும் பாடலில் தன் மகன் சஞ்சய்யுடன் சேர்ந்து ஆடியிருப்பார். தற்போது பள்ளியில் படித்து வரும் சஞ்சய், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கலாம். 

விஜய் சேதுபதி - சூர்யா:

சேதுபதி - சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக போலீஸ் ஸ்டேஷனில் ஹோம் வொர்க் செய்துகொண்டு மொட்டை ராஜேந்திரனிடம் பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்த பையன், வேறுயாருமல்ல, அவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் மீண்டும் தற்போது 'ஜூங்கா' படத்தில் தன் அப்பா விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஜெயம் ரவி - ஆரவ்:

ஜெயம் ரவி - ஆரவ்

‘ஜெயம்’ படத்தில் அறிமுகமானதன் மூலம் ‘ஜெயம்’ ரவி என்று அழைக்கப்படும் ரவி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர்.  இவர் தற்போது சக்தி கெளந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவரின் மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்களைத் தொடர்ந்து விக்ரமமின் மகன் துருவ், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். அதேபோல் சூர்யாவின் மகன் தேவ், தனுஷின் மகன் லிங்கா... என வாரிசு நடிகர்கள் அடுத்தடுத்து சினிமாவில் அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில் இவர்களும் எதிர்காலத்தில் தங்களின் அப்பாவுடன் சேர்ந்து நடிப்பார்கள் என்பது நிச்சயம். தற்போது நடித்துவரும, எதிர்காலத்தில் சேர்ந்து நடிக்கவுள்ள  இந்த அப்பா-மகன் இணைகளை வாழ்த்துவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்