“தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் முறையிடலாம்!” தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வைத் தொடர்ந்து வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதற்கு, திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. 

ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து. சினிமாவுக்கு விதிக்கப்பட்ட 28 சதவிகித வரியைக் குறைக்கவும், தமிழக அரசால் விதிக்கப்பட்ட 30 சதவிகித கேளிக்கை வரி விதிப்பை நீக்கக் கோரியும் பல்வேறு நிலை போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைப்பெற்றன. இதைத்தொடர்ந்து திரையரங்குகளுக்கான  டிக்கெட் விலையைத் தமிழக அரசு சமீபத்தில் முறைப்படுத்தி உயர்த்தியது. அதேவேளையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரையரங்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களை நெறிமுறைப்படுத்தக்கோரி அரசிடம் கோரிக்கை வைக்கபட்டது. அந்தக் கோரிக்கையில் ஒன்றான பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்துதான் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பார்க்கிங் கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. 

பார்க்கிங்

புதிய பார்க்கிங் கட்டண விவரம்:

புதிதாக நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் கட்டணத்தின்படி, மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 10 ரூபாய், நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 15 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாய், பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 5 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கலாம். சைக்கிள்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதுகுறித்து கூறுகையில், “"சினிமாத்துறை பல்வேறு இன்னல்களுக்குள் சிக்கியுள்ள இந்தவேளையில் இந்த அரசாணை ஆறுதலாக உள்ளது. இதுநாள்வரை மால்களில் அதிகபட்சமாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய்வரை பார்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது இந்த பார்க்கிங் கட்டணம் முறைபடுத்தப்பட்டு உள்ளதால் பெருநகரங்களில் உள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்டினால் போதுமானது. இது ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்” என்றார். 

பார்க்கிங்

“மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் மல்டிப்லெக்ஸ் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இந்தவகையின மால்களில் எவ்வகையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்?” என்று தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேட்டோம். அப்போது அவர் கூறுகையில், “எந்த மாலாக இருந்தாலும், 'சி' ஃபார்ம் அடிப்படையில் நாம் போகும் திரையரங்குக்கென பார்க்கிங் ஏரியா ஒதுக்கப்பட்டிருக்கும். அது திரையரங்கு உரிமை பெற கட்டாயமானது. நாம் செல்லும் திரைப்படத்தின் டிக்கெட்டை காட்டி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த அரசாணையை எல்லாத் திரையரங்குகளும் நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டும். மீறி அதிகம் வசூலித்தால் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கேட்டு பயன்பெறுவும் தயங்க வேண்டாம்" என்றார். 

பார்க்கிங்குக்கான இந்தப் புதிய கட்டணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், "கோவையில் தொடரப்பட்ட வழக்கின் மேல் "இருபது வருடங்களுக்குமுன் நிர்ணயிக்கப்பட்ட பார்கிங் கட்டணத்தை தமிழக அரசு மறுநிர்ணயம் செய்ய வேண்டும்" எனத் தமிழக அரசை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து எங்கள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் மூலமாக ஆலோசனைகளை முன்வைத்தோம். அரசு இடமான விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் ஒரு மணி நேரத்துக்கென வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் தனியார் நிலங்களில் நடத்தப்படும் திரையரங்க பார்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். 

உதாரணத்திற்கு, மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிர்ணயம் ஒரு மணி நேரத்திற்காகவா, ஒரு காட்சி நேரத்திற்காகவா, ஒரு நாள் என்ற கணக்குக்கா? நாங்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழி முறைகள் குறிப்பிடப்படவில்லை. 

பார்க்கிங்

அப்படியே தற்காலிகமாக இதைப் பின்பற்றலாம் என நினைத்தால் டிசம்பர் 1 முதல் அமலாகிறது என முன்தேதியிட்டு குறிப்பிடப்பட்டு தாமதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால், ஆறு நாள்கள் அதிகம் வசூலிக்கப்பட்ட பார்க்கிங் கட்டணத்தை திருப்பியளிக்கும்படி யாரேனும் கேட்டால் என்ன செய்வது? இப்படிப் பல கேள்விகளை அரசிடம் கேட்டு தெளிவுபெற வேண்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளரைச் சந்திக்க சங்கத்தின் சார்பில் முடிவெடுத்துள்ளோம்” என்றார். 

"பார்க்கிங்காக சில ஆயிரம் சதுரடி தொடங்கி ஏக்கர் கணக்கில் இதற்காக திரையரங்குகள் ஒதுக்கீடு செய்துள்ளன. இதற்காக வேலையாட்கள் முதல் முதலீடு வரை அனைத்தும் அதிகம். எனவே ஒரு திரையரங்கம் எந்தப் பகுதியில் உள்ளது, அந்தப் பகுதின் ரியல் எஸ்டேட் மதிப்பு, அரசின் கைட்லைன் மதிப்பு... போன்றவற்றையும் ஆராய்வது அவசியமாக உள்ளது. அதன்படியே தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சென்னையின் மத்தியப் பகுதியில் இருக்கும் நிலமதிப்பு வேறு, சென்னையின் கடைகோடி பகுதியான அம்பத்தூரின் நிலமதிப்பு வேறு. இந்த இரண்டு இடத்திலும் உள்ள திரையரங்களுக்கு ஒரே கட்டணம் என்பது சரியானதாகத் தெரியவில்லை. ஆனால் இதே அடிப்படையில் இன்னும் பல டவுன்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ரூபாயே வசூலிக்கப்பட்டு வருகிறது. திரையரங்க நிர்வாகி என்ற வகையில் இந்தக் கட்டண நிர்ணயம் ஏற்கத்தக்கதாக இல்லை” என்கிறார் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கச் செயல் இயக்குநர் நிகிலேஷ் சூர்யா.

எதுஎப்படியோ, சென்னை போன்ற பெருநகரங்களில் சினிமா பார்க்கும் நடுத்தர வசதி படைத்த ரசிகர்கள் இந்த அரசாணையை வெகுவாக வரவேற்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்களில் அவர்கள் இடும் பின்னூட்டங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!