Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``‘சாரி தம்ஸ்... தெரியாம அடிச்சுட்டேன்'னு தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டேன்..!'' - பரணி #10YearsOfKalloori

கடந்த 2000-ம் ஆண்டு, கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் இருந்த மாணவியர் 44 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேரும் ஜன்னல் வழியாகவும், கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர். கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்தும், நட்பு, காதல், வாழ்க்கையை பத்தின புரிதல் எனக் கல்லூரி காலத்தில் நிகழும் சம்பவங்களை வைத்தும் கடந்த 2007ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் 'கல்லூரி'. இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி ஷங்கர் தயாரித்திருந்தார்.

பரணி நடித்த கல்லூரி படம்

தமிழில் தமன்னாவிற்கு இது மூன்றாவது படம். அறிமுக நாயகர்களாக அகில், பரணி ஆகியோர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தனர். கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்கள், தங்களின் கல்லூரிப்படிப்பையும் ஒன்றாகவே தொடர்கிறார்கள். எந்தச் சூழலிலும் நட்பை விட்டுக்கொடுக்காத இந்த நண்பர்கள் கூட்டத்தில் தன் அன்னையின் பிரிவு தாங்காது தவிக்கும் தமன்னாவையும் அரவணைத்துச் சேர்த்துக்கொள்கிறார்கள். தலைசிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தும் போகாமல் நண்பர்களுக்காக அவர்களுடனே படிக்கும் தமன்னாவை அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. 'எல்லாருக்கும் ஒவ்வொரு வகையில் துன்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நண்பர்களுடன் இருந்தால் அது முற்றிலும் மறந்துவிடும்' என்பதை இந்தப் படத்தில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குநர். கதாநாயகன் அகிலுக்குத் தமன்னா மீது இருப்பது நட்பா காதலா என்ற குழப்பம் நிலவி, இறுதியில் தெளிவாகிவிடுகிறார். ஆனால், இதே குழப்பம் தமன்னாவிற்கும் ஏற்படுகிறது.

கல்லூரி படம்

அப்போது, பேக்ரவுண்டில் ஒலிக்கும் இசைஞானியின் 'உன் பார்வையில் ஓராயிரம்...' பாடலே இருவருக்கிடையில் காதல் மறைந்திருந்து பார்க்கிறது என்பதை மிக நேர்த்தியாகக் கையாண்டு இருப்பார் பாலாஜி சக்திவேல். கல்விச்சுற்றுலா செல்கையில், தன் தோழியிடம் மட்டும் அகிலின் மீது உள்ள காதலை தமன்னா சொல்ல, அதனை மறைந்திருந்த இன்னொரு தோழி மூலமாக மற்ற நண்பர்களுக்கும் தெரியவருகிறது. அப்போது, திடீரென, கட்சிக்காரர்கள் வந்து அவர்களது தலைவரை கைது செய்ததாக, ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதில், இவர்களின் பேருந்தை கொழுத்திவிடுகிறார்கள். அப்போது, கடைசி சீட்டில் இருந்ததால், வெளியே வருவதற்குள் உள்ளேயே சிக்கி அவர்களின் அராஜக செயலுக்கு பலியாகிவிடுகிறார்கள் மூன்று மாணவிகள். வெளியே இவர்களது உடலை கொண்டுவரும்போது, பார்ப்பவர்கள் அனைவரின் மனமும் கனத்து நின்று, தர்மபுரி சம்பவத்தில் இறந்த கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற கல்லூரி மாணவிகளை ஷோபனா, கயல், ஆதிலட்சுமி என்ற கதாபாத்திரங்கள் நினைவுப்படுத்துகின்றன. 'வெற்றி பெறுவோம் ஓர் நாள்... நம்பிக்கையுடன் நல்லுணர்வுடன் வெற்றி பெறுவோம் ஓர் நாள்...' என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் மூலம் வருடம்தோறும் அந்த நாளில் இறந்த இடத்திற்குச் சென்று, இவர்களது கல்லூரி நண்பர்கள் அஞ்சலி செலுத்துவதாக படத்தை முடித்திருப்பார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். 

கல்லூரி படம்

இந்தப் படத்தில் அறிமுகமாகி, இன்று மக்களுக்கு பரிட்சயமான நடிகர் பரணியிடம் இந்தப் படத்தில் பயணித்த அனுபவம் பற்றி கேட்டோம். "உதவி இயக்குநராகச் சேர்ந்து, அப்புறம் இயக்குநராகணும்னு தான் மதுரையில இருந்து சென்னைக்கு வந்தேன். என் அத்தை ரேவதி, ஷங்கர் சாரோட ஆடிட்டர் ஆஃபீஸ்ல வேலைப்பார்க்குறாங்க. அவங்கதான் ஷங்கர் சார் அசிஸ்டென்ட் டைரக்டர் பாலாஜி சக்திவேல் படம் பண்றார்னு சொன்னாங்க. சரி அவர்கிட்ட போலாம்னு நினைச்சுப் போனா, அங்க நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு பெரிய க்யூவே நின்னுட்டு இருந்துச்சு. அப்போ, நான் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக வாய்ப்பு கேட்டு வந்தேன்னு சொன்னேன்.

அப்போ, பாலாஜி சக்திவேல் சாரோட அசோஸியேட் டைரக்டர் சிவகுமார் (கல்லூரி படத்தில் ப்ரொஃபெசராக வருபவர்), 'இங்கே நடிக்கதான் ஆள் எடுக்குறாங்க. நீ அப்புறம் வா'னு சொல்லிட்டார். நானும் மாடியில இருந்து கீழே வரும்போது, அவர், 'இந்த மதுரைக்காரங்களே இப்படித்தான். வாய் தான், மத்தது ஒன்னுமில்லை'னு சொல்லிட்டார். உடனே, 'ஏன் இப்படி பேசுறீங்க' னு கேட்கும்போது, நீ அசிஸ்டென்ட் டைரக்டராகும்னு தானே வந்த? ஏதாவது நீ ரெடி பண்ணதை பண்ணிக்காட்டு'னு சொன்னபோது, 'பராசக்தி' படத்துல சிவாஜி சார் பேசுற வசனத்தை லவ் ஃபெய்லியர் ஆன பையன் சொல்ற மாதிரி பேசிக்காட்டுனேன். அதை ரெக்கார்டு பண்ணிட்டு பாலாஜி சார்கிட்ட போட்டு காமிச்சுயிருக்காங்க. அவர் ஓகே சொல்லிட்டார். அதுக்காக, ஒன்றரை வருஷம் டெஸ்ட் ஷூட் வெச்சாங்க. அதுல நான் செலக்டாகி படத்துல நடிக்க ஓகே பண்ணிட்டாங்க' என்று படத்துக்குள் வந்த கதையைப் பகிர்கிறார்.

கல்லூரி படம்

'அங்கபோனா, முதல் நாள் எல்லாமே அதிக டேக் வாங்குனேன். அவர் என்னை கூல் பண்ணி, என்னை ஜாலியா வேலை வாங்குனார். அந்த கேரக்டரும் ஜாலியான கேரக்டர்ங்கிறனால எனக்குச் சீக்கிரம் செட் ஆகிடுச்சு. படத்தோட ஷூட்டிங் 55 நாள் நடந்துச்சு. அங்க என் டைரக்டர் பாலாஜி சக்திவேல் சார் சொல்லிக்கொடுத்த விஷயங்கள்தான் இன்னும் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. அந்தப் படத்தோட அனுபவம் மறக்கவே முடியாது. தமன்னா இப்போ பெரிய இடத்துக்குப் போய் கலக்கிட்டு இருக்காங்க. அவங்க என்னை எங்க பார்த்தாலும் இன்னைக்கும் 'ரமேஷ்'னு அந்தப் பட கேரக்டரைச் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. ஒரு முறை நான் இன்னொருத்தரை அடிச்சு இழுக்கிறதுதான் சீன். அப்போ நான் மாத்தி தமன்னா தோள்ல அடிச்சுட்டேன். அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர் எல்லாரும் 'படத்தில இருந்து உன்னை தூக்கப்போறாங்க. அவ்வளவுதான்'னு சொல்லி என்னை பயமுறுத்திட்டாங்க. அதை நினைச்சுப்பார்த்தா இன்னும் பயமா தான் இருக்கும். அப்புறம், நான் தமன்னாகிட்ட போய், 'சாரி தம்ஸ்... தெரியாம மாத்தி அடிச்சுட்டேன்'னு சொன்னேன். அவங்களும் 'இல்லை ரமேஷ். நான்தான் தப்பா நின்னுட்டேன். பரவாயில்லை'னு பெருந்தன்மையா நடந்துக்கிட்டாங்க.

அந்தப் படத்துல நண்பர்களாக நடிச்ச எல்லாரும் இன்னும் தொடர்புல இருக்கோம். அதுல என்கூட நடிச்ச பசங்க எல்லாரும் சினிமாவுல ஜெயிக்கப்போற இடத்துல இருக்காங்க. அதுல கடைசி சீன், அந்த பஸ் எரியுற சீன்ல எங்க நிறைய பேருக்கு அடி பட்டிடுச்சு. கேமராமேன் செழியன் சாருக்குத்தான் ரொம்ப அடிபட்டுச்சு. அந்த சீன் ஷூட் பண்ணும்போது, ரொம்ப சவாலாவும் இருந்துச்சு" என்றவர், ‘’ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். 'கல்லூரி' பட ஷூட்ல ஷங்கர் சார் வந்திருந்தபோது, நான், 'சார் எனக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு போலீஸ் வேலை கிடைச்சும் நான் சினிமா மேல இருக்கிற ஆசையில இங்க வந்துட்டேன் சார்'னு சொன்னேன்.

அப்போ, 'கவலைப்படாதிங்க. நீங்க இன்னொருத்தருக்கு எட்டாயிரம் ரூபாய் தர அளவுக்கு வளருவீங்க'னு சொன்னார். இப்போ அவர் சொன்ன மாதிரி நல்லாயிருக்கேன். நான் நடிச்ச 'கன்னக்கோல்' படத்தை 'கல்லூரி' வெளிவந்து பத்து வருஷமாகும்போது, ரிலீஸான நல்லாயிருக்கும்னு நினைச்சேன். ஆனா, தேதி தள்ளிப்போயிடுச்சு. நான் இப்போ இந்தளவுக்கு இருக்கேன்னு சொன்னா, பாலாஜி சக்திவேல் சார், ஷங்கர் சார், என் அண்ணன் சமுத்திரக்கனி இவங்கதான் காரணம். எங்க டீமை ஷங்கர் சார் கூப்பிட்டு பேசி, எங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கணும்கிறதை என் அன்பு கட்டளையா வெச்சுக்குறேன்" என்று 'கல்லூரி' படத்தின் நினைவை சுமந்தபடி விடைப்பெற்றார் பரணி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்