Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"விஜய் - அஜித்தின் பாராட்டு... விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..!" நிவின் பாலி ஷேரிங்ஸ்

ரிச்சி

’’இன்ஜினீயரிங் முடிச்சிட்டு இரண்டு வருஷம் இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கே தோணுச்சு நம்ம கேரியர் இது இல்லைனு. அதனால் வேலையை விட்டுட்டு ஒன்றை வருஷம் சும்மாவே இருந்தேன். அப்போது என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சில பேர் சினிமாவுக்குள் வருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என ஒவ்வொரு ஏரியாவிலும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நிறைய நேரத்தை அந்த டீம்முடன் நான் செலவு செய்வேன். அப்போது, எனக்கு சினிமாவில் முயற்சி பண்ணலாம்னு தோன்றியது. அந்த நேரத்தில் இயக்குநர் வினித் படத்துக்கு ஆடிஷன் நடந்தது. நான் என்னுடைய இரண்டு நல்ல போட்டோவை அனுப்பி வைத்தேன். வினித் படத்துக்கு ஐந்து பேர் தேவைப்பட்டார்கள், நான்கு பேர் கிடைத்துவிட்டார்கள். ஒருவர்  கிடைக்கவில்லை. மீடியம் ஹைட் அண்டு வெயிட்டில், கொஞ்சம் அழகாக  இருக்கின்ற ஒரு பையன் தேவைப்பட்டான். அதுமாதிரி எந்தப் பையன் கிடைக்குறானு அவங்க தேடிக்கிட்டு இருந்த போது நான் என்னுடைய ஒரு போட்டோவை அனுப்பிவைத்தேன். என் போட்டோவைப் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு கூப்பிட்டார்கள். அப்படியே அவருடைய படத்தில் மலையாளத்தில் அறிமுகமானேன்’’ என்று தன்னுடைய அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் நிவின் பாலி. 

நிவின் பாலி

நிவினுக்கு சென்னை எவ்வளவு ஸ்பெஷல்?

’’சினிமாவில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கும்போது வீக் எண்ட் ஆனால் சென்னை வந்து விடுவேன். அப்போது 'நேரம்' டைரக்டர் அல்போன்ஸ் நுங்கம்பாக்கம் ஏரியாவில் தங்கியிருந்தார். நானும், அவருடன்தான்  வந்து தங்கினேன். அப்போது சென்னையில் டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். அந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் ஷார்ட் ஃபிலிம் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் அல்போன்ஸை பார்க்க நுங்கம்பாக்கம் ரூமுக்கு வருவார். அப்போது அவருடன் பேசிப் பழகி இருக்கிறேன். அப்போது ஆக்டர் பாபி சிம்ஹாவை மீட் பண்ணி இருக்கிறேன். நானும் பாபி எல்லோரும் சேர்ந்து 'எலி' அப்படிங்குற ஷார்ட் ஃபிலிமில் நடித்து இருக்கிறோம். 'நேரம்' படம் வருவதற்கு முன்பு அந்த நேரத்தில் டைரக்டர் நலன் குமரசாமி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பட், பார்த்துப் பழகியது இல்லை. அப்போது எல்லாம் தமிழில் ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. 

நான் மலையாளத்தில் நடிக்கப் போனதுக்கு அப்பறமும் தமிழில் எதாவது படம் பண்ணணும்னு தோணும். அப்போதுதான் 'நேரம்' படம் எனக்கு தமிழில் அமைந்தது. 'நேரம்' படம் தமிழ் அண்ட் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆச்சு. 'நேரம் ' படம் ரிலீஸானப்போது எனக்கு ஒரு சின்ன பேனர் சென்னையில் இருந்தது. அதைப் பார்க்கும்போது ஹாப்பியாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு சினிமாவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நாங்க எல்லோரும் முயற்சிதான் பண்ணிட்டுதான் இருந்தோம். அந்த நேரத்தில் தமிழில் ஒரு படம் பண்ணது சந்தோஷமாக இருந்தது. என் கனவு நிறைவேறிய மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. இப்போது 'ரிச்சி' படம் ரிலீஸாகப் போது, நிறைய பேருக்கு என்னை தெரிந்து இருக்கிறது. படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் நல்ல ரீச் ஆகியிருக்கு. இது எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.’’

 நிவின் பாலி

தமிழில் 'நேரம்' படத்துக்கும் 'ரிச்சி' படத்துக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்? 

``இடையில் நிறைய தமிழ் ஃபிலிம் ஸ்டோரி கேட்டேன். கதையும் பிடித்திருந்தது. சரி, ஓகே பண்ணலாம்னு நினைத்தப்போது டைம் கிடைக்கவில்லை. மலையாளத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் தமிழில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. 

அதற்கு அப்புறம்தான் 'ரிச்சி' படத்தின் கதை என்னிடம் வந்தது. நானும் டைரக்டர் கெளதமும் கதையைப் பற்றி டிஸ்கஸ் பண்ணினோம்,. இது கன்னட படம் ஒன்றின் ரீமேக். பட், கன்னட படத்தின் ஸ்க்ரிப்ட் மாதிரி 'ரிச்சி' படத்தின் ஸ்க்ரிப்ட் இருக்காது. முழுவதுமாக மாத்தியாச்சு. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கும். படத்தில் வரும் கேரக்டர் மற்றும் இன்டர்வெல் என எல்லோமே வித்தியாசமாக இருக்கும். கன்னடப் படத்தைப் பார்த்து இந்தப் படத்தை பார்த்தால்கூட இரண்டு படமும் முழுவதுமாக வேற படமாகதான் தெரியும். 'ரிச்சி' படத்தின் டைரக்டர் கெளதமின் ஸ்க்ரிப்டாகத்தான் இந்தப் படம் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.’’ 

'ரிச்சி' படத்தின் கதையை டைரக்டர் உங்களிடம் சொல்வதற்கு முன்னாடி பேய் படம் ஒன்றின் ஸ்டோரி உங்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டோமே?

’’பேய் ஸ்டோரி கிடையாது. அப்பா, மகன் ஸ்டோரி சொன்னார். அந்த நேரத்தில் பட்ஜெட் காரணமாக அந்த ஸ்டோரியை பண்ண முடியவில்லை. அதற்கு அப்புறம்தான் 'ரிச்சி' படத்தின் ஸ்டோரி கேட்டேன். கதை பிடித்திருந்தது எல்லாம் ஓகேவாக இருந்தது. அதனால் 'ரிச்சி' படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டோம்.’’ 

'தட்டத்தின் மறையத்து' படத்தில் வருகின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையில் எதாவது  ஒரு பொண்ணை உருகி உருகி காதலித்து இருக்கீங்களா?

’’ஒரு ஆளை மட்டும்தான் அந்த மாதிரி லவ் பண்ணினேன். அவங்க என்னுடைய வீட்டில் மனைவியாக இருக்காங்க. இப்போது இரண்டு குழந்தைகள் எங்களுக்கு இருக்கு. நான் சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் இருந்து என்னுடன் இருக்காங்க. எனக்கு திருமணம் முடிந்த வருஷமும், சினிமாவில் நான் அறிமுகமான வருஷமும்  ஒரே வருஷம். படம் ரிலீஸூக்கு முன்பே எங்களுக்கு நிச்சயம் எல்லாம் முடிந்துவிட்டது. அவங்க எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கோ அதை ஃபாலோ பண்ணுங்கனு சொன்னாங்க. அவங்க எனக்கு பிரஷர் கொடுத்திருந்தால் இப்போது எதாவது ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். அவங்க என் மனைவியாக கிடைத்தது என் லக். எல்லோருக்கும் இது மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்தால் நன்றாக இருக்கும்.

ரிச்சி

என் வீட்டில் இருக்குறவங்களுக்கு 'பிரேமம்' படம் ரொம்பப் பிடிக்கும். அதனால் அந்தப் படத்தில் வருகின்ற மாதிரி ப்ளாக் ஷர்ட், வேட்டி அணிந்துகொண்டு ஓணம் பண்டிகையின்போது நானும் என் பையனும் நிற்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்தாங்க. அதை பேஸ்புக்கில் போட்டோம். நீங்கள் எல்லோரும் பார்த்து இருப்பீங்க அந்த போட்டோ நல்ல ஃபேமஸ் ஆயிருச்சு.’’

உங்களுடைய நெருங்கிய நண்பர் விக்ரம் பற்றி சொல்லுங்க?

’’தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவனாக நான் இருந்தாலும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் என்னை நல்லா வெல்கம் பண்ணுறாங்க. நிறைய சப்போர்ட் பண்ணுறாங்க. அதில் விக்ரம் சாரும் ஒருவர். 

விக்ரம் சாரை அவருடைய பிறந்த நாள் அன்னைக்கு பார்த்தேன். நான் மாடியில் நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து கீழே வாங்கனு கூப்பிட்டார். 'பிரேமம்' அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ''இன்னைக்கு என்னுடைய பெர்த் டே தான். பட், நான் உங்களுக்கு ஒரு சாங் டெடிகேட் பண்ணுறேன்''னு சொல்லி, மலரே பாடல் பாடி காட்டினார். எனக்கு அந்த டைம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிவகார்த்திகேயன், தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி என எல்லோரும் என்னிடம் நல்லா பழகுவாங்க. சென்னைக்கு நான் வரும்போது என்னுடன் வெளியே வருவார்கள். நல்ல நட்பு எனக்கு தமிழ் சினிமாவில் இருக்கிறது.’’

'பெங்களூரு டேஸ்' ஃப்ரெண்ட்ஷிப் பற்றி சொல்லுங்க?

ரிச்சி

’’பெங்களூரு டேஸ் ஷூட்டிங்கின்போதுதான் எனக்கு துல்கர், பஹத் பழக்கம். அப்போதிலிருந்தே எங்களுடைய நட்பு ஆரம்பமாகிருச்சு. 90 நாள்கள் பெங்களூரு டேஸ் ஷூட்டிங் போச்சு. அந்த நாள்கள் முழுவதும் நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருந்தோம். அதற்கு அப்புறம் என்னுடைய ஃபிலிம் ரீலிஸ் ஆகுறபோது அவர்கள் பார்த்துவிட்டு போன் பண்ணி விஷ் பண்ணுவார்கள். நானும் விஷ் பண்ணுவேன். அப்படிதான் எங்கள் நட்பு தற்போது சென்றுகொண்டிருக்கிறது.’’ 

'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா, ஜோதிகா வெளியிட்டார்களே?

’’ 'காயங்குளம் கொச்சுண்ணி' டைரக்டர் ரோஷன் சாருக்கு ஜோதிகா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரே ஃபேமிலி மாதிரி. 36 வயதினிலே படத்துக்குப் பிறகு அவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். சூர்யா, ஜோதிகா இரண்டு பேரும் சிம்பிளாக படத்தின் செட்டுக்கு வந்தாங்க. ரொம்ப சைலன்ட்டாக செட்டை பார்த்துவிட்டு போகலாம் அப்படிங்குற மாதிரி வந்தாங்க.  சூர்யா சார் எல்லாம் செட்டுக்கு வருவது பெரிய விஷயம் இல்லையா. அதனால், நாங்கள் அனைவரும் அவங்களுக்கு பெரிய வெல்கம் கொடுத்தோம்.  

ரிச்சி

ரோஷன் சார் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவங்க ரெண்டு பேரும் வெளியிட்டது ரொம்ப ஹாப்பியாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் அவங்க செட்டில் இருந்தார்கள். 'ரிச்சி' படத்தின் ட்ரெய்லர் அவங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தாகச் சொன்னார்கள். ரொம்ப ஹாப்பி.’’

'சகாவு' படம் பண்ணியதற்கு என்ன காரணம்?

இந்தப் படத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தோழராக நான் நடித்திருந்தேன். எனக்கு கம்யூனிஸ்ட் தோழராக நடிக்க வேண்டும்கிற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. நல்ல ஸ்க்ரிப்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். 'சகாவு' படம் கம்யூனிஷத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை காட்டியது. பெர்ஃபார்மென்ஸ் பண்ணுவதற்கும் நல்ல இடம் இருந்தது. உடனே ஓகே சொல்லி நடித்து விட்டேன்.’’

ரிச்சி

'பிரேமம்' தெலுங்கு ரீமேக் பார்த்தீங்களா?

’’இல்லை, பார்க்கவில்லை. பிரேமம் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் காலேஜ் ஸ்டூடண்டாக நான் நடித்த பார்ட் ரொம்பப் பிடிக்கும். பட், தெலுங்கு பிரேமம் பார்க்கவில்லை. அதில் இருக்கும் ஒரே ஒரு பாடல் மட்டும் பார்த்தேன்.’’

விஜய், அஜித் இவங்க இரண்டு பேரில் யாருடைய படத்தில் நடிக்க ஆசை?

’’ரொம்ப கஷ்டமான கேள்வியாக இருக்கு. அவங்க ரெண்டு பேருமே பெரிய ஸ்டார்ஸ். இவங்க இரண்டு பேருக்கும் கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அஜித், விஜய் சார் படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். இவங்க ரெண்டு பேரும் 'பிரேமம்' படங்கள் பார்த்துவிட்டு என்னை சென்னைக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டினார்கள். அது எல்லாம் பெரிய விஷயம்தானே. எத்தனையோ படங்கள் ஹிட் அடிக்குது. அதில் என்னை கூப்பிட்டு பாராட்டியதை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியவில்லை. அதனால், இரண்டு பேரில் யாருடைய படமாக இருந்தாலும் உடனே ஓகே சொல்லிவிடுவேன்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்